கமலோடுகூட சேருவோம்; ராமதாஸோடு கூட்டணி கிடையாது!- சீறுகிறார் ம.சா.ஜ.த தலைவர் ஜான் மோசஸ்

By காமதேனு

தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு முன்னதாக வழக்கம்போல பாமகவின் நிழல் பட்ஜெட்டை தாக்கல் செய்த மருத்துவர் ராமதாஸ் “இரண்டு கட்சிகளோடு கூட்டணி பேசி முடிச்சிட்டோம். ஒரு கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம், இன்னொன்று ஆம் ஆத்மி கட்சி” என்று போட்டுவிட...செய்தியாளர்கள் சற்றே ஜெர்க் ஆகிப்போனார்கள். உடனே அவர், “என்ன சைலன்ட்டா இருக்கீங்க, சப்புன்னு இருக்குதா?” என்று கேட்டபிறகுதான், மருத்துவர் அய்யா நம்மையே கலாய்த்திருக்கிறார் என்பதே பல பேருக்குப் புரிந்தது.

ராமதாஸின் இந்த கிண்டல், ‘தனிப்பெரும்’ இயக்கமான மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ரொம்பவே கோபப்படுத்தியுள்ளது. மதுரையில் இரண்டே இரண்டு வாட்ஸ் - அப் குழுக்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கட்சியையும் கட்டிக் காக்கும் அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜான் மோசஸிடம் நானும் போய், “என்னங்கய்யா... ராமதாஸ் உங்க கட்சியை இப்படிக் கேவலப்படுத்திட்டாரு?” என்று கேட்டுவிட்டேன். விட்டத்தைப் பார்த்தபடி சிந்தித்தவர், தொண்டையை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு கூட்டணி, பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னொரு கூட்டணி, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலுக்கு வேறொரு கூட்டணி என்று முடிவெடுக்கக்கூடிய ‘கொள்கை வீரர்’ மருத்துவர் ராமதாஸ், எங்களை கிண்டல் செய்திருக்கிறார். இரு மனங்கள் இணைந்தாலே பொறுத்துக்கொள்ள முடியாமல், தீக்கொளுத்துகிற ‘ஒப்பற்ற ஜனநாயக இயக்கம்’ பாட்டாளி மக்கள் கட்சி. 17 ஆண்டாக நிழல் பட்ஜெட் போடுகிற அவர், தனக்குப் பிறகும் இந்தப் பணியைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகவே தன் மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் தாமரை கூட மலர்ந்தாலும் மலர்ந்துவிடும், இவர்களால் ஒருநாளும் நிஜ பட்ஜெட் போடவே முடியாது. அந்த விரக்தியில்தான் இந்திய தேசத்தின் பேரியக்கங்களில் ஒன்றான மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வம்பிழுப்பது போன்று பேசியிருக்கிறார்.

பெண்களை கேலி செய்வது போல ஆரம்பித்து, காதலைச் சொல்கிற விடலைப் பையன் போல, எங்களைக் கேலி செய்வது போல பாவனை செய்து கூட்டணிக்குத் தூது விடுகிறார் ராமதாஸ். ஆனால் நாங்கள் அதைப் புறக்கணிக்கிறோம். கமல்ஹாசன் கட்சியோடு கூட்டணி வைத்தாலும் வைப்போமே தவிர, ராமதாஸ் கட்சியோடு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது” என்று காட்டமானார் ஜான் மோசஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE