மெல்லிய காற்று பட்டால் போதும்… கொட்டித் தீர்த்துவிடலாம் என்கிற ரீதியில் கருமேகங்கள் திரண்டிருந்தன. அப்போது மேலே ஒரு புறா பறந்துகொண்டிருந்தது. நீண்ட தூரத்திலிருந்து பறந்து வந்திருக்கும் போல அது. அதன் சிறகசைப்பில் ஒருவிதமான அயர்ச்சி தெரிந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகக் கொஞ்சம் கீழிறங்கி கண்ணில் பட்ட மரம் ஒன்றின் மீது வந்தமர்ந்தது.
“விஷ்ஷ்ஷ்ஷ்…”
கீழிருந்து வீசப்பட்ட கல் ஒன்று அந்தப் புறாவின் மண்டையைப் பதம் பார்த்தது. ‘தொப்’ என்று விழ, அதைச் சரியாகத் தன் கையில் பிடித்துக் கொண்டான் பாப்லோ. அந்தப் புறாவைத் தூக்கிக்கொண்டு தன் அண்ணன் ராபெர்ட்டோவிடம் ஓடினான்.
“எல் ஒசிட்டோ… இந்தா...” என்று சொல்லியபடியே, இறந்த புறாவை ராபெர்ட்டோவிடம் நீட்டினான் பாப்லோ.
“பாப்லோ… என்ன இது?” என்று சிரித்தபடியே கேட்டான் ராபெர்ட்டோ.
“எந்தப் போட்டிக்குப் போறதுக்கு முன்னாலயும் இப்படி புறாவைக் கொன்னு ரத்தத்தைப் பூசிக்கிட்டவங்களுக்குத்தான் வெற்றின்னு பலரும் சொல்றாங்க. அதான். நீ இன்னைக்கு ரேஸுக்குப் போற இல்ல. இந்தப் புறாவோட ரத்தத்தை உன் கையில அப்பிக்கோ. அப்போ பயங்கரமா எனர்ஜி கிடைக்கும். நல்லா பெடல் போடலாம். நீதான் ஃபர்ஸ்ட்டா வருவ ஒசிட்டோ..”
“சரிடா…” என்று சொல்லியவாறே ராபெர்ட்டோ தன் கையில் அந்தப் புறாவின் ரத்தத்தைப் பூசிக்கொண்டார். அந்த இரண்டு சகோதரர்களும் வளர்ந்து, பெரியவர்களாகி, பாப்லோ கேங்ஸ்டர் ஆகி நின்றபோது, அவன் செய்த பாவத்தில் பாதியைத் தானும் பூசிக்கொண்டார் ராபெர்ட்டோ. ஆம்… பாப்லோ ‘காந்த்ரா பாண்டிஸ்டா’வாக வளர்ந்து வந்த போது, அவனிடம் எண்ண முடி யாத அளவுக்கு ஏராளமான பணம் புழங்கியது. அந்தப் பணத்தை நிர்வகிக் கும் பொறுப்பை அவன் ராபெர்ட்டோ விடம் ஒப்படைத்திருந்தான். அப்படித்தான் அவர், பாப்லோவின் அக்கவுன்டன்ட்டாக ஆனார்.
தான் பிற்காலத்தில் ஒரு பெரிய வழக்கறிஞராக வருவோம் என்று நினைத்த பாப்லோ வரலாறு படித்தான். ஆனால், அவனது அண்ணனுக்குத் தான் என்னவாக வரப்போகிறோம் என்ற எந்த ஒரு ஐடியாவும் இல்லை. எனினும், ‘நாலெட்ஜ் ஆஃப் நம்பர்ஸ்’ தனக்கு எப்போதும் உதவும் என்று அவர் நம்பியதால், கொலம்பியாவின் யுனிவர்சிட்டி ரெமிங்டனில் அக்கவுன்டிங் படித்தார்.
அவருக்கு சைக்கிள் ரேஸில் சிறு வயது முதலே ஆர்வம் இருந்து வந்தது. சர்வதேச அளவிலான சைக்கிள் ரேஸ்களில் கலந்துகொண்டு பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. அவருக்கு 16 வயதாகவும் பாப்லோவுக்கு 13 வயதாகவும் இருக்கும்போது, பல் செட்டுகள் தயாரிக்கும் ஒரு ஃபேக்டரியிலிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பல் மருத்து வமனைக்கும் தத்தமது சைக்கிளில் சென்று ‘டெலிவரி’ கொடுத்துவிட்டு வருவார்கள். அப்போதெல்லாம், யார் முதலில் மருத்துவமனையை அடைவது என்பதில் இருவருக்கும் போட்டியிருக்கும். அந்தப் போட்டிகளில் பெரும்பாலும் பாப்லோவே ஜெயிப்பான். இந்தக் கடுப்பு, அவர்கள் வளர்ந்த பிறகும் அவ்வப்போது ராபெர்ட்டோவின் மனதில் எட்டிப் பார்க்கும். இருந்தாலும் அதை வெளிப்படை யாக அவர் காட்டிக்கொண்டதில்லை.
இந்தப் போட்டிகள்தான் ராபெர்ட்டோவுக்கான பயிற்சியாகவும் இருந்தன. கல்லூரிக் காலத்தில் அவர் புரொஃபஷனலாக சைக்கிள் ரேஸ்களில் பங்கெடுக்கத் தொடங்கினார். 1966-ல் கொலம்பியாவில் நடந்த சைக்கிள் ரேஸில் இரண்டாவதாக வந்து பட்டம் வென்றார் அவர். தேசிய அளவில் வென்ற அவர், பிறகு ஈக்வடார் மற்றும் பனாமா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் அளவிலான போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றியாளராக வலம் வந்தார்.
அப்படியான ஒரு போட்டியின்போது மழை கொட்டித் தீர்த்தது. சாலை எல்லாம் சேறால் நிரம்பியிருந்தது. வேகமாக சைக்கிள் ஓட்டியதால், அந்தச் சேற்றில் வழுக்கி விழுந்தார் ராபெர்ட்டோ. அவரது முகமும், ரேஸ் எண்ணை அணிந்திருந்த அவரது உடையும் சேறு பூசியிருந்தது. விழுந்த சில நிமிடங்களில் எழுந்துவிட்டார் ராபெர்ட்டோ. தன் உடலில் ஒட்டியிருந்த சேறைத் துடைப்பதைக்கூட யோசிக்காமல், மீண்டும் சைக்கிளைச் செலுத்த ஆரம்பித்தார். அவருக்குப் பின் வந்த சிலர், அவரைத் தாண்டி வெற்றிக்கோட்டை நோக்கி பெடலை அழுத்தினர். முயற்சியை விட்டுவிடாத ராபெர்ட்டோ கடைசி சில நிமிடங்களில் பெடலை நன்றாக அழுத்தி ஓட்ட, அவர் வெற்றிக் கோட்டை நெருங்கிவிட்டார்.
சேறு பூசியிருந்ததால் அவரது முகமும் தெளிவாகத் தெரியவில்லை. அவரது உடையும் சேறாகியிருந்ததால், அதிலிருந்த ரேஸ் எண்ணும் சரியாகத் தெரியவில்லை. இதனால் அறிவிப்பாளர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர்களில் ஒருவர், “வெற்றிக் கோட்டை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பது யார் என்று தெரியவில்லை. ஆனால், தன் உடலில் சேற்றைப் பூசியிருக்கும் அவர், பார்ப்பதற்கு ‘எல் ஒசிட்டோ’ போன்றிருக்கிறார்” என்று அறிவித்தார்கள். அன்று முதல் அவருக்கு ‘எல் ஒசிட்டோ’ என்பது செல்லப் பெயர் ஆனது.
எல் ஒசிட்டோ ஒருநாள் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி முன்னே சென்றுகொண்டிருந்தது. திடீரென்று அதிலிருந்து ஒரு கட்டை ரோட்டில் விழ, பின்னால் வந்த எல் ஒசிட்டோ, நிலை தடுமாறி அந்தக் கட்டையின் மீது மோத, அவர் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது கை, கால், முகம் அனைத்திலும் தோல் பிய்ந்து தொங்கியது. அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான எலும்பு முறிவுகளும் ஏற்படவில்லை. பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அந்த விபத்துக்குப் பிறகு ரேஸ்களில் பங்கேற்பதை நிறுத்திவிட்டார்.
அடுத்த அத்தியாயம் தொடங்கியது. தேசிய சைக்கிளிங் அணிக்கு அவர் உதவிப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அவரது பயிற்சியால், அந்த அணி ஐரோப்பியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பல பதக்கங்களை வென்றது. அவருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் பிறந்து, குடும்பமும் அமைந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான், பாப்லோவிடம் அவர் அக்கவுன்ட்டன்ட் ஆகச் சேர்ந்தார். கடத்தல் தொழிலில் அவன் சம்பாதித்த பணத்தை, ரியல் எஸ்டேட்டில் போட்டு வெள்ளையாக்குவது, அவனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பது எனப் பண நிர்வாகம் முழுவதும் அவர் கட்டுப்பாட்டில் வந்தது.
பின்னாளில், பாப்லோ கைது செய்யப்படும் தருணம் ஒன்று வந்தது. போலீஸார் எவ்வளவோ முயன்றும் ராபெர்ட்டோவுக்கு எதிராக வழக்குப் பதிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் அவரை விட்டுவிட்டார்கள். இருந்தாலும் அவர், ‘என்னையும் கைது செய்யுங்கள். பாப்லோவுடன் நானும் சிறையில் இருக்கிறேன்’ என்று சொன்னார். போலீஸார் புரியாமல், ‘ஏன்?’ என்று கேட்டார்கள்.
“நான் குற்றம் செஞ்சதுக்கும் ஆதாரம் இருக்கு..?”
“ஆதாரமா…?” திகைப்படைந்த போலீஸார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன ஆதாரம் அது..?”
“Rh..!”
“அப்படின்னா…?”
“பாப்லோ உடம்புல ஓடுற ரத்தம்தான் என் உடம்புலயும் ஓடுது. அவனோட அண்ணனா பிறந்ததற்காகவே நீங்க என்னையும் அரெஸ்ட் பண்ணலாம்..!”
(திகில் நீளும்...)