பதறும் பதினாறு 22: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

தலையில் எண்ணெய் வைத்துவிட முயன்ற அம்மாவின் கையை கோகுல் தட்டிவிட்டான். “தினமும் இப்படி எண்ணெய் வைக்காதீங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவ சொல்றதும்மா? காலையில பிரேயர்ல நிக்கும்போது முகத்துல எண்ணெய் வழிஞ்சு பார்க்கவே கேவலமா இருக்கும்” என்று கத்தினான். தலைக்கு எண்ணெய் வைப்பது அத்தனை பெரிய குற்றமா என அம்மா யோசித்தார். மகனை ஏதோ சொல்லி சமாதானப்படுத்திவிட்டு, சில துளிகள் மட்டும் எண்ணெய் வைத்துவிட்டார். அவன் பள்ளிக்குக் கிளம்பும் பரபரப்பில் இருந்ததால் அவரே அவனுக்குத் தலைசீவினார். 

பதறிப்போய் அம்மாவிடமிருந்து சீப்பைப் பிடுங்கியவன், “ஏன் இப்படித் தேவையில்லாத வேலை எல்லாம் செய்யறீங்க. பாருங்க நீங்க அழுத்தி வாரினதுல எவ்ளோ முடி கொட்டியிருக்கு” என்று கோகுல் சொல்ல, அம்மா வாயடைத்துப்போனார். நெற்றியில் படிவதுபோல முடியை முன்பக்கம் சரித்துத் தலைசீவினான். ஒழுங்காகச் சீவும்படி அம்மா சொன்னபோது கையிலிருந்து சீப்பை விட்டெறிந்தான். “தலைமுடியை மேலே தூக்கி வாரினா கிளாஸ்ல இருக்கறவங்க எல்லாரும் என்னைத்தானே சொட்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க” என்று கத்திவிட்டுக் கிளம்பினான்.

குழந்தைகளின் திடீர் மாற்றம்

ஏழாம் வகுப்பு படித்தவரை கோகுலிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை. எட்டாம் வகுப்பு தொடங்கியதிலிருந்தே எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுவது, கோபப்படுவது, சின்ன விஷயத்துக்குக்கூட எரிச்சல் அடைவது என்று மாறிப்போனான். வளரிளம் பருவத்தின் வாயிலில் இருக்கும்போது இவையெல்லாம் இயல்புதானே என கோகுலின் அம்மாவும் இவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக அவன் நடந்துகொள்ளும்விதம் அவனுடைய பெற்றோருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வளரிளம் பருவத்தில் புறத்தோற்றம் குறித்த கவனம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும்; ஆனால், தங்கள் மகன் விஷயத்தில் அது கொஞ்சம் அதிகமாக இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணமா எனப் புரியாமல் அவர்கள் குழம்பினார்கள்.

கோகிலாவின் பெற்றோரும் கிட்டத்தட்ட இதே நிலையில்தான் இருந்தனர். மகளின் திடீர் மாற்றம் குறித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. கோகிலாவின் தோழிகளிடம் கேட்கலாம் என நினைத்தனர். அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவரை பள்ளி முடிந்ததும் கோகிலாவின் அம்மா சந்தித்தார். ‘முப்பெரும் தேவியர்’ என மற்றவர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு நெருக்கமான தோழிகள். இவர்களிடமும் கோகிலா சரியாகப் பேசுவதில்லை என்பது கோகிலாவின் அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இயல்பிலிருந்து மாறுகிற அளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் ஊகிக்கக்கூட முடியவில்லை.

தோழிகளின் நினைப்பு

“நான் குழந்தையா இருந்தப்ப குண்டா இருந்திருக்கேன். இப்போ ஏன் இப்படி ஒல்லியாகிட்டேன்” என கோகிலா கேட்டபோதும் அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. “அவங்க தேவைக்காக எல்லோரும் என்னை யூஸ் பண்ணிக்கறாங்கன்னு தோணுதும்மா” என்று சொன்ன மகளைப் புரியாமல் பார்த்தார் அம்மா. பிறகு கோகிலாவே தொடர்ந்தாள். “நான், அனு, நித்யா மூணு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு உங்களுக்கே தெரியும். சின்னச் சின்னதா சண்டை வந்தாலும் நாங்க மூணு பேரும் பிரியாமதானே இருக்கோம். ஆனா அவங்க ரெண்டு பேரும், போனா போகுதுன்னுதான் என்னோட ஃப்ரெண்ட்லியா இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்று சொன்ன மகளை இடைமறித்தார் அம்மா. “அப்படியெல்லாம் எதுவும் இருக்காது. நீயா எதையாவது யோசிச்சுக் குழம்பாதே” என்று அம்மா சொல்ல, கோகிலாவுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “இல்லம்மா. நான் ஒல்லியாவும் அழகில்லாமயும் இருக்கறதால பாய்ஸ்கிட்ட பேசுறதுக்கு அவங்க என்னைப் பயன்படுத்திக்கறாங்க. எதுவா இருந்தாலும் என்கிட்டதான் சொல்லி அனுப்புவாங்க. ஆரம்பத்துல எனக்கு எதுவும் தோணலை. ஆனா, அன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் என்னைப் பத்தி பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டுட்டேன். என்னை எப்பவும் பக்கத்துலயே வச்சிக்கிட்டாதான் அவங்க ரெண்டு பேரும் அழகா தெரிவாங்களாம். பாய்ஸ்கிட்ட பழகுறதுலயும் பிரச்சினை இருக்காதாம். என்னை நம்பி தூது அனுப்பலாம்னு சொன்னாங்கம்மா” என்று சொல்விட்டு அழுதாள்.

கோகிலாவின் அம்மாவுக்குப் பிரச்சினையின் ஆரம்ப முடிச்சு புரிந்துவிட்டது. தான் அழகாகவும் அறிவாளியாகவும் தெரியவேண்டும் என்பதற்காக, சராசரியான தோற்றமும் ஆளுமையும் கொண்ட ஒருவரைத் தங்களுடனே வைத்திருப்பது சிலரது வழக்கம். ஆனால், தாங்கள் அந்தக் காரணத்துக்காகத்தான் உடன் வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்கிறபோது சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை தோன்றும். ஏற்கெனவே தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தால் சுய பரிதாபத்தின் எல்லைக்கே அவர்கள் போய்விடக்கூடும். அதன் வெளிப்பாடாக சந்திக்கிற/பழகுகிற அனைவரையும் சந்தேகிக்கிறவர்களாகவும் அனைத்தையும் வெறுத்து ஒதுங்குகிறவர்களாகவும் அவர்கள் மாறிவிடக்கூடும்.

எது அடையாளம்?

மகளைக் கையாளும் விதம் புரிந்துவிட்டது அம்மாவுக்கு. “நீ யார்?” என மகளிடம் கேட்டார். “நான் கோகிலா” என்று சொன்ன மகளிடம், “அது மட்டும்தான் நீயா?” என்றார். மகள் புரியாமல் விழித்தாள். புரியும்படி விளக்கினார் அம்மா. “நம் புறத்தோற்றம் மட்டுமே நம் அடையாளம் அல்ல. நம்மைப் பற்றி அடுத்தவங்க என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமில்லையா?” என்று கேட்ட அம்மாவைக் குழப்பத்துடன் பார்த்தாள் கோகிலா. “உன்னை ஒரு கருவியா பயன்படுத்தணும்னு அவங்க நினைச்சா நீ அப்படி ஆகிடுவியா? எதைப் பத்தியும் கவலைப்படாம படிப்புல நீ கவனம் செலுத்து. நாலு பேர் உன்கிட்ட பேசினாதான் நீ திறமையானவள்னு அர்த்தம் இல்லை. நீ எதையுமே நேர்த்தியா செய்யறே, பெரியவங்களை மதிக்கிறே, வீட்ல எனக்கு உதவியா இருக்கிறே. இதெல்லாம் உன்னோட நல்ல குணங்கள்தானே. அப்படிப் பார்த்தா உன் அளவுல நீ சிறப்பாதான் இருக்கே” என்று அம்மா சொல்ல கோகிலாவுக்குக் கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. கண்களில் கலக்கம் மறைந்தது. தோழிகள் சொல்வதைப்போல் அவர்களை உயர்த்திக்காட்டுவதற்கான கருவியல்ல நாம் என்பதை உணர்ந்தாள். புறத்தோற்றம் மட்டுமே அடையாளம் அல்ல என்பதும் கோகிலாவுக்குப் புரிந்தது. தன் ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள இன்னும் என்னவெல்லாம் செய்யலாம், படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கவனம்செலுத்த வேண்டும் என நினைத்தாள் கோகிலா. கண்களைத் துடைத்துவிட்டு வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்த மகளின் தோள்தட்டிப் பாராட்டினார் அம்மா.

ஹீரோவா ஜீரோவா?

கோகிலாவுக்குத் தெளிவு பிறந்துவிட்டது. கோகுலுக்கு? பள்ளியிலிருந்து திரும்பியதுமே பையைத் தூக்கியெறிந்தான். மகனின் செயலைக் கண்டித்தார் அப்பா. “உங்களைப் பார்த்து யாராவது ‘நீயெல்லாம் சினிமாவுல ஹீரோவைப் புகழ்ந்து பேசுறதுக்காக அவனோட இருக்கற எடுபிடி ஆளாதான் வருவே’ன்னு சொன்னா நீங்களும் இப்படித்தான்பா கோவப்பட்டிருப்பீங்க” என்று கத்தினான். மகனை மனதளவில் பாதிக்கும் அளவுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதை அப்பா புரிந்துகொண்டார். “என்கிட்டயாராவது அப்படிச் சொல்லியிருந்தா நான் அதைப் பெருசா எடுத்துக்க மாட்டேன். பரவாயில்ல, அந்த ரோலைக்கூடச் சிறப்பா செய்வேன்னு சொல்லியிருப்பேன்” என்று சொன்ன அப்பாவை நம்பமுடியாமல் பார்த்தான் கோகுல். “உங்களுக்கு ஹீரோவாகணும்னு ஆசையில்லையா?” என்று கேட்டான். “ஹீரோவா இருக்கறதும் இல்லாம இருக்கறதும் நம்ம மனத்தைப் பொறுத்ததுதான் கோகுல். மத்தவங்க சொன்னா அது உண்மையாகிடாது இல்லையா? இப்போ ரொம்பப் பெரிய விஷயமா தெரியறது சில மாதங்கள் கழிச்சு ஒண்ணுமே இல்லைன்னு தோணும். அப்படித்தான் இதுவும்” என்றார். “இல்லைப்பா. நான் அழகா இல்லை, ஹேர் ஸ்டைல் சரியில்லை, மேனரிசம் நல்லா இல்லைன்னு நிறைய பேர் கிண்டல் பண்றாங்க. எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல என்னை யாருமே மதிக்கிறதே இல்லை” என்றான். மகனிடம் மனம்விட்டுப் பேசினார் அப்பா. அவர் பேசியதன் சாராம்சம், கோகிலாவின் அம்மா தன் மகளிடம் பேசியவைதாம்.

இன்று பெரும்பாலான குழந்தைகள் அங்கீகாரத்துக்கு ஏங்குகிறார்கள். வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் அது கிடைக்காத போதும் மூன்றாம், நான்காம் இடத்துக்குத் தாங்கள் தள்ளப்படும்போதும் அது அவர்களுடைய ஆளுமையைச் சிதைக்கிறது. இதெல்லாம் சாதாரண விஷயம் எனச் சிலர் நினைக்கலாம். ஆனால், பதின் பருவத்தில் அவர்களின் ஆளுமையில் ஏற்படுகிற பின்னடைவு, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும். எதைக் கண்டும் பின்வாங்குகிற, பொறுப்புகளை ஏற்கத் தயங்குகிற, தலைமைப் பண்புக்குத் தகுதிப்படுத்திக்கொள்ளாதவர்களாக அவர்கள் மாறக்கூடும். தங்களைக் குறித்த தாழ்வுமனப்பான்மையும் எதிர்மறை சிந்தனைகளும் தாங்கள் எதற்கும் தகுதியற்றவர்கள் என்ற நினைப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தும். இதுபோன்றவை குறித்தும் பதின் பருவத்தில் குழந்தைகளிடம் நாம் பேச வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் நாம்தான் உருவாக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளும் இப்படியான சூழலை எதிர்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்கள் சொல்லத் தயங்கினாலோ, மறைத்தாலோ நாம்தான் பொறுமையாகப் பேசி கண்டறிய வேண்டும். அதுதான் குழந்தைகளின் திடமான எதிர்காலத்துக்கு நல்லது.

(நிஜம் அறிவோம்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE