ஒரு சரக்குப் பார்ட்டியும்... கொடுக்க மறந்த டீ வடைகளும்..!

By காமதேனு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ‘பூத்’ வாரியாக 20 பேர் கொண்ட கமிட்டிகளைப் போட்டு ஜெயித்து திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கின கட்சி திமுக. அந்த ஃபார்முலாவை அதிமுகவும் அமமுகவும் பாஜகவும்கூட கெட்டியாகப் பிடித்து வேகமெடுக்க, திமுக அதில் ‘ஙே’ என்றிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

கடந்த செவ்வாய் மாலை, கோவை மக்களவைத் தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சந்தித்து கலந்தாய்வு நடத்தினார் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன். இந்த பூத் கமிட்டி சந்திப்புகளில் என்னதான் பேசுகிறார்கள் என்று அறியும் ஆவலுடன் கண்ணம்பாளையம் கூட்டத்தில் நானும் இருந்தேன்.



 ஊர் முகப்பில் அம்பேத்கார் நகர் சமுதாயக்கூடம். அதன் வெளியே பத்து பேர்; உள்ளே பத்து பேர். “ஒரு பூத்துக்கு 20 பேர் வீதம் 360 பேர் வரணும். ஆனா, 20 பேர் கூட வரல, இன்னும் என்னய்யா பண்றீங்க... சீக்கிரம் வாங்க” யாருக்கோ போன்போட்டு திட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். வெளியே நின்றிருந்தவர்களோ, “அஞ்சு ஏக்கர் வாங்கி பிரிச்சா ரெண்டரை ஏக்கர்தான் கைக்கு வரும். மீதியெல்லாம் ரிசர்வ் சைட்டுக்கு போயிடும். கடைசியா நம்ம கைக்கு என்ன கிடைக்கும்ங்கறே..?’’ என்று ரியல் எஸ்டேட் பிசினஸ் பேசிக்கொண்டிருந்தார்கள். மறந்தும் அரசியல் பேசவில்லை! இரவு ஏழு மணி வாக்கில் கூட்டம் மெல்ல மெல்ல வர ஆரம்பித்தது. அதில் ஜோடி, ஜோடியாய் சில பெண்கள்.

அவர்களும், ‘‘எதுக்கு வரச் சொன்னாங்கன்னு தெரியலையே!’’

‘‘இப்பவே பணம் கொடுத்துடுவாங்களா இருக்கும்!’’

‘‘ச்சே, ச்சே இப்ப இருக்காது... எவ்வளவு கொடுப்பாங்கன்னு வேண்ணா இப்ப சொல்லுவாங்களா இருக்கும்!’’ இப்படிப் பேசிக்கொண்டே வந்தார்கள்.

சற்று நேரத்தில் டீ, வடை, போண்டா பார்சல்களைக் கொண்டுவந்த டீக்காரர், ‘‘நூறு பேருக்கு வரும். போதும்ங்களா?” என்று கேட்டார். “போதும்... தேவைப்பட்டா கூப்புடுறோம்!’’ என்று சொல்லி அவரை அனுப்பினார்கள்.

ஏழே முக்கால் மணிக்கு வந்திறங்கினார் முல்லை வேந்தன். அப்போது கூட்டமும் கொஞ்சம் கூடிவிட்டது. அவர் காரை விட்டிறங்கியதுமே ‘‘நான் இங்கே ஒரு வார்டு செயலாளர். நிகழ்ச்சி தகவலே சொல்லலை. சாயங்காலம், அதுவும் போன்ல சொல்றாங்க!’’ என்று ஒருவர் ரகளையை ஆரம்பிக்க... அவருக்கு ஆதரவாக இன்னும் சிலர், ‘‘எங்களுக்கும் அப்படித்தாங்க சொன்னாங்க!’’ என்றார்கள்.

அனைவரையும் சமாதானப்படுத்திக்கொண்டே உள்ளே வந்து பேசிய முல்லை வேந்தன், “இன்னிக்கி ஒரே நாள்ல எத்தனை நடந்துடுச்சு பாருங்க. பாம்பு கீரியோட கூட்டு சேர்ந்துடுச்சு. பூனை எலியோட கூட்டு சேர்ந்துடுச்சு. இப்படியே போனா எது எதும்மோட கூட்டு சேரும்னே தெரியலை. நம்மதான் உஷாரா இருக்கணும். நம்ம ஓட்டுகளை நம்ம பொட்டிக்குக் கொண்டுவந்து சேர்த்த நீங்கதான் தீயா வேலை செய்யணும்’’ எனச் சொல்லி நிறுத்த, வெளியிலிருந்து ஒரு ஆவேசக்குரல்.
‘‘எனக்கு இன்னிக்கி வரைக்கும் மெம்பர் கார்டு கொடுக்கலை. அது முதல்ல ஏன்னு கேளுங்க!’’

இப்படிக் கேட்டுவிட்டு மேடை நோக்கி நகர்ந்த அந்தப் பெருசு முழு மப்பில் இருந்தார். ‘‘யோவ் உட்காருய்யா. பேசி முடிச்சதும் கேப்பியாமா!’’ என்று அவரைச் சிலர் அதட்டினார்கள். அவர் அடங்க நினைத்தாலும் உள்ளே இருந்த சரக்கு அவரை ‘அடங்க மறு’ என்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE