இப்படியொரு அவலம் இனி நடக்கக்கூடாது!

By காமதேனு

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி தொற்று உள்ள ரத்தத்தை ஏற்றிய மாபாதகச் செயல் தமிழக சுகாதாரத் துறையை சவுக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சம்பந்தப்பட்ட ரத்த வங்கியின் ஒப்பந்தப் பணியாளர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் வேலைவாய்ப்புத் தருவதாக அரசும் ‘கருணை’ காட்டியிருக்கிறது. இதெல்லாம் அந்தப் பெண்ணுக்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் நிம்மதியான வாழ்க்கையைத் தந்துவிடுமா?

ரத்த தானம் பெறுவதற்கும், கொடுப்பதற்கும் மருத்துவத் துறையில் பல்வேறுகட்ட பரிசோதனைகள் உண்டு. தானமாகப் பெறப்படும் ரத்தத்தை எச்ஐவி தொற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற விதியும் கட்டாயம். அப்படி இருக்கையில், இந்த விவகாரத்தில் எச்ஐவி பாதித்த நபரிடமிருந்து ரத்த வங்கி ரத்த தானம் பெற்றதாக சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட நபரோ, தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக ரத்த வங்கியில் யாரும் தெரிவிக்கவில்லை என்கிறார்.

அதேசமயம், ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்ட ரத்தம் உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்திருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு இந்த அவலம் நடந்திருக்காது. ஆக, இந்த விஷயத்தில் அனைத்து மட்டத்திலும் அஜாக்கிரதை! எய்ட்ஸ் ஒழிப்பிற்காகவும் பாமரருக்கும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படும் நிலையில், மருத்துவத் துறையினரே எய்ட்ஸ் குறித்த சரியான பயிற்சி இல்லாமல் இப்படிச் செயல்பட்டிருப்பது அச்சத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE