விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 26: ஏடிஜிபி சைலேந்திரபாபு

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

ரயில்வே போலீஸ் ஏடிஜிபி-யான சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர். காவல் பணியையும் தாண்டி இளைஞர் நலன், உடல்நலம் ஆகியவற்றிலும் அதீத அக்கறை கொண்டவர். வாசிப்பும் எழுத்தும் இவரது கூடுதல் அடையாளங்கள். கடந்த இருபது ஆண்டுகளாக இலவசமாக ஐஏஎஸ் பயிற்சியும் வழங்கிவரும் சைலேந்திரபாபு இந்த வார விஜபி-க்களின் விருந்து சாப்பாடு பற்றிப் பேசுகிறார்.

“நான் இயற்கையான சூழலில் வளர்ந்தவன். எங்க வீட்டைச்சுற்றி தோட்டத்துக்கான இடம் கம்மின்னாலும் மரவள்ளி, உளுந்து, சிறுகிழங்கு, துவரம்பருப்புன்னு ஏதாவது சத்தான உணவுப்பொருள்களின் சாகுபடி நடந்துகிட்டே இருக்கும். அதேமாதிரி எங்க ஊரில் நொங்கு, இளநீர், பதநீரெல்லாம் தாராளமா கிடைக்கும்.

என்னோட அம்மா ரத்தினம்மாளுக்கு 90 வயசு ஆகுது. சென்னையில் இருந்து, ஊருக்கு அம்மாவைப் பார்க்க வரும்போதெல்லாம் நொங்கு சர்பத் கடையில் வண்டியை ஒதுக்கிடுவேன். நொங்கு போட்டு போடுற இந்த சர்பத் ரொம்ப ருசியா இருக்கும். ரோட்ல நின்னு சாப்பிடணுமேனு கவலைப்படாமல் காரை ஒதுக்கிருவேன். அதேமாதிரி நல்ல இளநீரைப் பார்த்தாலும் ஒதுக்கிருவேன்.

இப்பவும் ஊருக்கு வந்தால் இளநீர், பதநீர், நொங்குன்னு எனக்காக பாசத்தோடு ரெடி செஞ்சு வச்சுருப்பாங்க. அதேமாதிரி குமரி மாவட்டத்தில் கூவை, சக்கரைவள்ளி, காய்ச்சில்ன்னு பலவகையான கிழங்குகள் கிடைக்கும். படந்தாலுமூடு சந்தையில் இதுக்குன்னு பிரத்யேகக் கடைகளும் இருக்கும். ரசாயனம் போட்டு பழுக்க வைக்காமல் தானாகவே கனிந்த நல்ல வாழைப்பழங்களும் எங்க ஊரில் கிடைக்கும். எங்க பகுதியில் சரளமாக இருக்கும் சம்பாஅரிசிச் சோறும், குதிப்புமீனும் சாப்பிட நல்ல ருசியா இருக்கும். என்னோட உடல் உறுதிக்கு அடித்தளம் இட்ட உணவுகளும் இவைகள்தான்.

சின்ன வயசுல மிலிட்டரிக்குப் போகணும்னு ஆசை. ஸ்கூல் விட்டு வந்ததும் எங்க தோட்டத்து தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிச்சுக் குடிப்பேன். ஒரு கட்டத்தில் என் வீட்டில் அந்த மரத்தை எனக்குன்னே விட்டுட்டாங்க. எங்க வீட்டில் இன்னொரு வழக்கம் உண்டு. தோட்டத்தில் தானாக விழுந்த தேங்காயை யார் எடுத்தாலும் அதை அவுங்களே வித்துக்கலாம். வீட்டுல கோழிகளும் இருந்துச்சு. அதோட முட்டையை யார் பார்த்தாலும் எடுத்து வித்துக்கலாம். சின்னவயசுல அந்தப் பணத்தை சேர்த்து வெச்சுத்தான் ஹோட்டலுக்குப் போவேன்.

என்னோட பள்ளிக்காலங்களில் குழித்துறை ஜங்ஷன்ல ‘த்ரீஸ்டார் லஞ்ச் ஹோம்’ன்னு ஒண்ணு இருந்துச்சு. அங்கபோய் அந்தக் காசில் ‘சிக்கன் ஃப்ரை’ சாப்பிடுவேன். உடலை உறுதியாக்கணும்னுதான் காசு சேர்த்து சிக்கன் சாப்பிடுவேன். ஆனா, எங்க அம்மாவுக்கு நான் ஹோட்டல்ல சாப்பிட்டா பிடிக்காது. இப்பவும் நான் ஊருக்கு வந்தா அவுங்க கையால சாப்பிடணும்ன்னு ஹோட்டலுக்கு விட மாட்டாங்க. ஆனா, நான் ஊருக்குப் போனா இப்பவும் அந்த ஹோட்டலுக்குப் போயிடுவேன். இப்ப அந்த உணவகத்தோட பேரு ‘மயூப் கிங்’ன்னு மாறி இருக்கு. அங்க ஸ்பெஷலே புரோட்டாவும், மட்டன் கறியும் தான்.

வருஷத்துக்கு ஒரு தடவை குழித்துறை அரசுப்பள்ளியில் படிச்ச முன்னாள் மாணவர்கள் சந்திப்போம். கூட்டம் முடிஞ்சதும் நேரா இந்த ஹோட்டலுக்குத்தான் வருவோம். புரோட்டாவும், மட்டன்கறியும் சாப்பிட்டுட்டு அதுக்கு மேல ஒரு டீ குடிப்போம். அந்த டீ ருசியை தமிழகத்தில் வேறு எங்கையுமே நான் ருசிச்சது இல்ல. காரணம் என்னன்னா, மசாலா, இஞ்சின்னு எதுவும் சேர்க்க மாட்டாங்க. கறந்த பசும்பால், சுத்தமான மழைநீர் சேர்ந்த கிணற்றுநீர்ன்னு அதோட சுவைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவே நான் பெரும் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சேன்.

பொதுவாக உணவு சார்ந்து இளைஞர்களுக்கு ஒண்ணு சொல்லியாகணும். எந்த உணவையும் சாப்பிடலாம். ஆனால், அளவோடு சாப்பிடணும். காய்கறி, பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கணும். சாப்பிட்ட பின்னாடியும் எப்போதும் பசி இருக்கணும். அதுக்கு அர்த்தம் அரை வயிறு சாப்பிட்டா போதும். ஏன்னா, வயிறுமுட்ட சாப்பிடுறது தற்கொலைக்குச் சமம். மத்தபடி எதை விரும்பிச் சாம்பிட்டாலும் தப்பில்லை. நான் ‘மயூப் கிங்’கில் புரோட்டா, மட்டனை விரும்பி சாப்பிடுவது போல” என்று புன்னகைக்கிறார் சைலேந்திர பாபு.

அவர் சொன்ன ‘மயூப் கிங்’கின் உரிமையாளர் முகமது ரிபாயிலிடம் பேசினேன். “இந்த உணவகத்தை நான் 27 வருசமா நடத்திக்கிட்டு இருக்கேன். சைலேந்திரபாபு சார் சொன்னதுமாதிரி இங்க புரோட்டாவும் மட்டன்கறியும் தான் ஃபேமஸ். மட்டன்கறிக்கு மட்டனை 20 கிராம் அளவுக்கு சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிக்கணும். இன்னொரு பாத்திரத்தில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கணும். அது நல்லா வதங்கியதும், கட் செய்து வைத்திருக்கும் மட்டனை அதில் போடணும். அது நன்றாக வெந்ததும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், பெருஞ்சீரகத்தூள், கறிமசாலா, ரம்பை இலை, புதினா ஆகியவற்றைப் போட்டு மீண்டும் சற்று வேகவைத்து இறக்கினால் மட்டன்கறி ரெடி.

புரோட்டாவைப் பொறுத்தவரை, ஒரு கிலோ மைதாவுக்கு 600 கிராம் தண்ணீர் சேர்ப்போம். டால்டா, எண்ணெய், மைதா எல்லாம் முதல்தர கம்பெனி பொருள்களையே வாங்குவோம். எங்க கடை டீ, புரோட்டா செய்முறைகளில் வேற பிரத்யேகமான சூத்திரம் எதுவும் இல்லை. ரெண்டுமே மாஸ்டர்களின் கைவண்ணம்தான்” என்றார் அவர். ‘மயூப் கிங்’கில் மட்டன் கறி 120 ரூபாய். புரோட்டா 6 ரூபாய். அப்புறம், கடையில் கறியாக வாங்காமல் இவர்களே ஆட்டை வாங்கி வெட்டுகிறார்கள் என்பது கூடுதல் தகவல். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE