‘இ-வே பில்’ பிரச்சினைக்கு தீர்வு காண புதிய ‘போர்டல்’ அறிமுகம் - தொழில் துறையினர் வரவேற்பு

By இல.ராஜகோபால்

கோவை: ‘இ-வே’ பில் பெறுவதில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக புதிய ‘போர்டல்’ ஜூன் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின்கீழ் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பொருட்களை கொண்டு செல்லும் போதும், அதே போல் மாநிலத்துக்குள் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை கொண்டு செல்லும்போதும் ‘எலக்ட்ரானிக் வே பில்’ எனப்படும் ‘இ-வே பில்’ வைத்திருப்பது அவசியமாகும்.

இன்வாய்ஸ் எண், பொருளை யார் அனுப்புகிறார், அதை யார் பெறுகிறார், அதன் மதிப்பு, மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். இந்த ஆவணம் இல்லாமல் பொருட்களை எடுத்து செல்லும்போது ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்தும் வாகன சோதனையில் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

தற்போது ‘இ-வே பில்’ பெறுவதற்கு ஒரு போர்டல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஒரே நேரத்தில் பலர் ‘இ-வே பில்’ பெறும் நடவடிக்கை மேற்கொள்ளும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சில சமயங்களில் குறித்த நேரத்தில் பொருட்களை தொழில்துறையினர் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் https:ewaybill2.gst.gov.in என்ற புதிய போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள போர்டலுடன் புதிய போர்டலும் செயல்படும். இந்த நடவடிக்கைக்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறும்போது, “தொழில் நகரான கோவை மாவட்டத்தில் தினமும் பலர் ‘இ-வே பில்’ பெற்று பயன்படுத்தி வருகின்றனர். புதிய போர்டல் தொடங்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. தொழில்துறையினருக்கு மிகுந்த பயன் தரும்” என்றார்.

இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் கூறும்போது, “புதிய போர்டல் அறிமுகம் என்பது தற்போது வரை ‘இ-வே பில்’ பெறுவதில் தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தொழில்முனைவோர் இரண்டாவது போர்டலை பயன்படுத்தும் போது அது குறித்த விவரம் போர்டல் 1-ல் தானாக அப்டேட் ஆகுமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். புதிதாக மென்பொருள் அறிமுகப்படுத்தினால் பயன்பாட்டுக்கு வரும்போது தான் தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்து தெரிய வரும். மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்யும்கடைசி நாளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு பிரச்சினைக்கு தீர்வாக அமையும்” என்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பட்டய கணக்காளர் சங்கத்தின் செயலாளர் ஜலபதி கூறும்போது, “நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி திட்டத்தின்கீழ் இன்வாய்ஸ் பெறுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள்தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது ‘இ-வே பில்’பெறுவதற்கு புதிதாக அமல்படுத்தப்பட உள்ள இரண்டாவது போர்டல் தொழில்துறையினருக்கு மிகவும் உதவும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE