பதறும் பதினாறு 30: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்



பதின்பருவக் குழந்தைகளைக் கையாள்வது இருபுறமும் கூர்மையான கத்தியைக் கையாள்வதைப் போன்றது. லேசாகப் பிசகினாலும் விபத்து நேர்ந்துவிடக்கூடும். பதின்பருவத்தில் அடியெடுத்து வைத்ததுமே குழந்தைகள் தங்களை வளர்ந்தவர்களாக நினைத்துக்கொள்வதும் மணம் முடித்து வைத்த பிறகும் பெற்றோர் அவர்களைக் குழந்தைகளாக நினைப்பதும் சிக்கலின் முடிச்சுகளில் ஒன்று.



உலகமயமாக்கலும் நவீனமயமாக்கலும்  உலகைத் தலைகீழாக மாற்றிவிட்டன. நல்லது, கெட்டது இரண்டுமே அளவில்
லாமல் குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. எல்லாமே அவர்களின் உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறது. அதனா
லேயே அவர்கள் எதிலும் எளிதில் திருப்தி அடைவதில்லை. இன்னும் இன்னும் என்று அவர்களின் விருப்பமும் தேவையும் மேலெழுந்தபடி இருக்கின்றன. எப்போதும் ஏதாவது செய்தபடி இருப்பதைத்தான் பெரும்பாலான குழந்தைகள் விரும்புகிறார்கள். அவர்கள் ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்வது குறைவு. 

அப்படியே அவர்கள் உட்கார விரும்பினாலும் பெற்றோர் அவர்களின் கடிவாளத்தை முறுக்கிவிட்டு ஓடச் செய்கி
றார்கள். இப்படியொரு சூழலில் வளரும் குழந்தைகளிடம், “நான் அந்தக் காலத்தில் எப்படி இருந்தேன் தெரியுமா? தினமும் மூன்று கிலோ மீட்டர் நடந்துதான் பள்ளிக்குப் போவேன். சத்துணவு சாப்பிட்டேன். அப்பா, அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டேன். வருடத்துக்கு இரண்டு முறைதான் புதுத் துணி வாங்கித் தருவார்கள்” என்று ஒப்பிட்டுச் சொல்வது தவறு. பிறந்தது முதல் இப்படி எந்த அனுபவத்துக்கும் பழக்கப்படாத குழந்தைகளுக்கு இதுபோன்ற அந்தக் காலத்துப் புராணம் நிச்சயம் அலுப்பூட்டும்.

இயல்பும் திரிபும்

குழந்தைகள் பாதை மாறுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் உள்ளடக்கிய சமூகத்தில் அவர்களைப் பக்குவமாக வளர்ப்பது சவாலானது. பேசத் தொடங்கியதுமே தனித்துச் செயல்பட விரும்பும் குழந்தைகள் பதின்பருவத்தில் கட்டற்ற சுந்திரத்தையே விரும்புவார்கள். சொல்பேச்சுக் கேட்காமல் இருப்பது, எதிர்த்துப் பேசுவது, எதிர் பால் ஈர்ப்பு, காதல், அழகு குறித்த சிந்தனை போன்றவை பதின்பருவத்தின் இயல்பான மாற்றங்கள். இவை எல்லை மீறுவதுபோல் தோன்றினால் ஆலோசனை வழங்கி அவர்களை நேர்ப்படுத்தலாம். கோபப்படுவது, அடிப்பது போன்றவை எவ்விதத்திலும் பயன்தராது.

இயல்பான மாற்றங்கள் தவிர, இன்றைய பதின்பருவக் குழந்தைகள் தடம் மாறுவதற்கான பாதைகள் இன்று அதிகரித்திருக்கின்றன. கட்டுப்பாடு இல்லாத ஸ்மார்ட் போன் பயன்பாடு, சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடப்பது, இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது போன்றவை பதின்பருவத்தினரைப் பாதிக்கும் பிரச்சினைகளில் முக்கியமானவை. காதலுக்கு ஆட்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் இருப்பது, போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது, வன்முறையில் ஈடுபடுவது போன்றவையும் பதின்பருவத்தினரைச் சீரழிக்கின்றன. சில குழந்தைகள் தனி மனிதக் குற்றங்களிலும் சமூகக் குற்றங்களிலும் ஈடுபடக்கூடும். இவை அனைத்தையும்விட அச்சுறுத்தலாக இருப்பது எது தெரியுமா? பதின்பருவத்தினர் தாங்கள் ஈடுபடுகிற குற்றங்கள் குறித்தும் செயல்கள் குறித்தும் எந்தவிதமான குற்றவுணர்வும் இல்லாமல் இருப்பதுதான்.

முதிராத மனது

எல்லாக் குழந்தைகளும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை; பாதை மாறுவதில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே அன்புடனும் கண்டிப்பும் கலந்து வளர்க்கப்படும் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டிய பிறகும் அதே வழியிலேயேதான் செல்வார்கள். விதிவிலக்காகச் சில குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு எல்லை மீறக்கூடும். குழந்தை வளர்ப்பில் நாம் கோட்டைவிடுகிற இடங்களே அவர்கள் திசை மாறுவதற்கான தூண்டுகோலாகிவிடுகின்றன. குழந்தைகளின் கட்டுக்கடங்காத இணையப் பயன்பாட்டைக் குறைத்தே ஆக வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அரவிந்தன் சிவகுமார். “இப்போது ஒரு வயதுக் குழந்தைகூட செல்போனுக்கு எளிதில் பழக்கப்பட்டுவிடுகிறது. வளர, 
வளர ஆண்-பெண் இருபாலருமே அதற்கு எளிதில் ஆட்பட்டுவிடுகின்றனர். செல்போனில் பல்வேறு செயலிகளைத் தரவிறக்கம் செய்து அதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனர். சரி, தவறு என முடிவெடுக்கத் துணைபுரியும் மூளையின் ஒரு பகுதி, பதின்பருவத்தில் முதிர்ச்சியடைந்திருக்காது. அதனால் அவர்களால் தீர்மானமான முடிவுகளை எடுக்க 
முடியாது. ஆன்லைனில் விளையாடும்போதோ சமூக வலைதளங்களில் வலம் வரும்போதோ அவர்களுக்கு உடனடி
யாக இன்பம் கிடைத்துவிடுகிறது. அப்படிக் கிடைக்கிற இன்பம்தான் அவர்களை அடுத்தடுத்து அதே செயலைச் செய்யவைக்கிறது” என்கிறார் அவர்.

இன்னொரு வாய்ப்பு இல்லை பதின்பருவக் குழந்தைகளைக் கண்டிப்பதைவிட அவர்களுடன் மனம்
விட்டுப் பேசி, நிலைமையை உணரவைப்பது தீர்வாக அமையும் எனப் பரிந்துரைக்கிறார் அரவிந்தன் சிவகுமார்.
“ஆன்லைனில் விளையாடி ஜெயிப்பதுபோலத்தான் வாழ்க்கையும் எனப் பல குழந்தைகள் நினைக்கின்றனர். ஆன்லைனில் ஒருமுறை தோற்றுவிட்டால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்படி வெல்வதற்கு வழிகாட்டுவதற்கென்றே குறுக்கு வழிகளையும் சில விளையாட்டுகள் பரிந்துரைக்கின்றன. இப்படி ஜெயித்துப் பழக்கப்பட்ட குழந்தைகள் வாழ்க்கையிலும் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துவிடும் என்று நம்பக்கூடும். அவர்களுக்கு நாம்தான் வாழ்க்கை வேறு, விளையாட்டு வேறு என்பதைப் புரியவைக்க வேண்டும். இன்று பதின்பருவக் குழந்தைகளில் பலர் பல்வேறு செயலிகளில் நடித்து, ஆடிப் பாடுகின்றனர். திறமையை வெளிப்படுத்துவது தவறல்ல. ஆனால், பொதுவெளியில் ஒன்றைப் பகிர்வதன் மூலமாக ஏற்படும் சிக்கலைக் குழந்தைகள் புரிந்துகொள்வதில்லை. இணையத்தில் எதுவுமே அந்தரங்கம் இல்லை. இணையச் சிக்கலில் பெரியவர்களே மாட்டிக்கொள்ளும்போது குழந்தைகளின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று 
சொல்லும் அரவிந்தன், “குழந்தைகளுக்குப் பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக இதுபோன்ற பதின்பருவச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியும். குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியின் அவசியத்தை இதற்கு மேலா
வது அரசு உணர வேண்டும். 

அவர்களாகவே புரிந்துகொள்வார்கள்; இதையெல்லாம் சொல்லித்தரத் தேவையில்லை என்பதுதான் பிரச்சினைக்குப் பாதையமைத்துக் கொடுக்கும். குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப பாலியல் கல்வி குறித்த தகவல்களைப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். எந்தெந்த வயதில் உடல்ரீதியான வளர்ச்சி எப்படி மாறுபடும் என்பதைத் தகுந்த ஆசிரியர்கள், உளவியல் ஆலோசகர்களின் துணையோடு வடிவமைக்க வேண்டும்” என்கிறார் அவர்.

ஒரு காலத்தில், ‘18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே’ என்ற அறிவிப்புடன் திரைப்படங்களும் காட்சிகளும் வெளியாகும். பெற்றோரும் தங்கள் குழந்தைகள் அவற்றைப் பார்க்காதவகையில் கவனத்துடன் இருந்தனர். அப்படியான காட்சிகளையும் வன்முறைக் காட்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்குக் குறைவாகவே வாய்த்தன. ஆனால், இன்று எல்லாமே கொட்டிக் கிடக்கிறது.

பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்

விளம்பரப்படங்களில் தொடங்கி திரைப்படங்கள், பத்திரிகை என அனைத்து இடங்களிலும் குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய காட்சியோ செய்தியோ இருக்கிறது. “இப்படியான சூழலில் பெற்றோரும் சமூகமும் அரசும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். எதையும் காட்சிப்படுத்துவதற்கு முன் குழந்தைகளையும் பதின்பருவத்தினரையும் அது எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டாலே அதை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிட முடியும்.

அது இல்லாதபட்சத்தில் குறைந்தபட்ச தணிக்கையாவது அவசியம் வேண்டும். வன்முறை நிறைந்த காட்சிகளை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது தற்போது அதிகரித்து வருகிறது. அதுவும் நல்லதல்ல. குழந்தையின் ஆளுமையை நிர்ணயிப்பதில் குடும்பத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சிக்கல்கள் நிறைந்த குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகள் மிக எளிதாக திசைமாறக்கூடும். அதனால் தாங்கள் தான் குழந்தைகளின் முதல் ரோல் மாடல் என்பதைப் பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளிகளில் பாடத்திட்டத்தில் சிலவற்றைச் சேர்ப்பதன் மூலமாகவும் குழந்தைகளை நெறிப்படுத்தலாம். பாலினச் சமத்துவம், பாலியல் கல்வி, போதைப் பழக்கத்தின் சீர்கேடு போன்றவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதும் நல்ல பலனைத் தரும்” என்று சொல்லும் அரவிந்தன் சிவகுமார், “திரைப்படங்கள் உருவாக்கும் கதாநாயக பிம்பங்கள் கண்டிக்கத்தக்கவை” என்கிறார்.

கூட்டுப் பொறுப்பு

எந்தவிதமான அடிப்படை ஒழுக்கமும் நன்னடத்தையும் இல்லாதவர்களைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதன் மூலம் இப்படியான செயல்பாடுகள் நியாயமானவை என்ற கற்பிதத்தைக் குழந்தைகள் மனத்தில் விதைக்கிறார்கள். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்; ஆண் எப்படி இருந்தாலும் அவன் விரும்பப்படுவான் என்பதுபோன்ற 
கற்பிதங்கள் தொடர்ந்து திரைப்படங்கள் மூலமாகத் திணிக்கப்படுகின்றன. உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் ஒருங்கிணைந்ததே குழந்தையின் பரிபூரண வளர்ச்சி. அதை உறுதிப்படுத்துவதில் பெற்றோருக்கு நிகரான பொறுப்பும் கடமையும் அரசுக்கும் உண்டு. பள்ளிக் கல்வித் துறையும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து சில மாறுதல்களைப் பள்ளி மாணவர்களிடம் உருவாக்கலாம். எல்லாமே எளிதாகக் கிடைத்துவிடுகிற இந்தக் காலத்தில் குழந்தைகளைப் பின்னோக்கி இழுக்கும் வகையில் சில பெற்றோர் தங்களைக் கலாச்சாரரீதியாகக் குழப்பிக்கொள்கிறார்கள். அது 
எந்தப் பலனையும் தராது. குழந்தைகளை நல்வழிப்படுத்துவதுடன் அவர்களின் மாறுதல்களை அருகிருந்து கவனித்துச் சீர்ப்படுத்த வேண்டும். இனிய பதினாறு பதறும் பதினாறாக மாறாமல் இருப்பது பெற்றோரின் கைகளில் மட்டுமல்ல; சமூகத்தின் கைகளிலும் அரசின் கைகளிலும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பைத் தனி மனிதப் பொறுப்பாகப் பார்க்காமல் சமூகக் கடமையாகப் பார்க்க வேண்டும். நாம் பெற்றெடுத்த குழந்தை மட்டுமல்ல, நாம் சந்திக்கிற ஒவ்வொரு குழந்தையும் நம் குழந்தைதான் என்ற பொறுப்பு அதிகரித்தால் அங்கே ஒருபோதும் பதற்றத்துக்கு இடமில்லை.

 (நிஜம் அறிந்தோம்) 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE