பாப்லோ தி பாஸ் - 9: நேப்போல்ஸ் ‘கிங்டம்’..!

By ந.வினோத் குமார்

“டாடா…”

“சொல்லுங்க…”

“என்னோட கடைசி ஆசையைச் சொல்லட்டுமா…”

“கடைசி ஆசையா…?”

“ஆமா… நான் செத்துப் போன பின்னாடி, அந்த ஆசையை நீங்க எல்லோரும் நிறைவேத்தி வைக்கணும்…”

“ச்சீ… பாப்லோ… என்ன பேச்சு இது?”

“சத்தியம் பண்ணு…”

“பாப்லோ… அவ்வளவு சீக்கிரம் நீங்க சாக மாட்டீங்க..”

“அது எனக்குத் தெரியும். சும்மா ஒரு பேச்சுக்குத்தான்…”

“சரி சொல்லுங்க…”

“நான் செத்துப் போன பின்னாடி, என்னை நீங்க இங்கேயே புதைச்சிடணும். புதைச்சிட்டு, அது மேல ஒரு இலவமரத்தை நட்டு வைங்க. நட்டு வச்சிட்டு, அப்படியே திரும்பிப் போயிடணும். அதுக்கு அப்புறம், என்னைப் பார்க்க நீங்க யாருமே வரக்கூடாது. நாம இந்தப் பூமியில வாழறதுக்கான ஒரு கருவிதான் இந்த உடல். அதனால, என் உடலைப் பாதுகாக்கிறது பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம்!”

பாப்லோ, இப்படி டாடாவிடம் பேசிக்கொண்டபோது அவர்கள் நேப்போல்ஸில் இருந்தார்கள்.

‘ஹசியெண்டா நேப்போல்ஸ்!’

பாப்லோ, தன் கடத்தல் தொழிலில் சம்பாதித்துச் சேர்த்த சொத்துகளில், மிகவும் அருமையான சொத்து இதுதான். ஸ்பானிய மொழியில் ‘ஹசி யெண்டா’ என்றால் பண்ணை வீடு என்று பொருள். அது மெதஜின் நகரத்திலிருந்து பல மணி நேர தூரத்தில், நேப்போல்ஸ் எனும் பகுதியில் இருந்தது.

பாப்லோவின் வாழ்க்கையில் வன்முறை என்பது எப்போதும் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது ஒருபோதும், நேப்போல்ஸில் பிரதிபலித்ததில்லை. அந்த வீடு, பாப்லோவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் சொர்க்கபுரியாக இருந்தது. கொலம்பியாவில் வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு அந்த வீட்டின் செல்வச் செழிப்பு இருந்தது.

“இதுதான் என்னோட கிங்டம்..!”

இப்படித்தான், அந்த வீட்டைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவான் பாப்லோ. கஸ்தாவோவும் பாப்லோவும் சேர்ந்து அந்தப் பகுதியை 1970-களில் வாங்கி, வீடு கட்டத் தொடங்கினர். 1980-ல் வீட்டின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. சுமார் 7,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது அந்த நிலம். அங்கு ஒரு ஆறும் ஓடியது.

அந்த வீட்டின் முகப்பில் ஒரு வளைவு கட்டி, அதன் மீது ‘பைப்பர்’ எனும் சிறிய ரக விமானத்தைப் பதித்து வைத்திருந்தான். தன் வாழ்க்கையில், தான் வாங்கிய முதல் விமானம் அது. அந்த விமானத்தில்தான் சிறிய அளவில் கொக்கைன் கடத்தத் தொடங்கினான் பாப்லோ. எனவே, அந்த விமானம்தான், தனது இன்றைய வளர்ச்சிக்குக் காரணம் என்று நம்பினான். அந்த நம்பிக்கைக்கான நன்றிக் கடனாக, அதைத் தன் வீட்டின் முகப்பில் வைத்தான்.

நீச்சல் குளங்கள், ஜக்கூஸிக்கள், டென்னிஸ் கோர்ட்டுகள், கூடைப்பந்தாட்ட மைதானங்கள், உள்/வெளி சாப்பாட்டு அறைகள், சினிமா தியேட்டர்கள், டிஸ்கொத்தே எனப் பல வசதிகள் அங்கே இருந்தன. விதவிதமான கார்கள், பைக்குகள், படகுகள், ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள், அந்த விமானங்கள் தரையிறங்க ரன்வேக்கள் என சகலவிதமான போக்குவரத்துகள் அங்கே இருந்தன. ‘போர் அடிக்குதுப்பா!’ என்ற வார்த்தைகளையே நாம் மறந்துபோகும் அளவுக்கு, அங்கு சகலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன.

27 செயற்கை ஏரிகள், ஓராயிரம் பழ மரங்கள், லத்தீன் அமெரிக்காவிலேயே பைக் பந்தயங்களுக்கான பெரிய ‘ட்ராக்’, ஜுராஸிக் பார்க், 1,700 பணியாளர்கள் என நேப்போல்ஸ் நிறைந்திருந்தது.

குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் அகர வரிசைப்படி, முதல் தளத்தில் குளியலறையுடன் கூடிய தனித்தனி அறைகள் இருந்தன. இரண்டாவது தளம் முழுக்க, பாப்லோவுக்கும் கஸ்தாவோவுக்கும் மட்டுமே சொந்தம். அவர்களது அனுமதியின்றி அங்கு யாரும் வந்துவிட முடியாது. நள்ளிரவில் பசித்தாலும், எதைச் சாப்பிட விருப்பப்பட்டாலும், அவற்றைச் சமைத்துத் தருவதற்கான சமையல் கலைஞர்கள் 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருந்தனர்.

இந்தக் காலத்தில், பாப்லோ மூன்று விஷயங்களைப் பின்பற்றத் தொடங்கினான். அவற்றைக் கடைசி வரை அவன் மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒன்று, அவனது சிகையை அவனேதான் பராமரித்தான். ஆம்… அவனது முடியை அவனே வெட்டிக்கொள்வான். இரண்டு, ஒரே விதமான ‘சீப்’பைத்தான் பயன்படுத்தினான். ஆமை ஓட்டினால் செய்யப்பட்டது அந்த சீப்பு. மூன்று, நீண்ட நேரம் ஷவரில் குளிப்பான். அதுவும் ‘ஓப்பெரா’ வகை இசைப் பாடல்களைப் பாடிக்கொண்டே குளிப்பது அவனது வழக்கம்.

தன்னைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் இருப்பதை விரும்பியவன் பாப்லோ. அதனால் நேப்போல்ஸில் எப்போதும் கூத்தும் கொண்டாட்டமும்தான். அங்கு நடந்த ‘பார்ட்டி’கள் ஹாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளை மிஞ்சின. இசைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள், அழகிப் போட்டிகளில் வென்ற அழகிகள், தொழிலதிபர்கள், ஓவிய, சிற்பக் கலைஞர்கள் எனப் பலரும் அங்கு வந்து சென்றனர். தங்களது தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி கேட்க, நேப்போல்ஸைவிடச் சிறந்த இடம் எதுவும் அரசியல்வாதிகளுக்கு இருக்கவில்லை.

பெஸோஸ்… கொலம்பியப் பணத்தின் பெயர். அந்த பெஸோஸ், பாப்லோவிடம் எண்ணிடலங்காத அளவுக்கு இருந்தது. அந்தப் பணத்தைக் கட்டுக் கட்டாக வைப்பதற்குத் தேவையான ரப்பர் பேண்டுகளுக்காக மட்டும் ஒரு மாதத்துக்குச் சுமார் 2,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்) செலவிடப்பட்டன என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் வசதிகளை ஏற்படுத்தியதோடு, வீட்டுக்கு வெளியே இருந்த வசதிகளையும் குடும்பத்துடன் அனுபவித்தான் பாப்லோ. அமெரிக்காவின் டிஸ்னி லேண்டுக்குச் சுற்றுலா செல்வது, அன்றைய அமெரிக்காவின் பிரபல பாடகர் ஃபிராங்க் சினடராவைச் சந்திப்பது, இன்னொரு பிரபலப் பாடகர் மறைந்த எல்விஸ் ப்ரெஸ்லி வாழ்ந்த வீட்டுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பது என வாழ்க்கையைக் கொண்டாடினான் பாப்லோ. மிகவும் சாதாரண நிலையிலிருந்து வந்த அவன், வாழ்க்கையில் தான் அனுபவிக்கும் ஒவ்வொரு சுகமும் தரமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பியவன். அவன் ஆசைப்படியே வாழ்க்கை அமைந்தது!

அப்படி இருந்தால் யாருக்குத்தான் பொறுக்கும்…? பாப்லோவின் செல்வத்தின் மீது குறி வைக்கப்பட்டது. அதுவும் எதிர்பாராத இடத்திலிருந்து..!

(திகில் நீளும்...)

பேர் செல்லும் கிளி..!

பாப்லோ, முதன்முதலில் அந்த நிலப்பகுதியை வாங்கியபோது, அதனுடைய பெயர் ‘வல்லேதுபார் எஸ்டேட்’ என்பதாக இருந்தது. அதை நேப்போல்ஸ் என்று பெயர் மாற்றினான் பாப்லோ. காரணம் என்ன தெரியுமா..? அல் கபோன். அவனும் பாப்லோவைப் போல அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு கடத்தல்காரன். சொல்லப் போனால், தனக்கான ரோல் மாடலாக அல் கபோனைக் கருதினான். ஒரு முறை, ஜப்பானிய பத்திரிகையாளர் ஒருவர் பாப்லோவிடம், ‘அல் கபோனைவிடப் பெரியவனாக உங்களைக் கருதுகிறீர்களா..?’ என்று கேட்டதற்கு, ‘அல் கபோன் எவ்வளவு உயரம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரைவிட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் மேலானவன் நான் என்று நினைக்கிறேன்’ என்றான் பாப்லோ..!



அந்த அல் கபோனின் தந்தை, இத்தாலி நாட்டில் உள்ள நேப்பிள்ஸ் எனும் பகுதியில் பிறந்தவர். அல் கபோனுக்குத் தன் மரியாதையைச் செலுத்தும்விதமாக, தான் வாங்கிய எஸ்டேட்டுக்கு ‘நேப்போல்ஸ்’ என்று பெயரிட்டான்.

நேப்போல்ஸில் யாரும் மறக்க முடியாத விஷயம் ஒன்று, இருந்தது. தனியார் மிருகக்காட்சி சாலையை பாப்லோ வைத்திருந்தான். அந்த ‘ஜூ’வில் நீர் யானைகள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள், வரிக்குதிரைகள், கங்காருக்கள், டால்பின்கள், குரங்குகள், ஆஸ்ட்ரிச் பறவைகள் உள்ளிட்ட பலவிதமான காட்டுயிர்களைக் கடத்தியும், சிலவற்றைச் சட்டபூர்வமாக இறக்குமதி செய்தும் வளர்த்து வந்தான் பாப்லோ.

அவனிடம், ஒரு கிளி இருந்தது. அந்தக் கிளிக்கு ‘சின்சோன்’ என்று பெயரிட்டான் பாப்லோ. கொலம்பியாவில் உள்ள தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களின் பெயர்களைச் சொல்லும் திறமை வாய்ந்த கிளி அது. அதற்கு விஸ்கி குடிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு நாள் அப்படிக் குடித்துவிட்டு, தனது கூட்டிலிருந்து விழுந்துவிட, அதை ஒரு பூனை சாப்பிட்டுவிட்டது.

அன்றிலிருந்து, நேப்போல்ஸில் பூனைகள் வளர்க்கத் தடை விதித்தான் பாப்லோ. பூனைகளுக்கு மட்டுமல்ல… சிங்கம், புலி போன்ற ‘பெரிய பூனை’களுக்கும் தடை விதிக்கப்பட்டது!

அந்த ‘ஜூ’ பொதுமக்கள் பார்வைக்காக, இலவசமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. “இது கொலம்பியர்களுக்கு உரித்தானது. அதனால் நாங்கள் பணம் வசூலிப்பதில்லை!” என்று காரணம் சொன்னான் பாப்லோ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE