அம்மா இருந்திருந்தாலும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியிருப்பார்!- வைகைச்செல்வன் பேட்டி

By காமதேனு

ஆட்சிக்கு எதிராக ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதிமுக சரித்திரத்தில் நீண்ட நாட்களாகத் தொலைந்து போயிருந்த பல நல்ல காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சற்றே கூடுதலாக இருந்தாலும் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் மனதில் பட்டதைப் பளிச்செனப் பேசுகிறார்கள். மு.க.அழகிரியோடு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக போலியான ஒரு போட்டோவை ஜெயலலிதாவுக்கு அனுப்பி அதன் மூலம் அவரது அமைச்சர் பதவிக்கே வேட்டுவைத்த வரலாறு அதிமுகவுக்கு உண்டு. அத்தகைய அநாகரிகம் எல்லாம் இப்போது போயே போச்! இப்போது திமுகவினர் இல்ல விசேஷங்களில் அதிமுக தலைகளையும் அதிகம் பார்க்க முடிகிறது.

இப்போது இன்னொன்றும் நடந்திருக்கிறது. கடந்த 3-ம் தேதி, சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீது பேசிய முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு சூட்டிய புகழாராமும் அவரது அருமை பெருமைகளை அடுக்கிய விதமும் திமுகவினரையும் திகைக்க வைத்துவிட்டது. இதுவரை அதிமுகவினரால் ‘கருணாநிதி’ என்று மட்டுமே விளிக்கப்பட்ட தங்களது தலைவரை ‘கலைஞர்’ என்று அதிமுக முதல்வரே விளித்தது திமுகவினருக்கு மட்டுமல்ல... யாருக்குமே வியப்புதான்!. “இத்தனை நாளும் இந்த அவை நாகரிகம் எல்லாம் எங்கே போனது?” இந்தக் கேள்வியோடு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினேன்.

சட்டமன்றத்தில் முதல்வர் உள்ளிட்டவர்கள் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய புதுமையை எப்படிப் பார்க்கிறது அதிமுக?

என்னதான் எதிர் எதிர் துருவங்களாகப் பொது வாழ்க்கையில் செயல்பட்டாலும், ஒரு தலைவர் மறைந்துவிட்டால் அவருடைய பெருமைகளை எடுத்துச் சொல்லிப் புகழாரம் சூட்டுவதென்பது தமிழர் மரபு. அந்த மரபையும் மாண்பையும் மீட்டெடுக்கும் விதமாக அதிமுக அரசு நடந்துகொண்டிருக்கிறது. அதனடிப்படையில்தான் அவை முன்னவர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் கலைஞருக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். அவரும் முதல்வர், சபாநாயகர் ஆகியோரும் கலைஞரின் நகைச்சுவைப் பேச்சையும் தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பையும் பற்றி பேசினார்கள். கலைஞர் என்று சொன்னால் தமிழும் அதற்குள் அடக்கம்தான். அந்த அடிப்படையில்தான் முதல்வரும் துணை முதல்வரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE