எங்க குலசாமி 1- மதுரை வீரன்

By காமதேனு

கரு.முத்து

ஊரையும் மக்களையும் காப்பதற்காக ஊருக்கு வெளியே வெட்ட வெளியில் நிற்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் குலசாமி ஆயுதமும் தூக்கும் என்பார்கள். “எந்தக் கடவுளும் கும்பிடு, கும்பிடாமப் போ. ஆனா, குலசாமிக்குச் செய்ய வேண்டிய கடமையில் குறை வைக்காதே! ஏனென்றால் குல தெய்வங்கள் வானில் இருந்து வந்தவையல்ல, நம் மூதாதையர்தான். தன் தலைமுறையைக் காக்கும் பணியை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள்” என்று வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். வீட்டில் நம் தாத்தா, பாட்டியின் படத்தை வைத்துக் கும்பிடுவது போல குலசாமியையும் உரிமையாகக் கும்பிடலாம்; திட்டவும் செய்யலாம். அவர்களோடு உரையாட மந்திரம் தெரிந்த மூன்றாம் நபர் தேவையில்லை.

தமிழர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமான குலசாமிகளைக் கொண்டாடும் விதமாக இனி, வாரம் ஒரு விஐபி-யின் குலசாமியைப் பற்றி இந்தத் தொடர் வழியே படிக்கப் போகிறோம். அந்த வகையில் இந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எஎல்ஏ-வுமான எழுத்தாளர் ரவிக்குமார் தனது குலசாமியான மதுரை வீரனைப் பற்றிப் பேசுகிறார்.

பெருதெய்வ வழிபாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது சிறுதெய்வ வழிபாடு. கோயில், குளம், வேதம் என்று எதுவுமில்லை. கல், மரம், சிறுபெட்டி, சூலம், வேல், மரம் என்று ஏதாவது ஒன்றில் தெய்வம் நின்றுவிடும். சிறுதெய்வங்கள் என்றால் பெரும்பாலும் அது குலதெய்வமாகத்தான் இருக்கும். குலதெய்வத்தில் ஆண், பெண் என்ற பேதமில்லை. மதுரைவீரன், ஒண்டிவீரன், அய்யனார், கருப்பு என ஆண் தெய்வங்களும், அங்கம்மா, அரிக்கம்மா, இசக்கியம்மா, காளியம்மா, எல்லம்மா, ஏழைகாத்தம்மா, கன்னியம்மா, காமாட்சியம்மா எனப் பெண் குலதெய்வங்களும் தங்கள் குலம்காத்து வருவதாக ஒரு நம்பிக்கை இழையோடிக் கிடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE