கா.சு.வேலாயுதன்
எப்போதும் புத்தகங்களுக்குள் பொதிந்து கிடப்பவர்களை ‘புத்தகப் புழு’ என்போம். அப்படித்தான் தமிழாய்ந்த அரிய நூல்களை தனது முதுகிலேயே கட்டிக்கொண்டு ஊர் ஊராய் சுற்றிக்கொண்டிருக்கிறார் புலவர் தமிழப்பனார். தற்போது கோவையில் மையம் கொண்டிருக்கும் 83 வயது தமிழப்பனாரை தரிசிக்க மயிலம்பட்டி கிராமத்துக்கே சென்றேன்.
நரை சூழ்ந்த அடர்த்தியான தலைமுடி, அதை விட நீளமான வெண் தாடி. ஒரு சாயலுக்கு அரவிந்தரை நினைவுபடுத்தும் தோற்றம். இதுதான் தமிழப்பனார். “இங்கே வந்து ரெண்டு வாரம்தான் ஆச்சு. ‘உங்கள் தமிழ்ப்பணிக்கு உதவறேன்’னு சொல்லி நண்பர் ஒருவர் கூப்பிட்டார். அதை நம்பி பெங்களூருவுல இருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு வந்துட்டேன். உதவுறதா சொன்ன நண்பர் திடீர்ன்னு கைவிரிச்சுட்டார். முன் வச்ச காலை பின் வைக்கலாகாதுன்னு நானே இந்த வீட்டை ஒத்திக்கு புடிச்சுட்டேன்” என்று கோவை விஜயம் குறித்து விளக்கிய தமிழப்பனார், அந்த வீட்டை எனக்குச் சுற்றிக் காட்டினார். அந்த விடு முழுக்கவும், சாக்குப்பைகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் அடுக்கடுக்காய் ஏராளமான தமிழ் நூல்கள்.
வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை எழுதிய மயூர கிரி புராணம் (1885ல் வெளியானது), ச.வேதநாயகம் பிள்ளை எழுதிய சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் (1887ல் வெளியானது), ஆசுகவிராயர் கோவிந்த பிள்ளை எழுதிய அரிச்சந்திர புராணம் (1894ல் வெளியானது), காலத்தால் மிகவும் முற்பட்ட தமிழ் கிரந்த எழுத்து நூல்கள். இவையெல்லாம் கையில் எடுத்தாலே பொல பொலவென உதிரும் நிலையில் இருந்தவை.