பேசும் படம் - 13: கர்ஜிக்கும் சிங்கம்

By பி.எம்.சுதிர்

இங்கிலாந்து அரசியல்வாதிகளில் மிகவும் புகழ்பெற்றவர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரில் உலக மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட சர்ச்சிலை, யூசுப் கர்ஷ் என்ற புகைப்படக்காரர் எடுத்த அரிய படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

1941-ல் கனடா நாட்டின் தலைநகரான ஒட்டாவாவுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் வந்திருந்தார். 2-ம் உலகப் போரில் தங்களுக்கு உதவும் கனடா அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்காக வந்த அவரை பிரத்யேகமாகப் படம் எடுத்துத்தர யூசுப் கர்ஷை கனடா நாட்டு பிரதமரான மெக்கன்சி கிங் (Mackenzie King) அழைத்திருந்தார். கனடா பாராளுமன்றத்தில் சர்ச்சில் பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கிருந்த சபாநாயகரின் அறையில் கேமரா மற்றும் லைட்டிங்குகளைத் தயார் செய்து அவருக்காகக் காத்திருந்தார் கர்ஷ்.

சர்ச்சில் பேசி முடித்ததும், அவருக்காகப் புகைப்படக்காரர் காத்திருப்பது தெரிவிக்கப்பட்டது. ஆனால், பரபரப்பான தனது நேரத்தை புகைப்படம் எடுத்து வீணடிக்க சர்ச்சில் விரும்பவில்லை. இருந்தாலும், அங்கிருந்தவர்

களின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் புகைப்படம் எடுக்க 2 நிமிடங்களை மட்டும் ஒதுக்கினார் சர்ச்சில். தனக்காக சர்ச்சில் 2 நிமிடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளார் என்ற தகவல் கர்ஷுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இருப்பினும் கிடைத்த நேரத்துக்குள் சர்ச்சிலை சிறப்பாகப் படமெடுக்க விரும்பினார்.

 எந்நேரமும் தன்னிடம் இருந்து விலகாமல் இருக்கும் சுருட்டைப் பிடித்தவாறே புகைப்படம் எடுக்கும் இடத்துக்கு வந்த சர்ச்சில், அதைக் கீழே போடாமலேயே போட்டோவுக்கு போஸ் கொடுக்கத் தயாரானார். ஆனால், கர்ஷுக்கோ அவரை சுருட்டு இல்லாமல் படமெடுக்க ஆசை. அவராக சுருட்டைக் கீழே போடுவாரா என்று காத்திருந்தார் கர்ஷ். சர்ச்சிலோ சுருட்டைக் கீழே போடுவதாக இல்லை.

 பொறுமை இழந்த கர்ஷ், சர்ச்சிலுக்கு அருகில் சென்றார். “என்னை மன்னிக்க வேண்டும்” என்று அவர் காதருகே சொல்லிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் சர்ச்சிலின் உதடுகளில் இருந்த சுருட்டைப் பிடுங்கி எறிந்தார். ஒரு சாதாரண புகைப்படக்காரர் தன்னிடம் இப்படி நடந்துகொண்டதும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சர்ச்சில். அந்த அதிர்ச்சி கோபமாய் மாறி அவர் வெறித்துப் பார்க்க, கடகடவென அவரைப் படம் பிடித்தார் கர்ஷ்.

வழக்கமாக சர்ச்சிலின் படங்களில் அவரது சுருட்டும் இருக்கும். இந்நிலையில் சுருட்டு இல்லாமல் வந்த இப்படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும், இரண்டாம் உலகப் போரின் சூழ்நிலைக்கு பொருந்தும் நிலையில் இப்படம் இருந்ததால் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது. உலகிலேயே அதிக அளவில் பிரதி எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற புகழையும் இப்படம் பெற்றது.

இந்தப் புகைப்படத்தை எடுத்ததைப் பற்றி கூறும் கர்ஷ், “ஏதோ ஒரு துணிச்சலில் சர்ச்சிலின் சுருட்டைப் பிடுங்கி தூக்கிப் போட்டாலும், சர்ச்சில் திட்டுவாரோ என்று பயந்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறாக, என்னிடம் வந்து, ‘ஒரு கர்ஜிக்கும் சிங்கத்தைக்கூட புகைப்படம் எடுப்பதற்காக உன்னால் அசையாமல் நிற்கவைக்க முடியும்’ என்று பாராட்டினார். அதைக் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதைத்தொடர்ந்து அந்தப் படத்துக்கு ‘கர்ஜிக்கும் சிங்கம்’ எனப் பெயரிட்டேன்” என்கிறார்.

யூசுப் கர்ஷ்

20-ம் நூற்றாண்டின் தலைவர்கள் பலரையும் மிகச்சிறந்த கோணத்தில் படம்பிடித்து உலகப் புகழ் பெற்றவர் யூசுப் கர்ஷ் (Yousuf   karsh). போர்ட்ரெயிட் (portrait) ரக புகைப்படங்களை எடுப்பதில் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞராக இவர் விளங்கினார். தற்போதைய துருக்கி நாட்டின் ஒரு பகுதியான மார்டின் நகரில் 1908-ம்  ஆண்டில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

இளம் வயதில், கல்விகற்க கனடாவுக்கு அனுப்பப்பட்ட இவர், அங்கு கல்வியுடன் சேர்த்து தனது மாமாவான ஜார்ஜ் நகாஷியானிடம் (George Nakashian) போர்ட்ரெயிட் ரக புகைப்படங்களை எடுக்கும் கலையையும் கற்றுக்கொண்டார். ஒட்டாவாவில் தன் இளம் வயதில் ஸ்டுடியோ ஒன்றை எடுத்து நடத்திய இவர், தன அரிய புகைப்படங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார். பல பத்திரிகைகளும் இவரது புகைப்படங்களை பயன்படுத்தத் தொடங்கின. அமெரிக்காவின் 12 அதிபர்கள் உட்பட உலகின் முன்னணி தலைவர்கள் பலரையும் இவர் படம்பிடித்துள்ளார். ஆர்டர் ஆஃப் கனடா விருது, கனடா கவுன்சில் மெடல் உட்பட பல்வேறு விருதுகளை வென்ற கர்ஷ், 2002-ல் காலமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE