திருவாரூர்... இது சூழ்ச்சிகளின் தேர்தல்

By காமதேனு

மொத்தமாய் இருபது சட்டமன்றத் தொகுதிகள் காலியாகிக் கிடக்கையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் திடீரென்று, ‘ஜனவரி 28-ல் தேர்தல்’ என அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். “இதில் ஏதோ சூட்சுமம் இருக்கு” என்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். வாக்காளர்களோ, “இதற்கு முன்பு தேர்தல் வேலைகள் துவங்கிய நிலையில் தள்ளிவைக்கப்பட்ட தேர்தல், கஜா புயல் தாக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மட்டும் நடந்துவிடப் போகிறதா?” என்று நகைக்கிறார்கள். இந்த நகைப்பின் நியாயத்தை உணர்த்துவதுபோல், தேர்தலை நிறுத்தக்கோரி நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கலாகி உள்ளன.

தேர்தலுக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் இடைத்தேர்தல் பணிகளை ஜரூராகத் தொடங்கிவிட்டது தேர்தல் ஆணையம். ஜனவரி முதல் தேதியிலிருந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால், அரசியல் களத்திலோ “இது சூழ்ச்சிகளின் தேர்தல். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பாஜக தங்களுக்குத் தோதான காட்சிகளை அரங்கேற்றுவதற்காக நடத்தும் நாடகத்தின் ஒரு அங்கமே திருவாரூருக்கு மட்டும் நடக்கும் இடைத்தேர்தல்” என்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பலவிதமான உத்திகளைக் கையாள்கிறது பாஜக. தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து அதிகபட்சம் 30 தொகுதிகளைத் தங்களுக்கும் தங்களது கூட்டணிக்கும் பெற்றுவிட வேண்டும் என்பது பாஜக போடும் கணக்கு. அதற்கான முதல்படி அமமுகவையும் அதிமுகவையும் இணைப்பது. முதலில் ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து பிரித்து தர்மயுத்தம் நடத்தவைத்து பிறகு மீண்டும் அதிமுகவில் ஐக்கியப்படுத்தியது போல தற்போது அமமுகவையும் அதிமுகவுடன் இணைக்கும் அரசியல் விளையாட்டை ஆடத் தொடங்கியுள்ளது பாஜக. இதற்கான முழுப் பொறுப்பையும் பக்கத்து மாநிலத்தின் முக்கிய அதிகாரத்தில் இருக்கும் சட்டப்புள்ளியிடமும் சசிகலாவின் தம்பி திவாகரனிடமும் ஒப்படைத்திருக்கிறார்கள். இதற்காக கடந்த 2-ம் தேதி திவாகரன் டெல்லிக்கு ரகசியப் பயணமும் சென்று வந்திருக்கிறார்.

இந்த இணைப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், ‘சசிகலாவின் சிறைவாசத்துக்கு விடைகொடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடரலாம். ஆனால், அதிமுகவை சசிகலாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற இரண்டு கோரிக்கைகள் சசிகலா தரப்பிலிருந்து பிரதானமாக வைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த டீலுக்கு ஒத்துக்கொண்டே காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறது பாஜக. இதையடுத்து, சசிகலா தரப்புக்கு ஆதரவான அரசியல் நகர்வுகளும் நடக்க ஆரம்பித்துள்ளன. சட்டத்தின் பிடிக்குள் இருக்கும் சில விஷயங்கள் சசிகலாவுக்கு சாதகமான திசைக்குத் திரும்பியிருக்கின்றன. இதையெல்லாம் டீலின் அடையாளமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆக, தங்களின் தேர்தல் ஆதாயத்துக்காக மீண்டும் அதிமுகவை மன்னார்குடி வகையறாக்களின் மடியில் தவழவைப்பதற்கான வேலைகளில் மெனக்கெடுகிறது பாஜக.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE