பேசும் படம் - 8: நேரலையில் ஒரு தாக்குதல்!

By பி.எம்.சுதிர்

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வில்லனாகக் கருதப்பட்டவர் ஒசாமா பின் லேடன். 1957-ல்,சவுதி அரேபியாவில் கோடீஸ்வரருக்கு மகனாகப் பிறந்த இவர், 1988-ம் ஆண்டு அல் கொய்தா என்ற தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து சவுதியில் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மாறி மாறி தங்கியிருந்த அவர், தனது அல் கொய்தா அமைப்பின் மூலம் அடுத்தடுத்து தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியானார். ஆரம்ப கட்டத்தில் அமெரிக்காவுடன் நேசமாக இருந்த இவர், பின்னர் அந்நாட்டுக்கே சிம்ம சொப்பனமாக மாறினார்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இரட்டை கோபுரம் மீது அல் கொய்தா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மிகப்பெரிய தேடுதல் வேட்டையை நடத்தியது அமெரிக்கா. இதற்காக அவர் பதுங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்க அரசு, பாகிஸ்தானையும் தீவிரமாகக் கண்காணித்தது. ஆனால், பின் லேடன் அத்தனை எளிதாக அமெரிக்காவிடம் பிடிபடவில்லை. மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் படைகளுக்கு நீண்டகாலம் போக்கு காட்டி அலைக்கழித்தார். இறுதியில் 2011-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரவில் பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாட் (Abbottabad) என்ற இடத்தில் இருந்த பின் லேடனின் வீட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அவரைச் சுட்டு வீழ்த்தின.

பின் லேடன் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை வெள்ளை மாளிகையில் உள்ள சிச்சுவேஷன் அறையில் (the situation room) இருந்துகொண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நேரலையில் பார்த்தனர். அப்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் இங்கே காண்கிறீர்கள். அமெரிக்க வெள்ளை மாளிகையின் புகைப்படக்காரரான பீட் சோசா (Pete Souza) எடுத்துள்ள இப்படம், இந்த நூற்றாண்டின் மிக முக்கியப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் புகைப்படம் எடுத்த தருணத்தைப் பற்றி கூறும் பீட் சோசா “வெள்ளை மாளிகையில் பல்வேறு கான்ஃபிரன்ஸ் ஹால்கள் உள்ளன. பெரும்பாலும் பெரிய அறைகளில்தான் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். ஆனால், இந்தத் தருணத்தில் பின் லேடன் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளை அமெரிக்க அதிபருக்கு நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்பதால் நவீன வசதிகள் அடங்கிய சிறிய அறையில் அனைவரும் குழுமியிருந்தனர். அதிக இடம் இல்லாததால் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு அறையில் திரண்டிருந்தனர். இந்தச் சம்பவத்தின்போது மட்டும் சுமார் 100 படங்களை நான் எடுத்தேன். இருப்பினும் அறையின் மூலையில் ஒடுங்கியவாறு நின்று நான் எடுத்த இந்தப் படம் எனக்கு மிகவும் திருப்தி அளித்தது. ஒரு முக்கிய நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆர்வம் அனைவரின் முகத்திலும் பிரதிபலிப்பதே இதற்குக் காரணம். அமெரிக்க அதிபரை தனிப்பட்ட முறையில் பலமுறை படமெடுத்து இருந்தாலும் இந்தப் படத்தை என்னால் மறக்க முடியாது” என்கிறார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டபோது அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது அதைப் பார்த்த அதிர்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் வாயை மூடியபோது இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பீட் சோசா

அமெரிக்காவில் உள்ள நியூ பெட்ஃபோர்டில் 1954-ல், பிறந்த பீட் சோசா (Pete Souza), சிறுவயதில் இருந்தே புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற இவர், சனூட் டிரிபியூன் (Chanute Tribune) என்ற பத்திரிகையில் புகைப்படக்காரராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் சிகாகோ சன் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வேலை பார்த்த இவர், அமெரிக்க அதிபராக ரொனால்ட் ரீகன் இருந்தபோது, வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ புகைப்படக்காரராக இருந்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோதும் வெள்ளை மாளிகையில் புகைப்படக்காரராக இருந்தார். தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர்களின் வித்தியாசமான பல படங்களை இவர் எடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE