கட்சிக்குள் இன்னொரு பிரளயம்?- எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் சி.வி. சண்முகம்!

By காமதேனு

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்ச்சல் காட்டியதும் அதற்கு எதிராக, ‘அமைச்சர்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்’ என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றி முதல்வரிடம் தந்ததும் தமிழக ஆட்சி - அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் பின்னணியில் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகச் சர்ச்சைகள் மட்டுமே அலசப்படுகின்றன. ஆனால், உள் விவகாரம் வெறொன்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதிமுகவையும் அமமுகவையும் இணைத்து ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இன்னுமிருக்கும் இரண்டு ஆண்டு ஆட்சியைத் தக்கவைக்கும் நினைப்பில் அதிமுக தரப்பிலும் முக்கிய அமைச்சர்களே அணிகள் இணைப்புக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலா குடும்பம் மீண்டும் அதிமுகவுக்குள் வருவதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறார்கள். ஆனாலும் இவர்களது எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் இணைப்பு முயற்சிகளுக்கு அச்சாரம் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் யாருமே  எந்தக் கேள்வியும் கேட்காதபோது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராகத் தாமாக முன்வந்து அனல் கக்கும் கருத்துக்களை வெளியிட்டார் சண்முகம். அவரது ஆதரவாளர்களோ, “ராதாகிருஷ்ணனும் தினகரனும் இன்னமும் நல்ல நட்பில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் பாராட்டுப்பத்திரம் வழங்கியது” என்று கூடுதலாக கொளுத்திப் போடுகிறார்கள்.

இந்தச் சூழலில், சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக அதிமுக எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் சிலரும் அணி சேர்ந்திருக்கிறார்கள். “சண்முகம் பேசியது அவரது சொந்தக் கருத்து” என ஓபிஎஸ் நழுவிக்கொள்ள, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் முதல்வர் ஈபிஎஸ்! இப்படியான சூழலில் சண்முகத்தின் கருத்தை ஆதரிக்கும் விதமாக அதிமுக எம்பி, எம்எல்ஏ-க்கள் சிலர் கூட்டாகப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு ஆதரவு என்பதைவிட இது அதிமுக தலைமைக்கு சண்முகம் தரப்பு விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை என்று சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE