நானொரு மேடைக் காதலன் - 22

By நாஞ்சில் சம்பத்

இன்றைக்கு நான் நாடும் ஏடும் கவனிக்கிற இடத்தில் இருக்கிறேன் என்றால் அகரம் கற்ற நாளிலிருந்து நான் பயின்ற பள்ளியில் பெற்ற பயிற்சிகள்தான் காரணம். நாஞ்சில் நாட்டில் தக்கலை கல்வி மாவட்டத்தில் எனது தொட்டில் பூமி மணலிக்கரையில் இயங்கி வருகிற கார்மல் சபை நிர்வகித்த புனித ஜோசப் தொடக்கப் பள்ளியிலும் தொடர்ந்து கார்மல் சபை நிர்வகிக்கும் புனித மரிய கொரற்றி உயர் நிலைப் பள்ளியிலும் என் குருகுல வாசம் அமைந்தது.

தக்கலை கல்வி மாவட்டத்தில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் அரசு உதவி பெறுகிற பள்ளிகளில் எப்போதும் முத்திரை பதிக்கிற பள்ளியாக என் பள்ளி விளங்குகிறது. சைக்கிளில் அலைந்து மீன் விற்கிற, அன்றாடத் தேவைக்கே அல்லாடுகிற மீனவ நண்பனின் மகன் ஜோஸ்ரி ஜான், பள்ளி இறுதித் தேர்வில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் 500-க்கு 496 மதிப்பெண் பெற்று தமிழகத்தின் முதல் மாணவனாக வந்தான். அவனையும் அவனது பெற்றோரையும் வீட்டுக்கு அழைத்துவந்து விருந்து கொடுத்து சிகரங்களை நோக்கி அவன் சிறகசைக்க வாழ்த்தி என்சைக்ளோபீடியா தொகுப்பைக் கொடுத்தனுப்பினேன்.

கண்ணில் தெரிகிற வானம் கைக்கெட்டும் தூரத்தில்தான் என்ற நம்பிக்கையை என்னில் நடவு செய்த பள்ளியில் நாளும் நல்லொழுக்க வகுப்புண்டு. வாரத்தில் ஒருநாள் விவிலியம் சொல்லித் தருவார்கள். விவிலியப் பேச்சுப் போட்டி நடந்ததில் முதல் பரிசு என்னை வந்தடைந்தது. பள்ளி ஆண்டுவிழாவில் பரிசு தந்த பங்குத் தந்தை அருள்திரு. பிரிட்டோ அவர்கள், பரிசுக்குரிய அந்தப் பேச்சை ஆண்டு விழாவில் பேசச் சொல்லி அழகு பார்த்தார்கள். அப்போதிருந்து விவிலியத்தின் மீது ஈடுபாடு உண்டு. விவிலியத்தில் விளைந்து கிடக்கிற உவமைகளின் அழகும் பொருளும் இதயத்தைச் சுத்திகரிக்கிற சக்தி பெற்றவை. ‘பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்; பரிசுத்தமானதை நாய்க்குக் கொடாதேயுங்கள்’ போன்ற உவமைகளை அரசியல் மேடையில் பயன்படுத்தி கைத்தட்டல் வாங்கிய அனுபவம் உண்டு. பிறந்த ஊரில் தீர்க்கதரிசிகளுக்கு மரியாதை இருக்காது என்று விவிலியத்தில் படித்திருக்கிறேன். அதனால் சொந்த ஊரில் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்து 
விடுவேன்.

எங்கள் ஊர் கார்மல் மாதா தேவாலயத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும். அந்த விழாவில் பார்வையாளனாக இருந்திருக்கிறேனே தவிர பங்கேற்பாளனாக இருக்க ஒப்புவதில்லை. என்பால் அதிகம் உரிமை எடுத்துக்கொள்கிற ராஜப்பன் அவர்கள், ஊர்த் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்து “ஊரெல்லாம் பேசுகிறாய்...உலகெங்கும் வலம் வருகிறாய்... உள்ளூர் என்றால் வேம்பாய்க் கசக்கிறதா உனக்கு. இந்த முறை நான்தான் ஊர்த் தலைவர். சங்கைக்குரிய பங்குத் தந்தையின் தலைமையில் ‘ விவிலியம் தந்த செய்தி’ என்ற தலைப்பில் நீ பேசுகிறாய். வேண்டுகோள் அல்ல கட்டளை’’ என்று கடகடவென்று சொல்லிவிட்டு தேநீர்கூட குடிக்காமல் போய்விட்டார்.

விடிந்ததும் பார்த்தால் தேவாலய வாசலில் மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியில் ‘ விவிலியம் தந்த செய்தி’ என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத்தின் சிறப்புரை என்று எழுதப்பட்ட விளம்பரத் தட்டி. எல்லோரும் பார்க்கும்படி பளிச்சென்று வைத்துவிட்டார்கள். ஒப்புதல் பெறாமலே ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. தப்பிக்க முடியவில்லை; தப்பிக்கவும் நினைக்கவில்லை. சங்கைக்குரிய பங்குத் தந்தையின் தலைமையுரைக்குப் பிறகு பேச அழைக்கப்பட்டேன். எதிரில் பார்த்தால் பிள்ளை வயதில் கேலியும் கிண்டலும் செய்த பால்ய காலத்து நண்பர்கள், என்னுடன் படித்த வகுப்புத் தோழிகள், எனக்குக் கல்வி தந்த ஆசிரியப் பெருமக்கள், நாளும் நான் முகம் பார்க்கும் பெரியவர்கள் என ஊரே திரண்டிருந்ததில் ஊசலாடிப் போனேன்.

“பிரபஞ்சத்தை கி. மு, கி. பி என்று இரண்டாக வகுத்து அனைத்து நடவடிக்கை களையும் திருச்சட்டத்திற்குடையதாக்கி இந்தப் பூவுலகை புனிதப்படுத்துவதற்கு தன்னையே பலி கொடுக்கத் தயாரான தயாபரன் இயேசுவின் வாழ்க்கை காருண்யத்தால் ஆனது. அறத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிற இந்த நாளில், மானுடத்தின் கண்கள் பிடுங்கப்பட்ட இந்நாளில், அமைதியும் ஒற்றுமையும் கிலோ என்ன விலை என்று கேட்கிற இந்த நாளில், சமாதானமும் சகிப்புத் தன்மையும் மரணத்தின் வாசலை நெருங்குகிற இந்நாளில் விவிலியம் தந்த செய்தியை சொந்த மண்ணில் சொல்வதனால் என்னை நான் புதுப்பித்துக் கொள்கிறேன்.

விசுவாசத்தை உள்வாங்கிக்கொண்டவனும் நம்பிக்கையை சுவாசிக்கிறவனும் ஒவ்வொரு நாளும் பூவாக மலருவான் என்பதை விவிலியம் வலியுறுத்துகிறது. துயரங்களுக்கு ஆறுதலையும் துன்பங்களுக்கு விடுதலையையும் பெற்றுக்கொள்வதற்கு வழி காட்டுகிற விவிலியம் ஒரு நம்பிக்கைச் சுரங்கம். ஏதுமற்ற ஏழைகளிடத்துப் பாராமுகமாய் இருப்பதிலும் அவனை அலட்சியப்படுத்துவதிலும் அதிலே சுகம் காண்பதிலும் நாட்டம் உள்ள மனித குலத்துக்கு, ‘ ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே. பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே; உள்ளம் உடைந்தோர்க்கு துயரங்களைக் கூட்டாதே’ என்றெல்லாம் அடம் பிடிக்கிற குழந்தைக்குத் திரும்பத் திரும்ப ஊட்டுகிற தாயின் பரிவோடு வழி காட்டுகிற இயேசு பெருமான் நெற்றிப்பொட்டில் அடித்ததை மாதிரி அடுத்துச் சொன்னார். ‘ ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால் அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பார்’ என்பது எச்சரிக்கை; இரையச்சத்துக்கான சமிக்ஞை.

தருக்கும் செருக்கும் கொண்டு அலைகிறவர்களால் பல பேருடைய இருப்பும் வாழ்வும் இன்று கேள்விக்குறியாகிறது. நாவடக்கத்தை அடக்கம் செய்துவிட்டு தனக்குத்தானே மனக்கோட்டை கட்டிக்கொண்டு சேட்டையிலும் வேட்டையிலும் வேட்கை கொண்டு பொறியற்ற விலங்குகளாய்த் திரியும் மனிதர்களால் மன அமைதி பறிபோகிறது. நெறியற்ற நெறியில் பயணிப்பதில் மனிதன் வெறிகொண்டு அலைகிறான். ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து முடித்துவிட வேண்டும் என்று முட்டி மோதுகிறவன் நிலை தடுமாறுகிறான். நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கிறான். அவர்களுக்குச் சொல்கிறது விவிலியம். ‘நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது. ஏற்புடைய மனிதர் மானக்கேடு என்னும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர். நல்லவை மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர் நோக்கியிருங்கள்’ - இப்படி அவன் உயரத்துக்குக் கீழே இறங்கி விவிலியம் மனிதனைப் புடம் போடுகிறது.

‘பெறுவதற்கு மட்டுமே கைகளை விரித்து வைத்திராதே. முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயனில்லை’ என்று ஈயாத புல்லர்களுக்கு அறிவுறுத்துகிறது விவிலியம். ‘உன் பகைவர்களிடம் இருந்து விலகி நில். உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்’ என்று விவிலியம் தருகிற செய்தியில் மனசாட்சியற்ற நண்பர்கள் மறைந்து விடுகின்றார்கள். இன்று சொந்தச் சகோதரன் துன்பத்தில் உழன்றாலும் தோள் கொடுக்க மனமில்லாத சகோதரர்களின் எண்ணிக்கை அருகி வருவதற்குப் பதிலாக பெருகி வருவது ஆபத்து சூழ்ந்து விட்டதற்கு அடையாளம். சகோதரச் சண்டை சம்பந்தமான வழக்குகளாலும் நீதி மன்றங்கள் அல்லோலகல்லோலப்படுகின்றன. அண்ணன் தம்பி உறவுகளை அறுத்துப் போடுவதற்கு அண்டை வீட்டில் திட்டம் போடுவது இப்போது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. மூத்த பாசம் இரத்த பாசத்தை சின்னாபின்னமாக்கி விடுகிறது. கூட்டுக் குடும்பம் என்பது வரலாற்றுச்செய்தியாக வாசிக்கிற அளவுக்கு அந்நியமாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் சகோதரப்பாசம் தழைக்குமானால் நிம்மதி கூடு கட்டும். நிழல் பள்ளி கொள்ளும். தீர்க்க தரிசனத்தோடு விவிலியம் சொல்கிறது. ‘ தம் சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். அறிவிலியே என்பவர் எரி நரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்போது உங்கள் சகோதர சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால் அங்கேயே பலி பீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’ என்கிறார் இயேசு பெருமான். பலி பீடத்துக்கு வரும் காணிக்கையைக் காட்டிலும் உன்னதமானது பந்தபாசம் என்கிறது விவிலியம்.

நித்தியத்தைக் கிழித்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயமின்மையை உடுத்திக்கொண்டிருக்கிறோம். நாளை குறித்த கவலை இன்றை விழுங்கி விடுகிறது. அவ நம்பிக்கை அவ்வப்போது வந்து கதவைத் தட்டுகிறது. வந்து சேர்கிற கவலை போய்ச் சேர்கிற வழி தெரியாமல் நமது அகத்திலேயே நிலை குத்தி நிற்கிறது. கவலைப் படுகுழியில் விழுந்து கரையேற வழி தெரியாமல் தத்தளிக்கிற மனிதனுக்கு 
இயேசு ஊட்டுகிற நம்பிக்கையில் பட்டமரம்கூட துளிர்த்துவிடும். பாலைவனம்கூட செழித்துவிடும். கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும் என்று கேட்கிற இயேசு பெருமான் கேள்விக்கு முன்னால் உயரத்தில் பறக்கிற உன்னதக் கவிஞர்களின் கற்பனை எல்லாம் ஒன்றும் இல்லாததாக ஆகிவிடுகிறது.

‘வானத்துப் பறவைகளை நோக்குங்கள். அவை விதைப்பதும் இல்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச்செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை. ஆனால், சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே. இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எரியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?’ என்ற விவிலிய மொழியில் ஆரோகணித்து வருகிற உவமையும் அசையாத நம்பிக்கையும் கூம்பிப்போன மனங்களில் கோபுரத்தைக் கட்டி எழுப்பும்.

கலீலியோ, தெக்கப்பொலி, ஜெருசலேம், யூதேயா, யோர்தான் போன்ற இடங்களில் இருந்து அலைஅலையாய் அணி வகுத்த மக்களுக்காக மலையின் உச்சியில் ஏறி நின்று இயேசு பெருமான் பேசிய பேச்சு பத்துக் கட்டளைகள் என்று பவித்திரமாக அதை உலகெங்கும் இருக்கிற கிறிஸ்தவப் பெருமக்கள் கருதுகிறார்கள். வரப்புயர்ந்த வயலும் வான் நோக்கிய தெங்கும் வசந்தமாளிகையும் ஆணிப்பொன்னும், அடுக்கி வைத்த நோட்டுகளும், வைரங்களும், சுரங்கங்களும் வாய்க்கப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள் ஒருக்காலும் இல்லை. ஏழையரின் உள்ளத்தோர், துயறுருவோர், கனிவுடையோர், நீதியை நிலை நாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கம் உடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் - இவர்களே பேறு பெற்றவர்கள். விண்ணரசு இவர்களுக்கே சொந்தம் என்று மலைப்பொழுவில் இயேசு பெருமான் பேசிய பேச்சில் மாளிகைகள், மன்னர் மன்னர்கள், கயவர்கள், கசடர்கள் எல்லாம் காணாமல் போனார்கள்.

நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன். உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் என்று சொல்லி இயேசு பெருமான் உதிர்த்த உவகைகளுக்கு ஈடும் இல்லை; இணையும் இல்லை. மரணத்தைத் தந்தவனுக்கும் கருணை காட்டி அறியாமல் செய்கிறார்கள். பிதாவே இவர்களை மன்னியும் என்று சொன்ன வாசகம் இந்த உலகை இன்னும் உயிர்ப்புடனும் நம்பிக்கையுடனும் வைத்திருக்கிறது. பாவப்பட்ட மக்களுக்காக பாரச் சிலுவையைச் சுமந்த இயேசுவின் விவிலியம் ஆகச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து மதிக்கப்படவேண்டிய ஒன்று. விவிலியச் செய்திகளில் உலா வருகின்ற நீதிகள் போரிடும் உலகை வேருடன் சாய்க்கும். விவிலியம் முழுவதும் சிந்திக் கிடக்கும் உவமைகளால் மரத்துப்போன மனங்களில் மகரந்தச் சேர்க்கை செய்யலாம். வேற்றுமை விருட்சத்தை வெட்டிச் சாய்க்கவும் பாகுபாடு என்ற பாவத்தைத் துடைக்கவும் நம்மைத் தூண்டிக்கொண்டு இருக்கும் விவிலியச் செய்திகளை இன்னும் விவரிக்க நேரமில்லை. நீங்கள் விரும்பினால் கார்மல் சபையில் வளர்ந்த பிள்ளை நான். அழைக்கும் போதெல்லாம் வருவேன்’’ என்று நான் பேசிமுடித்த போது எழுந்த ஆரவாரத்தில் என்னையே இழந்தேன்.

( இன்னும் பேசுவேன்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE