கஜா புயல் கரை கடந்து ஒரு மாதம் ஆவிட்டது. இன்னமும் டெல்டா மக்கள் அதன் தாக்கத்திலிருந்து முற்றாக மீளவில்லை. பல கிராமங்களுக்கு மின்சாரம், குடி நீர் வசதிகூட கிடைக்கவில்லை என்கிறார்கள்.
ஆளும் அரசாங்கம் தங்களை எப்படியும் மீள் தூக்கி நிறுத்தும் என மக்கள் நினைத்துக்கொண்டிருக்கையில், ‘கஜா புயல் பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய குழுவிடம் ஒப்படைப்பதில் தமிழக அரசு தாமதம் செய்துவிட்டது’ என மத்திய அரசு தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது!
புயல் பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் புயலுக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் அரசு நிர்வாகமும் அமைச்சர்களும் மக்களின் கோபத்துக்கு ஆளானார்கள். அப்போது, ‘அனைத்தையும் ஒரே நாளில் சரிசெய்துவிட முடியாது’ என்று வாதம் செய்யப்பட்டது. ஒரே இரவில் ஒன்றுமில்லாமல் புரட்டிப்போட்ட அனைத்தையும் ஒரே நாளில் சரி செய்ய முடியாதுதான். ஆனால், ஒரு மாத காலம் ஆகியும், புயல் பாதிப்பு பற்றிய முழுமையான விவரங்களைக்கூட சேகரித்துக் கொடுக்க முடியவில்லையென்றால்... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மத்திய அரசு நீதிமன்றத்தில் இதைத் தெரிவித்த பிறகு, ‘புயல் பாதிப்பு விவரங்கள் இன்றே அனுப்பப்படும்’ என்கிறது தமிழக அரசு. அப்படியானால், ஏற்கெனவே சேகரித்து வைத்த விவரங்களை மத்தியக் குழுவுக்கு உடனடியாக அனுப்பி வைக்காமல் இருந்திருக்கிறார்கள் என்றல்லவா நினைக்கக் தோன்றுகிறது!