பாப்லோ தி பாஸ் 8: ப்ளாட்டா ஓ ப்லோமோ…?

By ந.வினோத் குமார்

கொலம்பியா, பெரு, பொலிவியா… உலக அளவிலான கொக்கைன் தயாரிப்பிலும் கடத்தலிலும் இந்த நாடுகள்தான் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. பாப்லோ காலத்துக்கு முன்னும் பின்னும் இதுதான் நிலை..!

‘பாப்லோ நெடுங்காலமாகத் திட்டமிட்டு, கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கொக்கைன் கடத்தினான்’ என்று பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கொக்கைனை அமெரிக்காவுக்குக் கடத்தும் வாய்ப்பு இருந்தது, உடனே அதை பாப்லோ எடுத்துக்கொண்டான். அவ்வளவுதான்!

ஒரு காலத்தில் அமெரிக்காவில் கொக்கைன் பயன்பாட்டுக்குப் பெரிய அளவில் தடை எல்லாம் இருக்கவில்லை. சொல்லப் போனால், கொக்கைன் என்றால் என்னவென்றே அங்கு பலருக்கும் தெரியாது. ஆனால் மாரியுவானா, அங்கு பரவலான பயன்பாட்டில் இருந்தது. அதுவும்கூட, கொலம்பியாவிலிருந்துதான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நீண்டகாலத்துக்கு இந்த வணிகம் தொடர்ந்ததால், அங்கு கொக்கைனுக்கு வேலை இருக்கவில்லை.

அமெரிக்கர்கள் ஒரு கட்டத்தில், தங்களுடைய நாட்டிலேயே மாரியுவானாவை வளர்க்கத் தொடங்க, மேலே சொன்ன நிலை மாறியது. கொலம்பியாவின் மாரியுவானா ஏற்றுமதி குறைந்தது. லாபமும் குறைந்தது. கைவிட்டுப்போகும் லாபத்தை மீண்டும் நிலைநிறுத்த, மாரியுவானாவுக்கு மாற்றான பொருள் ஏதேனும் உண்டா என்று கொலம்பியர்கள் பலரும் தேடி வந்தார்கள். அப்போதுதான் கொக்கைன் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகத் தொடங்கியது.

ஆங்கிலத்தில் ‘ரைட் டைம் அட் ரைட் பிளேஸ்’ என்ற ஒரு சொற்பதம் உண்டு. அதாவது, மிகச் சரியான இடத்தில், மிகச் சரியான நேரத்தில் இருத்தல் என்பது பொருள். பாப்லோ, மிகச் சரியான நேரத்தில், மிகச் சரியான இடத்தில் இருந்து கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டான். அவன் வந்த நேரம், அமெரிக்கர்கள் தங்களது போதையின் அளவை நீட்டிக்க, அந்தத் திளைப்பின் அடர்த்தியை அதிகரிக்க மாரியுவானாவைத் தவிர வேறு பொருள் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

கடத்தல் என்றவுடன் பெரிய அளவில் எல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் நபர் அணிந்திருக்கும் கோட்டுக்குள்ளே சின்னக் கிழிசலை ஏற்படுத்தி, அதற்குள் உள்ளங்கை அளவேயான ஒரு பொட்டலத்தை வைத்துத் தைத்துவிட்டால் போதும். விமான நிலையங்களில் இன்றைக்கு உள்ளதுபோல, அன்று ‘எக்ஸ்-ரே’ இயந்திரங்களோ, பயணிகளின் உடைமைகளைச் சோதிக்கும் ‘டிடெக்டர்’களோ இருக்கவில்லை. இதனால் இப்படியான ‘கோட் வழி’ கடத்தல் சுலபமாக நடந்தது. அந்த ஒரு பொட்டலத்தை அமெரிக்
காவில் உள்ள டீலருக்குக் கைமாற்றிவிட்டால் போதும், அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு டாலர்களில் காசு கிடைக்கும். என்றால்… எந்த அளவுக்கு அமெரிக்கர்கள் போதையில் மூழ்கிப் போகக் காத்திருந்தார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்!

அந்த உள்ளங்கை அளவு பொட்டலத்துக்கே அன்று அமெரிக்காவிலும் தேவை இருந்தது. காரணம், ஆரம்பத்தில் அமெரிக்காவின் உயர்தட்டு மக்கள் மட்டுமே கொக்கைனைப் பயன்படுத்தி வந்தார்கள். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், திரைப்படத் துறையைச்
சேர்ந்தவர்கள், விளம்பரத் துறைகளில் இருந்தவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபட்டவர்கள், இசைத் துறையில் ஜொலித்தவர்கள், ‘ஸ்டூடியோ 54’ போன்ற ‘நைட்கிளப்’புகளுக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் ஆகியோர்தான் கொக்கைன் பயன்படுத்துவோர் பட்டியலில் இருந்தனர்.

1977-ம் ஆண்டு மே மாத ‘நியூஸ்வீக்’ இதழில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில், ‘செலிபிரிட்டி பார்ட்டி’களில் ‘பெலுகா கேவியர்’ எனும் உணவு, ‘டாம் பெரிஞான்’ எனும் ஷாம்பெய்ன் ஆகியவற்றுடன் கொக்கைனும் விநியோகிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாயின. இதில் ‘பெலுகா கேவியர்’ என்பது ‘பெலுகா’ எனும் மீன் இனம் இடுகின்ற முட்டை. ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே உள்ள காஸ்பியன் கடலில் மட்டுமே தென்படும் அந்த மீன், ‘அழியும் நிலையில் உள்ள உயிரினமாக’ கருதப்படுகிறது. ‘டாம் பெரிஞான்’ என்பது பணக்காரர்களால் மட்டுமே சுவைத்துப் பார்க்க… மன்னிக்க, நினைத்துப் பார்க்க முடிகிற அளவுக்கு விலை உயர்ந்த ஷாம்பெய்ன். இந்தியாவில், அந்த ஷாம்பெய்னின் விலை, 2018 அக்டோபர் மாத நிலவரப்படி சுமார் ரூ.17,300 ஆக இருந்தது. அந்த முட்டை, அந்த ஷாம்பெய்ன் ஆகியவற்றுடன் கொக்கைனும் பரிமாறப்பட்டது என்றால், அன்று அமெரிக்கர்கள் கொக்கைனுக்கு எவ்வளவு பெரிய மதிப்பைக் கொடுத்தார்கள் என்று நினைத்துப் பாருங்கள்!

கொலம்பியாவிலும் கொக்கைன் கடத்தல் என்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. மாரியுவானாவைப் போல அதுவும் ஒரு போதையூட்டும் பொருள் என்ற அளவில் மட்டும்தான் அந்நாட்டு அரசும் கொக்கைனை எடை போட்டது. பிற்காலத்தில், கொக்கைன் கடத்தலால் வன்முறைகள் ஏற்பட்டபோதுதான், அதனுடைய உண்மையான வீரியத்தை கொலம்பியா உணரத் தொடங்கியது.

முற்காலங்களைப் போல, கொலம்பியாவிலும் அமெரிக்காவிலும் கொக்கைன் என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட போதைப் பொருளாக மாறும் என்று கொலம்பியர்கள் நம்பினார்கள். அப்படி நம்பியவர்களில், பாப்லோவும் ஒருவன். எனவே, அமெரிக்காவுக்கு கொக்கை
னைக் கொண்டு போகலாம் என்று பாப்லோ முடிவெடுத்தபோது, அதற்கு யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

தொடக்கத்தில், பாப்லோ மேற்சொன்ன ‘கோட்’ வழியாகவே அமெரிக்காவுக்கு கொக்கைனைக் கடத்தினான். பிறகு, தேவை அதிகரிக்க, ஒரு வாரத்துக்கு ஒரு சிறிய விமானத்தில் ஒரு முறை மட்டும் ‘லோட்’ ஏற்றி அனுப்பினான். இன்னும் தேவை அதிகரித்தது. ஒரு வாரத்துக்கு மூன்று முறை சரக்குகளை அனுப்பினான். ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத பழைய விமானத்தின் சக்கரங்களில் கொக்கைன் பொட்டலங்களை மறைத்து வைத்துக் கடத்தினான்.

பாப்லோ தன்னுடைய கடத்தல் வியாபாரத்தில் ஒரே ஒரு தத்துவத்தைத்தான் பின்பற்றினான். அது ‘ப்ளாட்டா ஓ ப்லோமோ..!’ அப்படியென்றால் ஸ்பானிய மொழியில் வெள்ளியா, ஈயமா என்று பொருள். தன்னுடைய தொழிலுக்கு உதவி செய்யும் அரசு அலுவலர்களுக்கு வெள்ளிப் பணமும், தன் தொழிலுக்குக் குறுக்கே நிற்பவர்களுக்கு ஈயத் தோட்டாவையும் பரிசளிப்பது பாப்லோவின் வழக்கம். பணமா, தோட்டாவா என்ற ‘சாய்ஸில்’ பலரும் ‘ப்ளாட்டாவையே’ தேர்வு செய்தனர்..!

கொக்கைன் பயன்பாடு அமெரிக்காவில் பரவலாகி வருவதை மோப்பம் பிடித்த அந்நாட்டின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ‘ட்ரக் என்ஃபோர்ஸ்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷன்’ (சுருக்கமாக டி.இ.ஏ), கொலம்பியாவிலிருந்து வரும் அந்தச் சக்கரங்களை ஆய்வு செய்யத் தொடங்கியது. உடனே சுதாரித்துக்கொண்ட பாப்லோ, அந்த ‘டயர்’ கடத்தல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அமெரிக்காவுக்கு கொக்கைனைக் கடத்த பாப்லோ பின்பற்றிய வழிகள் புதுமையானவை. ‘கோட்’, ‘டயர்’ ஆகிய முறைகளுக்குப் பிறகு, ‘சூட்கேஸ்’ மூலமாக கொக்கைன் கடத்தினான். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை… கொலம்பியாவிலிருந்து சிலருக்கு அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து, அவர்கள் கொண்டு செல்லும் சூட்கேஸின் அடிப்பகுதியைக் கிழித்து, அதில் பொட்டலங்களை நிரப்பித் தைத்து அனுப்பிவிடுவான். மீண்டும் அமெரிக்காவிலிருந்து கொலம்பியாவுக்கு அவர்கள் திரும்பும்போது, அதேபோல சூட்கேஸின் அடிப்பகுதியைக் கிழித்து, அதில் டாலர் நோட்டுக் கட்டுகளை வைத்து அனுப்பிவிடுவார்கள்.

சூட்கேஸ் கொண்டு போக முடியாத பட்சத்தில், அவர்கள் அணிந்திருக்கும் ஷூவின் அடிப்பகுதியில் சிறிய பொட்டலங்களை நிரப்பி அனுப்புவான். ‘மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள்’ என்று சொல்லி வீல்சேர்களில் பயணிகளை உட்கார வைத்து, விமான நிலைய அதிகாரிகளை ஏமாற்றி கொக்கைனைக் கடத்தினான். பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் குச்சியிலும் கொக்கைனை நிரப்பி அனுப்பிவிடுவான்.

பிறகு, ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றில் வைத்து சரக்குகளைக் கடத்திய பாப்லோ, மேலும் புதிய முறையில் கடத்தலை மேற்கொள்ள ஆர்வமாக இருந்தான். காரணம், வழக்கமான எந்த முறையில் கடத்தினாலும் பின்னாலேயே டி.இ.ஏ. மோப்பம் பிடித்து வந்துவிடுகிறது. எனவே, பாப்லோ சில வேதியியல் நிபுணர்களை வேலைக்கு அமர்த்தினான். அவர்களது வேலை, ‘இந்தப் பொருளில் கொக்கைன் உண்டு’ என்று தெரியாதபடிக்கு கொக்கைனை எப்படிக் கடத்துவது என்பதற்கான ஆய்வுகளைச் செய்வதுதான்.

அதற்கான பலன் கிடைத்தது. பிளாஸ்டிக், உலோகங்கள், திரவங்கள் போன்றவற்றில் கொக்கைனைக் கலந்து, அது சேர வேண்டிய இடத்துக்குச் சேர்ந்த பின்னர், அந்தப் பொருட்களிலிருந்து கொக்கைன் தனியே பிரித்தெடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இப்படி பி.வி.சி. பைப்புகள், தெய்வ உருவச் சிலைகள், பழச்சாறுகள், ஃபைபர் கண்ணாடிகள் ஆகியவற்றின் மூலமாக கொக்கைனைக் கடத்தினான் பாப்லோ.

இந்த வகையில், அவன் இன்னொரு புதிய முறையைக் கையாண்டான். அதுதான் ‘ப்ளூ ஜீன்ஸ்’ முறை. நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டுகளை கொக்கைன் கலந்த நீரில் ஊறவைத்து எடுப்பான். அவை அமெரிக்காவுக்குச் சென்று சேர்ந்ததும், மீண்டும் அந்த பேன்ட்டுகளை நீரில் அமிழ்த்தி, கொக்கைன் தனியாகப் பிரித்தெடுக்கப்படும்.

மேற்கண்ட முறைகளில், பல காலம் கொக்கைனைக் கடத்தி வந்த நிலையில், அவற்றையும் ‘டி.இ.ஏ’ மோப்பம் பிடிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகுதான் மனிதர்களைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆமாம்… மிகவும் ஆபத்தான கடத்தல் முறை அது. ஆணுறைகளில் கொக்கைன் பொடி நிரப்பப்பட்டு, அவற்றை எண்ணெய்யில் தடவி, பிரசவமான பெண்களுக்குக் கொடுப்பான். பணத்துக்கு ஆசைப்பட்டு, அவர்களும் அதை விழுங்குவார்கள். கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் போனதும், விமான நிலைய கழிவறைக்குச் சென்று, அதை வெளியேற்றிவிடுவார்கள். இந்தப் பயணத்தில், வயிற்றுக்குள்ளிருக்கும் ஒரு பொட்டலம் ‘லீக்’ ஆகிவிட்டால்கூட, அந்தப் பயணி இறந்துவிடுவார்.

இப்படிப் பலவாறு கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டதால், இதர கார்ட்டெல்களைக் காட்டிலும், அமெரிக்காவில் மெதஜின் கார்ட்டெலின் கொடி உயர உயரப் பறக்கத் தொடங்கியது. டி.இ.ஏ-யால் கவனிக்கப்பட வேண்டிய குற்றவாளியாகவும் மாறினான் பாப்லோ..!

(திகில் நீளும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE