கண்ணான கண்ணே..! - 01: உடல்.. மனம்.. உணவு!

By ருஜுதா திவேகர்

குழந்தையும் குதூகலமும் பிரிக்க முடியாதவை. அதனால்தான் ஒரு சிறு பிள்ளையின் கள்ளமில்லா சிரிப்பையும் கண்ணில் வீசும் களங்கமில்லா ஒளியையும் சற்றே கூர்ந்து நோக்கினால் நம்முள் குதூகலம் படர்கிறது.



புறநானூற்றுப் பாடலில்கூட
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லிலோர்க்குப்
பயக்குற இல்லை தாம் வாழும் நாளே...
என்று பாடிவைத்தனர்.

ஆனால், இன்றோ நமது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு நாமும் மகிழ்ச்சியைத் தொலைத்து நிற்கிறோம். காலச்சக்கரம் நம் குழந்தைகளுக்கு இப்படியொரு நெருக்கடியை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இயல்பாக இருந்த குழந்தை வளர்ப்பை நாம் தொலைத்துவிட்டு சைல்டு சைக்காலஜிஸ்டுகளிடம் அதனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஹைபர் ஆக்டிவ், அட்டென்ஷன் டெஃபிசிட், புவர் ஈட்டர், ஸ்லோ லேர்னர் என்ற கடினமான பல வார்த்தை
களுக்குள் குழந்தைகளைப் புகுத்திக்கொண்டிருக்கிறோம். குறும்பு, குழந்தையின் அடையாளம் என்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இஸ்ரோ மையம் ராக்கெட் விடுவதைப் போல் குழந்தை வளர்ப்பில் நாம் மெனக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு மெனக்கிட குழந்தை வளர்ப்பு ஒன்றும் அறிவியல் அல்ல; அது ஓர் அழகிய உணர்வு.

இந்த அழகிய உணர்வைத்தான் பிரபல டயட்டீசியன் ருஜூதா திவேகர் தனது Notes For Healthy Kids and for Parents too... என்ற புத்தகத்தில் விவரிக்கிறார். நமது விருப்பங்களை, கற்பிதங்களைக் குழந்தைகள் மேல் திணிப்பதை விடுத்து அவர்களை அவர்களாகவே வளரவிடுவதுதான் சிறந்த வளர்ப்பாக இருக்கும் என்கிறார் ருஜூதா.

அறிமுகப் பார்வை...

நான் காணும் கனவுலகில் அனைத்துக் குழந்தைகளும் விளையாடச் சுதந்திரம் பெற்றவர்களாக, கல்வி கற்க வாய்ப்பு பெற்றவர்களாக, அவர்களுக்குப் பிடித்த மாதிரி சாப்பிட உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

அந்தக் கனவு மெய்ப்பட பெற்றோர்களுக்கு வழிகாட்ட வேண்டியிருக்கிறது. அதைத்தான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் செய்ய முற்பட்டிருக்கிறேன்.

சமீப காலமாகவே எனது க்ளையன்டுகள், எனது நண்பர்கள் சிலர், ஏன் எனது குடும்பத்தினர் சிலரே சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளை சித்ரவதை செய்வதைக் கவலையுடன் காண்கிறேன். அவ்வாறாக சித்ரவதை செய்து தாங்களும் துன்பத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு காலத்தில் மகிழ்வான நிகழ்வாக அன்பின் அடையாளமாக இருந்த குழந்தை வளர்ப்பு இன்று ஒரு வேலையாக மாறியிருக்கிறது. அது தானாக மாறியிருக்கிறது என்று கூறுவதைவிட அப்படி நாம்தான் மாற்றியிருக்கிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஒரு விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரியாது ஆனால் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அதனை கண்கூடாகக் கவனித்திருப்பார்கள். அப்படித்தான் எப்போது நம் உணவு மேஜைக்கு, வாயில் பெயர் நுழையாத வெளிநாட்டு உணவுகள் வந்து சேர்ந்தன என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் அது நம் சந்ததி மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

நமக்குப் பழக்கமான எளிதில் கிடைக்கக்கூடிய நெய் சேர்த்த பருப்பு சோறும், வாழைப்பழ ரொட்டியும் பெயர் தெரியாத உணவு வகைகளால் களவாடப்பட்டுவிட்டன. அம்புலி காட்டி சாப்பாடு ஊட்டிய காலம்போய், ஐபேட் காட்டி சாப்பாடு ஊட்டும் காலம் வந்துவிட்டது. உணவு மேஜையில் குழந்தையும் பெற்றோரும் சேர்த்தே தண்டனைக்குள்ளாகிறார்கள். இரண்டு சப்பாத்தியையும் சாப்பிட்டுவிடு சிப்ஸ் பாக்கெட் தருகிறேன் என்று சொல்லும் அம்மாவும் இந்த இட்லியை மீதம் வைக்காமல் சாப்பிட்டால் எனக்கு அரை மணி எக்ஸ்ட்ரா ஐபேட் தருவியா என்று அம்மாவிடம் சலுகை கோரும் குழந்தையும் போதும், நம் குழந்தைகளின் உணவுப்பழக்கவழக்கம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை 
உணர்த்த.

