பதறும் பதினாறு 29: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறி வாங்க கடைக்குச் சென்றார் அமுதா. செல்லும் வழியில் இருந்த சந்துக்குள் தன் மகன் தமன் நின்றுகொண்டிருப்பதுபோல் தெரிந்தது. படிப்பதற்காக சுரேஷ் வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னவன் இங்கே எப்படி இருக்க முடியும் என யோசித்தபடியே நடந்தார். அம்மாவைப் பார்த்துவிட்ட தமன் சைக்கிளை வேகமாக அழுத்தி எதிர்புறம் சென்றுவிட்டான். அவன் போனதும் சந்துக்குள் இருந்து ஒரு பெண் அழுதபடியே வருவதைப் பார்த்ததும் அமுதா திகைத்து நின்றுவிட்டார். அந்தப் பெண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ஒருவேளை தமன்னுடன் படிக்கிற பெண்ணாக இருக்குமா, எதற்கு அழுகிறாள் என அமுதாவுக்கு எதுவுமே புரியவில்லை.

மகன் தந்த அதிர்ச்சி

அந்தப் பெண்ணிடமே கேட்டார். அவள் சொன்ன செய்தியை அமுதாவால் நம்பவே முடியவில்லை. ப்ளஸ் ஒன் படிக்கும் அந்தப் பெண்ணைத் தினமும் பின்தொடர்ந்து செல்வதை தமன் வழக்கமாக வைத்திருக்கிறான். அந்தப் பெண் மறுத்து விலகினாலும் தொடர்ந்து அவளிடம் பேசியிருக்கிறான். “பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்” என அவள் சொன்ன பிறகு மிரட்டத் தொடங்கியிருக்கிறான் தமன். இன்றும் அப்படி அவளை மிரட்டிக்கொண்டிருந்தபோதுதான் அமுதாவின் கண்ணில் சிக்கியிருக்கிறான். அவன் கொடுக்கும் தொல்லை தாளாமல்தான் அந்தப் பெண் அழுதிருக்கிறாள்.

நல்ல பண்புகள் அனைத்தையும் சொல்லிக்கொடுத்து வளர்த்தும் மகன் ஏன் இப்படிச் செய்கிறான் என்பது அமுதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டில் அவனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வெளியே வேறு முகம் காட்டும் மகனை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. பருவ வயதில் எதிர்பாலின ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு என்பது அமுதாவுக்குத் தெரியும். ஆனால், விருப்பம் இல்லாத பெண்ணைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதை எப்படி அனுமதிக்க முடியும் எனக் கோபப்பட்டார். ஈர்ப்பு என்கிற அளவில் முடிந்துவிடக்கூடியதை காதல், பின்தொடர்தல், அதைத் தொடரும் வன்முறை போன்றவையெல்லாம் இந்த வயதில் தேவையா என வேதனைப்பட்டார். இதில் மகனுடைய எதிர்காலம் மட்டுமல்ல...

அந்தப் பெண்ணின் எதிர்காலமும்தானே அடங்கியிருக்கிறது என்று நினைத்தார்.

விதைக்கப்படும் அதிகாரச் சிந்தனை

வீட்டுச் சூழலும் திரைப்படங்களும் ஊடகங்களும் தன் மகனுக்குள் போதுமான அளவுக்கு எதிர்மறை சிந்தனைகளை வளர்த்துவிட்டிருப்பதையும் அமுதாவால் புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக நம் இந்தியக் குடும்பங்களில் குழந்தை வளர்ப்பிலிருந்தே ஆண் – பெண் பாகுபாடு தொடங்கிவிடுகிறது. ஆணுக்கு எல்லா உரிமையும் தரப்படுகிற இடத்தில், கிடைப்பதை ஏற்றுக்கொண்டு வாழும் பிறவிகளாகவே பெரும்பாலான வீடுகளில் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால் பெண்ணை அடக்கி அதிகாரம் செய்யலாம் என்ற நினைப்பு குழந்தைகளின் மனத்தில் விதைக்கப்பட்டுவிடுகிறது. இந்த நினைப்புடன் வளரும் குழந்தைகளைத் திரைப்படங்கள் மோசமான தளத்துக்கு அழைத்துச் செல்கின்றன. காதலிக்க மறுப்பதும் ஒருவனை நிராகரிப்பதும் பெண்களின் செயல் அல்ல என்று மீண்டும் மீண்டும் திரைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது. நண்பர்கள் அதற்குத் தூபம் போட, என்னை எப்படி ஒரு பெண் மறுக்கலாம் என்று எழும் கோபம், அடுத்தடுத்த நிலைகளை விரைவாக எட்டிவிடுகிறது.

தமன் எந்த நிலையில் இருக்கிறான் என்பது அமுதாவுக்குப் புரியவில்லை. தான் ஏதாவது கருத்து சொல்ல வந்தால், “நீ வாயை மூடு. எல்லாமே எனக்குத் தெரியும்” என்று கணவர் சொல்வதைக் கேட்டு வளர்ந்த மகன், இன்னொரு பெண்ணை இதே கண்ணோட்டத்துடன்தானே அணுகுவான் என்று தோன்றியது. நட்பையோ காதலையோ ஒரு பெண் நிராகரித்தால் அது தன் ஆண்மைக்கு இழுக்கு என்றே பெரும்பாலான பதின்பருவக் குழந்தைகளும் ஆண்களும் புரிந்துகொள்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் தன்னை நிராகரித்த பெண்ணைப் பின்தொடர்வதும் அவர்கள் மீது வன்முறையை ஏவுவதும். பின்தொடர்வது என்பது அவர்களைப் பின்தொடர்ந்து செல்வது மட்டுமல்ல. அவர்களுக்குத் தொடர்ந்து போன் செய்வது, குறுஞ்செய்தி – மின்னஞ்சல் அனுப்புவது, சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தொந்தரவு தருவது போன்றவையும் அதில் அடங்கும்.

வீட்டில் யார் ஆட்சி?

மகன் என்ன செய்யக் காத்திருக்கிறான் என்பதை நினைத்தபோதே அமுதாவுக்குப் படபடப்பாக வந்தது. மதிய உணவு முடித்த கையோடு மகனைத் தனியாக அழைத்து நேரடியாக விஷயத்துக்கு வந்தார். இதை எதிர்பார்த்திருந்ததால் தமனும் பதிலைத் தயாராகவே வைத்திருந்தான். தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று சாதித்தான். பருவ வயதில் ஏற்படுகிற ஈர்ப்பைக் காதல் என்று குழப்பிக்கொள்வது எத்தனை தவறோ அப்படித்தான் வேண்டாம் என மறுக்கும் பெண்ணைப் பின்தொடர்வதும் என்று மகனுக்கு விளக்கினார் அமுதா. இதுபோன்ற செயல் அந்தப் பெண்ணை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் சொன்னார். திரைப்படங்களும் சமூகஊடகங்களும் சொல்பவற்றில் இருக்கும் போலித்தனத்தையும் விளக்கினார். ஆனாலும் தமன் எதையும் ஏற்றுக் கொள்ளவோ தன் தவறை ஒப்புக் கொள்ளவோ இல்லை.

மகனை விட்டுப்பிடிப்பதுதான் நல்லது என்று உணர்ந்த அமுதா அதைச் செயல்படுத்தியும் காட்டினார். தன் கணவரிடம் விஷயத்தைச் சொல்லி அதன் மூலம் கணவரின் அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணம் என்பதை உணர்த்தினார். வீட்டில் பெற்றோர் நடந்துகொள்ளும் முறை குழந்தைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை அமுதாவின் கணவர் புரிந்துகொண்டார். தாமதமாகப் புரிந்துகொண்டாலும் தன்னைச் சரிசெய்துகொள்ள அவர் தயாராகவே இருந்தார். ஆனால், எத்தனை பெற்றோர், வீட்டில் பாலினச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்? வீட்டில் மீனாட்சி ஆட்சியா, சிதம்பர ஆட்சியா என்ற அயர்ச்சிதரும் கேள்வியை வியக்கத்தக்க நகைச்சுவைபோல் கேட்கிறவர்கள் இன்றும் உண்டு. மனைவியைச் சமமாக மதித்து நடக்கிற வீடுகளில் குழந்தைகளும் பாலினச் சமத்துவத்தை உணர்ந்து நடப்பார்கள். பெண்கள் தாழ்வாக நடத்தப்படுகிற வீடுகளில் வளர்கிற குழந்தைகள் ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்கிற கற்பிதத்துக்குள் அடைபட்டுப்போவார்கள். அது ஆண், பெண் இருபாலருக்குமே நல்லதல்ல.

சரிதாவிடம் இருந்த கதை

மகனின் செயல் குறித்துத் தன் தோழி சரிதாவிடம் அமுதா பகிர்ந்துகொண்டார். அமுதாவிடம் சொல்வதற்கு சரிதாவிடமும் ஒரு கதை இருந்தது. சரிதாவின் மகள் ப்ளஸ் டு படிக்கிறாள். பொதுத்தேர்வு தவிர போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் மகளைச் சேர்த்திருந்தார் சரிதா. மகளுடன் பயிற்சி வகுப்பில் படிக்கும் அந்த மாணவன் அன்று சரிதாவைச் சந்தித்தான். “உங்க பொண்ணு என்கிட்ட அடிக்கடி பேசிக்கிட்டே இருக்கா. ஆரம்பத்துல எனக்கு எதுவும் பெருசா தெரியல. இப்ப கொஞ்ச நாளா அதிகமா பேசறா. அவகிட்ட மட்டும்தான் நான் பேசணும்னு சொல்றா. வேற யாராவது என்கிட்ட பேசினா சண்டை போடுறா. நான் பேசாம இருந்தா கோபப்பட்டுத் திட்டுறா. தொடர்ந்து போன் பண்றா இல்லைன்னா மெசேஜ் அனுப்புறா. எனக்கு இதெல்லாம் சரியா படலைன்னு சொன்னா அதுக்கும் கோபப்படுறா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல” என்று சொன்னான்.

சரிதாவுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது. அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பியவர், மகளிடம் கேட்டார். நடந்ததை அப்படியே மாற்றிச் சொன்னாள் மகள். அந்தப் பையன்தான் தன்னிடம் தவறாக நடந்துகொள்வதாகச் சொன்னாள். இப்போது சரிதாவுக்கு எல்லாமே புரிந்தது. அந்த மாணவன் மீது தனது மகளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவனுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இவளைத் தோழியாகத்தான் நினைத்திருக்கிறான். மகளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதைத்தான் வெவ்வேறு வகையில் அவள் வெளிப்படுத்தியிருக்கிறாள். அமுதாவின் வீட்டுச் சூழலைப் போன்றதல்ல சரிதாவின் வீடு. வசதியான குடும்பம். மகள் விரும்பியதெல்லாம் கிடைத்தது. இப்போது அந்த மாணவனை விரும்புகிறாள். அந்த விருப்பம் நிறைவேறாததால் அதை நிறைவேற்றுவதற்காகப் பல்வேறு வழிகளில் முயல்கிறாள். அது அந்த மாணவனை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்ற நினைப்பு சரிதாவின் மகளுக்குத் துளிக்கூட இல்லை.

கூட்டுப் பொறுப்பு

ஆண் குழந்தைகள் மட்டுமல்ல, சில நேரம் பெண் குழந்தைகளும் காதலின் பெயரால் இப்படியான வன்முறையை அடுத்தவர் மீது செயல்படுத்தக்கூடும். ஆணே தவறு செய்தான் என்று எளிதாகத் திசை திருப்பிவிட முடியும் என்பதாலேயே பெண்கள், ஆண்களைத் தொந்தரவு செய்யலாம். இதுபோன்ற நேரத்தில் நம் குழந்தைகளைக் காக்க முயல்வது பிரச்சினையைத் தீவிரப்படுத்துமே தவிர தீர்வு தராது. நம் குழந்தைகளைச் சீர்படுத்த நினைக்கும் அதே நேரம் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். பாதிக்கப்படும் நிலையில் நம் குழந்தை இருந்தால் எப்படிச் செயல்படுவோமோ அப்படித்தான் நாம் நடந்துகொள்ள வேண்டும்.

சமூகம், பண்பாடு சார்ந்த தாக்கம் இதில் இருந்தாலும் குடும்பத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. சரிதா இதைப் புரிந்துகொண்டார்; மகளுக்கும் அதை உணர்த்தினார்.

பின்தொடர்தல் என்னும் வன்முறை இப்போது அதிகரித்துவருகிறது. பெண்கள் அதிக அளவில் இந்த வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடுமையான சட்டங்கள் இருந்தும் பின்தொடர்தல் குறித்துப் பதிவாகிற புகார்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது. இப்படியான வன்முறையை விதைக்கிற களமாக வீடும் சமூகமும் இருப்பதால் பதின்பருவக் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கவும் வழிகாட்டவும் வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு.

(நிஜம் அறிவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE