பழைய கம்பீரத்துடன் வரட்டும்

By காமதேனு

இர.அகிலன்
 

எம்ஜிஆரின் பிறந்தநாளான, ஜனவரி 17ம் தேதி அமெரிக்காவில் விஜயகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதை ஏற்கெனவே நமது ‘காமதேனு’ இதழில் சொல்லியிருந்தோம். அதன்படி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறார் விஜயகாந்த். அவருடைய மனைவி பிரேமலதாவும், இளைய மகன் சண்முகபாண்டியனும் கூடவே இருந்து கவனித்து வருகிறார்கள்.

“லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல் ஆகியவற்றை மக்களோடு இணைந்து உருவாக்குவோம்” என்று குடியரசு தின வாழ்த்தை அமெரிக்காவில் இருந்தபடியே வீடியோ மூலம் தெரிவித்தார் விஜயகாந்த். விஜயகாந்தின் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து தொண்டர்கள் உற்சாகமானது ஒருபுறமிருக்க... சட்டமன்றத்தில் ஜெயலலிதாவையே கம்பீரமாக எதிர்த்துப் பேசியவரின் பழைய கம்பீரக் குரலைக் கேட்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த அவர்கள் வீடியோவில் கேப்டனின் சிரமமான குரலைக் கேட்டுவிட்டு, “இன்னமும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே...” என்றும் கண்கலங்கினார்கள்.

ஜனவரி 17-ம் தேதியே விஜயகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துவிட்டாலும் இன்னும் ஒரு மாத காலமாவது அவர் தீவிர கண்காணிப்பிலும், ஓய்விலும் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அநேகமாக இம்மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவார் என்கிறார்கள் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் நண்பர்கள். குடியரசு தின வாழ்த்துக்களைக்கூட பிரேமலதாவும், மகன் சண்முகபாண்டியனும் தவிர்க்கவே சொன்னார்களாம். “உடம்புன்னு இருந்தா பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். அதுக்காக இதையெல்லாமா தவிர்க்க முடியும். கிண்டல் பண்றவங்க எப்பவும் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க” என்று சொல்லி பிடிவாதமாக வீடியோவில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் கேப்டன். அதன்பிறகுதான் அவரை உற்சாகப்படுத்த, ஜனவரி 31-ம் தேதி அவரது 29வது திருமண நாளில் கேக் வெட்டி புகைப்படமெடுத்து வெளியிட்டார் மகன் சண்முகபாண்டியன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE