என்.சுவாமிநாதன்
மற்ற மாவட்டங்களில் எல்லாம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையில்தான் செம ரகளை!
தேர்தல் முடிவுகளை மத மும் மதம் சார்ந்த அரசியலுமே தீர்மானிக்கும் மாவட்டம் கன்னி யாகுமரி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா இருந்தபோதே இங்கு ஒரு தொகுதியைக்கூட அதிமுகவால் தக்க வைக்க முடியவில்லை. அதில் பாடம் படித்து, வரும் தேர்தலிலாவது ஏதோ கொஞ்சம் தேறுவார்கள் என்று பார்த்தால் அமமுகவுடன் நடக்கும் பங்காளிச் சண்டையே அதிமுகவை மேலும் படுகுழியில் தள்ளிவிடும் போலிருக்கிறது.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட குமரி மாவட்ட அதிமுகவில் கிழக்கு மாவட்டத்துக்கு பால் வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகனும், மேற்கு மாவட்டத்துக்கு ஜான் தங்கமும் இப்போது செயலாளர்கள். இருவருமே தளவாய்சுந்தரத்தின் ஆதரவால் இந்த இடத்துக்கு வந்தவர்கள். இதற்கு முன்பு ஒன்றுபட்ட குமரி மாவட்டச் செயலாளராக விஜயகுமார் எம்பி இருந்தார். வழக்கறிஞரான இவர் சினிமா ஃபைனான்சியராகவும் கோலோச்சி வந்தார். சசிகலா தயவில் ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்ட இவருக்கு பம்பர் பரிசாக மாவட்டச் செயலாளர் பதவியும் தேடி வந்தது.