கூகுளில் அல்ல குடும்பத்தில் தேடுங்கள்...

இணையம் இருப்பதால் இன்று எல்லாக் கேள்விக்கும் பதில் கூகுளில்தான் தேடப்படுகிறது. குழந்தைக்கு ஏதாவது சிறு உபாதை என்றால்கூட கூகுளில்தான் தேடுகிறோம். வீட்டில் இருக்கும் பெரிய மனுஷியோ ஒன்றும் பயப்படாதே கொஞ்சம் சர்க்கரை, உப்பு தண்ணீர் கொடு என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் அது நம் காதில் விழாது நாமோ கூகுளில் தேடி பின்னர் அதையே கடையில் வாங்கிக் கொடுப்போம். ஏனெனில் நாமெல்லாம் குளோபல் சிட்டிசன் ஆகிவிட்டோம். எல்லாவற்றையும் உலகளாவிய பார்வையில் பார்ப்பது மட்டுமே சரி என்ற பிம்பத்துக்குள் வந்துவிட்டோம். உண்மையில் உணவில் உலகளாவிய சிந்தனை தேவையில்லை. Eat locally, Think Globally என்பதே எனது தாரக மந்திரம். உங்கள் குழந்தைகளுக்கு உயிர் வாழ வேண்டும் என்பதை உணர்த்த இயற்கையாக உந்துதல் இருக்கும். அதனால் உணவை உண்பதும் இயல்பாகவே அவர்களுக்கு உணர்த்தப்படும். எதையும் திணிக்காமல் இருந்தால் அவர்களுக்கு மதிநுட்பத்துடன் உண்ணும் பழக்கம் இயல்பாய் சேர்ந்துவிடும்.

பேரன்டிங் என்றால் என்ன?

குழந்தை வளர்ப்பு (பேரன்டிங்) என்றால் என்னவென்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். ஒருமுறை மருத்துவர்கள் கருத்தரங்கில் நான் கலந்து கொண்டிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய மருத்துவர் ஒருவர் மிக அழகாகக் குழந்தை வளர்ப்புப் பற்றி பேசினார்.

குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு என்றார். அது எப்படி என்ற சிந்தைக்குள் ஆழும் முன்னரே அதனை விளக்கத் தொடங்கினார்.

குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் தருவது, அவர்களுக்குச் சிறப்பான கல்வி கொடுப்பது, குழந்தைகள் குறும்பு செய்ய அனுமதிப்பது, தொழில்நுட்பத்தை நம் மேற்பார்வையில் குழந்தைகள் பயன்படுத்த அனுமதிப்பது என்ற 4 வாய்ப்புகள் கொண்டதே குழந்தை வளர்ப்பு என்றார். எவ்வளவு ஆழமான கருத்து. அதுநாள் வரை ஆரோக்கியமான குழந்தைக்கான விளக்கத்தை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் இருந்த எனக்கு அந்தக் கருத்தரங்கம் பெற்றோர்கள் கொடுக்கும் 4 வாய்ப்பையும் ஒரு சேர பெற்ற குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை, 4 வாய்ப்பையும் சிறப்பாகச் செயல்படுத்துதல்தான் சரியான குழந்தை வளர்ப்பு முறை என்பதை உணர்த்தியது.

குழந்தைப் பருவ உடற்பருமனும் நமது புரிதலும்...

குழந்தைப்பருவ உடற்பருமன் சர்வதேச பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதை நாம் இப்போதே கவனிக்கவில்லை என்றால், உடனே தீர்வு காணவில்லை என்றால் நிச்சயமாக அதன் தாக்கம் நம் எதிர்கால சந்ததிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைப்பருவ உடற்பருமன் என்பது வெறும் உடல் எடை அதிகரிப்புப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட வேண்டியது அல்ல; மாறாக அது கூடவே அழைத்துவரும் நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய், மோசமான வாழ்க்கைத் தரம் ஆகிய பிரச்சினைகளையும் உள்ளடக்கிப் பார்க்க வேண்டிய விவகாரம். இது மோசமான செய்திதான். ஆனால், குழந்தைப்பருவ உடற்பருமன் தடுக்கக்கூடியதே என்பது ஆறுதலான விஷயம். ஆனால், அதற்கு நாம் ஒட்டுமொத்தக் குழந்தைகள் சமூகத்தையும் ஒரு பொது சொத்தாகக் கருதி கூட்டாகத் தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

அரசாங்கத்துக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு தனிநபர்களும் சமூகமும் அரசாங்கமும் இணைந்தே செயல்பட வேண்டும்.

குழந்தைகள் நம் சொத்து...

பசுமை வெளிகள் அருகிவரும் சூழல், சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவரும் நிலைமை, விளம்பரங்கள் வாயிலாகவும் போட்டிகள் வாயிலாகவும் இன்னும் கண்கவர் இலவச பொம்மைகள் வாயிலாகவும் உணவுத் தொழிற்சாலைகள் குழந்தைகளைக் குறிவைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஆகியன குழந்தை வளர்ப்பில் ஏற்படும் தோல்விக்கு பெற்றோரை மட்டுமே குறை சொல்வது நியாயமல்ல என்பதை உணர்த்தும்.

குழந்தைப்பருவ உடற்பருமனை இதுவரை நாம் தனிப்பட்ட பிரச்சினையாகவே கருதியிருப்போம். ஒரு குறிப்பட்ட குழந்தைக்கு உணவு கட்டுப்பாடு இல்லாமை, அதன் சோம்பேறித்தனம், குழந்தையின் பெற்றோரின் அக்கறையின்மை ஆகியனவற்றையே காரணிகளாகப் பட்டியலிட்டிருக்கிறோம். ஆனால், ஒரு குழந்தை தானாகவே பருமனாவதில்லை. அதற்கு மேலே பட்டியலிட்டதுபோல் பல்வேறு காரணிகள் வித்திடுகின்றன. உடற்பருமனை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழலில்தான் (Obesogenic environment) நம் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.

சில உதாரணங்கள் சொல்கிறேன். நம் குழந்தைகள் அருகிலிருக்கும் பள்ளிக்கு நடந்து செல்லலாம். ஆனால் நாம் அவர்களை வசதிக்கேற்ப இருசக்கர வாகனத்திலோ காரிலோ அழைத்துச் செல்கிறோம். நாம் நமது குழந்தைப்பருவத்தில் அன்றாடம் மாலையில் குறைந்தது 2 மணி நேரமாவது வெளியில் தெருவில் விளையாடியிருப்போம். ஆனால் நம் குழந்தைகள் இன்று வாரத்தில் ஒரு நாள் அதுவும் ஏதாவது ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடுகின்றனர். நாம் நமது அம்மா கையில் சமைக்கப்பட்ட சூடான உணவைச் சாப்பிட்டிருப்போம். ஆனால், நம் குழந்தைகள் பாக்கெட்டில் வரும் தானியங்களை பால் சேர்த்து சாப்பிட்டுச் செல்கின்றனர். இல்லாவிட்டால் பட்டினியாகவே செல்கின்றனர். இதைத்தான் நான் ஓபிசோஜெனிக் என்விரான்மென்ட் என்கிறேன்.

அசாதாரண நிலை...

15, 20 ஆண்டுகளுக்கு முன்னதாக நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு நாம் மட்டுமே பொறுப்பாகியிருப்போம். கீழே விழுந்துவிட்டால், ஆசிரியரிடம் திட்டுவாங்கினால் எல்லாவற்றிற்கும் நாம் மட்டுமே பொறுப்பாகியிருப்போம். எல்லா முடிவுகளையும் பெற்றோரே எடுத்தனர். உங்கள் நண்பர் அமெரிக்கா செல்வதாகச் சொல்லி நானும் வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் எனக் கேட்டிருந்தீர்கள் என்றால் அதற்கு உங்கள் பெற்றோர் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பார்கள் என்பதையும் மறந்திருக்க மாட்டீர்கள். எந்தவித விளக்கமும் இல்லாமல் கடுமையாக நிராகரித்திருப்பார்கள். ஆனால், இப்போது ஒரு குழந்தை அப்படிக்கேட்டால் பெற்றோர் மியாமி டிஸ்னி வேர்ல்டு செல்ல எந்த வங்கி சுலபத் தவணையில் கடன் தரும் எனத் தேடுகின்றனர். இப்படி ஒரு அசாதாரண சூழலே நிலவுகிறது.

அந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் ஏதாவது சாதனை செய்தால் ஒழிய அல்லது ஏதோ உடல்நிலை முடியவில்லை என்றால் தவிர குடும்பத்தில் யாரும் அவர்களை தாங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள். சேவை செய்திருக்க மாட்டார்கள். அவரவர் அவரவர் வேலையில் இருப்பர். குழந்தைகள் ஒருங்கிணைந்து வளர்வார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் குழந்தைக்கு மூக்கு வழிந்தால்கூட பெற்றோர் குழந்தைக்கு ஆர்.ஓ தண்ணீர் கொடுக்கவில்லை, புரதம் நிறைந்த உணவு அளிக்கவில்லை என்று விரல்கள் அவர்களை நோக்கித் திரும்புகின்றன. துரதிர்ஷ்டவசமாக இக்கால குழந்தைகள் நுகர்வோராக உள்ளனர். அவர்கள் எதனை அங்கீகரிக்கிறார்களோ அதனை அவர்களுக்கான சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக பெற்றோர் உள்ளனர்.

நிர்வாக மேலாண்மை வகுப்புகளில் எல்லா ஆண்டும் ஒரு பாடம் நிச்சயமாக எடுக்கப்படும். அது, வாடிக்கையாளர்கள் எப்போதுமே சரியாக சிந்திக்க மாட்டார்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை தொழில் நிறுவனங்கள்தான் சொல்ல வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள்.

இது குழந்தை வளர்ப்புக்கும் பெரிதும் பொருந்தும் என நான் நினைக்கிறேன். அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை நாமே வழங்கினால் போதும். குழந்தையின் ஆரம்ப காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு, விளையாட்டும், கல்வியும் போதுமானது.

குழந்தை வளர்ப்பையும் நட்பையும் குழப்பாதீர்கள்..

குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் பற்றி நிறையவே பேசப்படுகிறது. இது குறித்து கருத்தரங்கில் பேசிய மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்தார். அவர் பேசும்போது, "என்னிடம் ஒரு பெற்றோர் 8 வயது சிறுவனை அழைத்து வந்தனர். அவனுக்கு கவனச் சிதறல் நோய் ஏற்பட்டிருப்பதாக அவர்களே முடிவு செய்திருந்தனர். நானும் அவனிடம் பேசிப்பார்த்தேன். அவனது நண்பன் வேறு பள்ளிக்கு மாறுவதால் கவலையில் இருந்தான். நண்பனின் பெற்றோர் விவாகரத்து பெற்றதால், அவன் பள்ளி மாற நேர்ந்திருந்தது. விவாகரத்து என்றால் என்னவென்று பெற்றோரிடம் கேட்டு நச்சரித்திருக்கிறான். அப்போது அவனது தந்தை சிறுவனை பாந்த்ரா நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்துச் சென்று விவாகரத்து இங்குதான் வழங்கப்படுகிறது.

விவாகரத்து என்றால் மனம் ஒத்துவராத தம்பதிகள் பிரிதல், ஓராண்டில் பெண்களால் இத்தனை விவாகரத்துகளும், ஆண்களால் இவ்வளவு விவாகரத்துகளும் கோரப்படுகின்றன. இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு விவாகரத்து சட்டங்கள் என்னென்ன என்றெல்லாம் விளக்கியிருக்கிறார். ஆனால், எதுவுமே அவன் காதில் ஏறவில்லை. அந்தக் குழந்தைக்குத் தேவையான பதில் இத்தனை அல்ல. நானும் அம்மாவும் விவகாரத்து செய்ய மாட்டோம். நீ வேறு பள்ளி மாறத் தேவையிருக்காது என்பதுதான் குழந்தை எதிர்பார்த்த வாக்குறுதி. ஆனால், குழந்தைகளை நண்பர்கள் என்ற போர்வைக்குள் அழுத்தி அவர்கள் புரிதலுக்கு எட்டாத பல்வேறு விஷயங்களை நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நட்பையும் குழந்தை வளர்ப்பையும் குழப்பாதீர்கள்" எனக் கூறினார்.

மருத்துவர் சொன்னதை எழுத்து மாறாமல் நான் உங்களிடம் இப்போது சொல்லக் காரணம், குழந்தை வளர்ப்பு என்பது பெறோருக்குக் கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். குழந்தை வளர்ப்பையும் நட்பையும் குழப்பாதீர்கள். நட்பு பாராட்ட நிறையவே காலம் இருக்கிறது. ஆதலால் அவர்களது ஆரம்பகட்ட நிலையில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்.

(வளர்வோம், வளர்ப்போம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE