அங்கே கறிச்சோறு... இங்கே ஓட்டை வடை! - ஆமை வேகத்தில் நகரும் அமமுக

By காமதேனு

கே.கே.மகேஷ்

திமுக, அதிமுக எல்லாம் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருக்க, டி.டி.வி.தினகரன் கடந்த ஒரு மாதமாக தனி ஆளாக மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்தது 3 இடங்களில் அவர் கூட்டம் நடத்த, மண்டல பொறுப்பாளர்களோ தங்களுக்குக் கீழ் வருகிற தலா 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் மதுரை தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம், ஒத்தக்கடையில் நடைபெறுவதாக அறிந்ததும் அங்கே அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்க்கப் போனோம்.

கூட்டத்துக்கு வந்த அத்தனை பேருக்கும் ஓட்டை போட்ட உளுந்த வடையும், அரைலிட்டர் தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள். ஒன்றுக்கு இரண்டு வடை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே தொண்டர் ஒருவர் கவலையாகச் சொன்னார், “அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கறிச் சோறாம்!” என்று. மண்டல பொறுப்பாளரான தங்கதமிழ்செல்வன் சிவகங்கை கூட்டத்தை முடித்துவிட்டு வருவதற்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாகிவிட்டதால், கூட்டம் சோர்ந்து போனது. “ரெண்டு எருமை மாடுங்க ஆட்சி செய்யுது; அதை நாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கோம்” என்று ஆரம்பித்து ஈபிஎஸ், ஓபிஎஸ்ஐ மாவட்டச் செயலாளர் சரவணன் சகட்டு மேனிக்கு ஒருமையில் வசைபாடத் தொடங்க ஒட்டுமொத்த கூட்டமும் உற்சாகமானது.

திடீரெனப் பெண்கள் கூட்டத்தில் ஒரே சலசலப்பு. அடுத்த ரவுண்ட் வடையாக இருக்குமோ என்று ஆண்களும் ஆர்வமிகுதியில் எழுந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, பேட்ஜ் குத்துவதற்கு குண்டூசி கொடுத்திருக்கிறார்கள் என்று. “அடப்பாவிங்களா குண்டூசிக்கே இப்படிப் பறக்குறாங்களே, அதிமுககாரன் காசு குடுத்தா இவங்க நமக்கு ஓட்டுப்போடுவாங்களா?” என்றொரு முணுமுணுப்பும் என் காதில் விழுந்தது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE