நீரோடிய காலம் 13: அணிலாடும் முன்றில்கள்!

By ஆசை

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தஞ்சைப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்ட விதமே அலாதியானது. பெரும்பாலும் ஒரு வீட்டில் குடியிருப்பவர்களே அந்த வீட்டைக் கட்டியெழுப்பியதில் பெரும் பங்கு வகித்திருப்பார்கள். கீற்று வீட்டிலிருந்து, ஓட்டு வீடு, மாடி வீடு எல்லாவற்றுக்கும் அப்படித்தான். பாமணியாற்றங்கரையில் எங்கள் வீடு கீற்று வீடாக இருந்தபோது அதற்குக் கீற்று போடுவது, சுவருக்கு மண் பூசுவது என்று எல்லாவற்றிலும் சிறுவனாக நான் பங்கேற்றிருக்கிறேன். ஓட்டு வீடாக மாறிய போது, சுவர் வைக்கச் செங்கல் சுமந்தது, சல்லடையில் மண் சலித்தது, ஓடு சுமந்தது எல்லாமே பசுமையாக என் நினைவில் இருக்கின்றன. கொத்தனாரின் வியர்வையுடன் என் பெற்றோரின் வியர்வை
யும் பிள்ளைகளான எங்கள் வியர்வையும் கலந்து உருவானது எங்கள் வீடு.

ஆனால், இன்று ஊர்ப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகளில் கூலி கொடுப்பதைத் தவிர வீட்டுக்காரர்களுக்கு அநேகமாக வேறு வேலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்டப்படும் வீடுகளும் நகர வீடுகளைப் பார்த்துப் போடப்பட்ட சூடு போலவே தோன்றும்.

சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், மாயவரம், மன்னார்குடி பகுதிகளில் அந்தக் கால பாணியில் காற்றோட்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் கட்டப்பட்ட வீடுகளைக் காண முடியும். அவற்றை இடித்துவிட்டு நவீன பாணியில் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கவே வேதனையுண்டாகிறது. இது பழமைவாதப் பேச்சு இல்லை. பழைய பாணி வீடுகளுக்குள் நீங்கள் புகுந்துவந்தால் தெரியும், அவை எவ்வளவு காற்றோட்
டத்துடனும் அழகுணர்ச்சியோடும் கட்டப்பட்டிருந்தன என்பது.

தஞ்சைப் பகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடுகள் ரொம்பவும் விசேஷமானவை. தஞ்சாவூரில் மராட்டியக் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் வீடுகள் என்றால் நாகூர், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் இந்திய-இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விசாலமான வீடுகள். சில இஸ்லாமிய வீடுகளில் கோயில் கதவு அளவுக்குக் கதவைக் காணலாம். அப்படியே தஞ்சையின் பல்வேறு அக்கிரஹாரங்களுக்கு நகர்ந்தால் நாட்டோடு வேயப்பட்ட விசாலமான வீடுகளை, செட்டிநாட்டு வீடுகளின் குட்டி வடிவம் போன்று தோன்றும் வீடுகளைக் காணலாம். 

கிராமங்களில் புதிதாக முளைத்திருக்கும் மாடி வீடுகளுக்கு அருகே பழைய பாணியில் குடிசை வீடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு காலம் வரை கிராமத்து வீடுகளின் அடையாளமாகத் திகழ்ந்தவை அவற்றின் வேலிகள். கிளுவைப் போத்துக்களையும் பூவரசுகளையும் வேப்ப மரங்களையும் முருங்கை மரங்களையும் கல்யாண முருங்கை களையும் உயிர்வேலியாகக் கொண்டிருக்கும் வீடுகள் அலாதியானவை. வீட்டுக்கான தடுப்பாக மட்டுமல்லாமல் பல்வேறு வகையிலும் வீட்டிலுள்ளவர்களோடு உரையாடுபவை அந்த வேலிகள். காலையில் எழுந்து வேப்பங்
குச்சியை உடைத்துப் பல்துலக்குபவர்களை இன்னும் காண முடியும். முள்ளு முருங்கையின் இலைகளையும் வேலியில் படர்ந்திருக்கும் மொசுமொசுக்கையின் இலைகளையும் பறித்து அரிசி மாவுடன் கலந்து வடையும் அடைகளும் சுட்டுத்தின்னால் சளித்தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை கிராமங்களில் உண்டு. உயிர்வேலியைப் போலவே மூங்கில் படல்களால் அமைக்கும் வேலியும் விசேஷமானது. வீடும் அதன் சுற்றுப்புறமும் வீட்டில் உள்ளவர்களோடு உரையாடுவதுதான் நம் கிராமத்து வீடுகளின் தனிச்சிறப்பு. புயல் மழைகளில் தாக்குப்பிடிக்கும் குணம் இவற்றுக்கு உண்டு. அப்படியே சேதமடைந்தாலும் அதிகச் சிரமமும் செலவும் இல்லாமல் புதுப்பித்துக்கொள்ளக் கூடியவை. உள்ளூரில் கிடைக்கும் பொருளைக் கொண்டே உருவாக்கும் வீடுகளே சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்ற எண்ணத்தை உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலை வல்லுநர் லாரி பேக்கர் நம் கிராமங்களிலிருந்துதான் பெற்றிருக்கக் கூடும்.

நம் பயணத்தில் திருவாரூரைத் தாண்டி வடக்காகச் சென்றுகொண்டிருந்தபோது தட்டுப்பட்ட ஊர் முடிகொண்டான். சோழ அரசனால் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பார்கள். ஊருக்குச் சற்றுத் தள்ளி தெற்கே முடிகொண்டான் ஆறும் வடக்கே திருமலைராஜன் ஆறும் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஊரில் சற்றே வெறிச்சோடிக் காணப்பட்ட அக்கிரஹாரம் நம் கண்ணில் பட்டதும் உள்ளே வண்டியை விட்டோம்.
வழக்கமான கிராமத்து அக்கிரஹாரம்! விசாலமான தெரு. இரண்டு பக்கங்களும் விசாலமான வீடுகள். சில வீடுகள் இன்னும் உயிர்ப்போடு இருந்தன. சில வீடுகளில் ஆட்கள் இருந்தாலும் களையிழந்து காணப்பட்டன. சில வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் சிதிலமடைந்து காணப்பட்டன. ‘அணிலாடும் முன்றில்’ என்ற சங்க இலக்கியப் பாடலையே அந்த வீடுகள் நினைவுபடுத்தின.

ஒரு திண்ணையில் உட்கார்ந்துகொண்டே ஒரு வாழ்நாளைக் கழித்துவிடலாம் என்று சொகுசான தஞ்சாவூர்க்காரர்கள் சொல்வது வழக்கம். திண்ணையை வைத்து ‘திண்ணை வீரா’ என்ற அலாதியான கதையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். திண்ணையில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம் போன்றவை விளையாடுவதற்கான கட்டங்கள் நிரந்தரமாக இருக்கும். அதைவிட சீட்டுக்கச்சேரிக்கும் அரட்டைக் கச்சேரிக்கும்தான் திண்ணை ரொம்பவும் பிரபலம். தலை சாய்த்துப் படுக்கத் தண்ணென்றும் (குளிர்ச்சியாக) இருக்கும்.

திண்ணையைத் தாண்டி உள்ளே சென்றால் கூடத்துத் தாழ்வாரத்தையும் திண்ணையையும் இணைக்கும் ‘ரேழி’ எனும் நடை. நடைக்குப் பக்கவாட்டில் ‘காமிரா உள்’ எனும் அறை. நடையைத் தாண்டி உள்ளே சென்றால் உள்முற்றத்துடன் கூடிய கூடம். மழை வெயில் இரண்டும் உள்வீட்டுடன் உறவாடுவதற்கான ஏற்பாடு. இன்னும் உள்ளே சென்றால் ‘கசாலை’ என்றும் ‘சமையல் உள்’ என்றும் அழைக்கப்படும் சமையலறை. பின்பக்கம் கிணறு, தொழுவம், தோட்டம் என்று எல்லாவற்றுக்கும் வாய்ப்பான கொல்லைப் பகுதி.

இதுபோன்ற வீடுகளில் நுழைந்து பார்க்க வேண்டும் என்ற நம் விருப்பத்தை பல கிராமங்களில் அக்கிரஹாரவாசிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சரி, சிதிலமடைந்த வீட்டுக்குள் சென்று பார்க்கலாமே என்று முடிகொண்டானில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தோம். கிட்டத்தட்ட கூடாக நின்றாலும் அது எப்படிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்திருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிந்தது. இன்னும் உயிரோடு இருக்கும் உத்தரங்கள், மோட்டுவளை போன்றவை அந்தக் காலக் கட்டுமானத்தின் சிறப்பைச் சொல்லிக்கொண்டிருந்தன. வீட்டின் உள்ளே ஏதோ சலசலப்பு கேட்டது. எட்டிப் பார்த்தால் ஒருத்தர் தென்பட்டார். பெயின்டர் போல, முகத்தில் கொஞ்சம் வர்ணச் சிதறல் தெரிந்தது. ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அவரும் இந்த அக்கிரஹாரவாசிதானாம்! கால் நூற்றாண்டுக்கு முன்பு ஒருவரை அக்கிரஹாரவாசி என்றால் அதன் அர்த்தமே வேறு. இன்று அக்கிரஹாரத்தின் பூர்வவாசிகள் வெளியேறிவிட, முன்பு அந்தப் பகுதிகளில் நுழைய முடியாதவர்களும் தற்போது வீடுவாங்கிக் குடியேறிக்கொண்டிருக்கிறார்கள்! வரவேற்க வேண்டிய கால மாற்றம்.

“என்ன வேலை செய்யுறீங்க?” என்று கேட்டேன்.
“விவசாயக் கூலிவேலை, பெயின்டர், கொத்தனார் வேலைன்னு எதுவும் செய்வேங்க. என்ன... தெனைக்கும் வேலை கிடைக்காது. ஒரு மாசம் முழுக்க முக்கிமுக்கி உழைச்சா மூவாயிரம் பாக்கலாங்க. விவசாய சீசனுல
ஆறாயிரம் வரைக்கும் கிடைக்கும். ஆனா, தண்ணி
இல்லாம விவசாயமும் படுத்துடுச்சா, அதனால எங்களுக்
குப் போராட்டம்தாங்க” என்று சலித்துக்கொண்டார்.
“அக்கிரஹாரத்தில் நீங்க எப்படி?” என்று கேட்டதற்கு, “இங்க பிராமணரல்லாதவங்க குடியேறுறது ரொம்பக் கஷ்டமுங்க. நாங்க அப்பா காலத்துலருந்து இங்க வேலை செய்யுறவங்கங்கிறதுனால எப்புடியோ கஷ்டப்பட்டு ஒரு வீட்ட வாங்கிட்டோம். வீடுதான் எங்களுக்குப் பெருசே
யொழிய வாழ்க்கை அப்படியேதாங்க இருக்கு” என்றார்.
“சரி ஊருல இவ்வளவு பெரிய பெரிய வீடுகள் இருக்கே, யார் குடியிருக்காங்க?” என்று கேட்டேன்.

“பலரும் நிலத்தை வித்துட்டு வெளியூரு, வெளிநாடுன்னு சம்பாதிக்கப் போயிட்டாங்க. ஊரை விட்டுப் போகப் புடிக்காத பெரிசுங்க மட்டும் துணைக்கு யாருமில்லாம இங்கே கெடக்கும். கோடீஸ்வரப் பெரிசுக எல்லாம் கடைசி காலத்துல பாத்துக்க ஆளு இல்லாம ஊருக்குள்ள கெடக்குங்க” என்றார்.
அவரிடம் விடைபெற்று புறப்பட்டோம். வெறிச்சோடிய பல கிராமங்களை நம் பயணத்தில் பார்த்திருக்கிறோம். அந்தக் கிராமங்களில் ஊரில் நிலமற்றவர்கள், வீட்டைத் தவிர ஏதுமற்றவர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றார்கள் என்றால் இங்கே பெரிய நிலபுலன் உள்ளவர்கள் இதை விட்டுச் சென்றிருக்கிறார்கள். முடிகொண்டான், சேங்காலிபுரம், உடையாளூர், கருப்பூர் என்று நாம் பார்த்த பல கிராமத்து அக்கிரஹாரங்களிலும் இதே நிலைதான். அதிகாரம், சற்றுக் கீழ்த்தட்டு மக்களையும் சென்றுசேர ஆரம்பித்ததன் அடையாளமாகவும், கோயிலை மையமாகக் கொண்டு இயங்கிய வாழ்க்கையானது மாறியதன் அடையாளமாகவும் அக்கிரஹாரத்தில் நடந்த மாற்றத்தைக் கருதலாம்.

இதுபோன்று வெவ்வேறு வகைகளிலான வெளியேற்றத்தை தஞ்சை கடந்த 50 ஆண்டுகளாகக் கண்டுகொண்டிருக்கிறது. இனிமேல் இன்னும் அதிகமாகும் என்றே இந்தப் பயணம் எனக்கு உணர்த்தியது.

(சுற்றுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE