நானொரு மேடைக் காதலன் - 20

By நாஞ்சில் சம்பத்

ஒரு சூரியோதயத்தில் சொற்பொழிவாளன் ஆக வேண்டும் என்ற கனவைச் சுமந்தவனாய் தலை நகர் சென்னைக்கு வந்த அந்த நாளில் எனக்கு அடைக்கலம் தந்தவர் அண்மையில் சாவூருக்கு விடைபெற்றுச் சென்ற சந்ததமும் மறவாத நண்பன் பரிதி. இளம்வழுதி.

சவுகார்பேட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் சேலம் அருள்மொழியும் அவரும் பேசுவதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் என்னைக் கரம் பற்றி அழைத்துச்சென்று அறிமுகம் செய்தவர் பரிதி தான். சேலம் அருள்மொழிக்கும் நண்பர் பரிதி. இளம்வழுதிக்கும் வாசகர் வட்டம் போல் தலைநகர் சென்னையில் அவர்கள் பேச்சை தேடிச் செல்கிற ஆர்வலர்கள் நிறைய உண்டு. சென்னைத் தமிழில் நக்கலும் நையாண்டியுமாக பரிதி. இளம்வழுதி பேசுவதைக் கேட்டால் சிரிப்பதற்கு இன்னொரு வாய் வேண்டும். அவர் சென்னைத் தமிழில் உரையாற்றுவதற்கு முன்னால் நான் அன்னைத் தமிழில் பேசினேன். செம்மாந்த செந்தமிழ் நடையில் பேசினாலும் அதனருமை உணர்ந்து உள்வாங்கிக் கொள்கிற சுவைஞர்கள் வாழ்கிற சென்னையில் என் கன்னிப் பேச்சில் அன்று ஆவேசம் அலைகடலாய் பொங்கியது.

“முடி சார்ந்த மன்னரும் முடிவில் ஒருநாள் பிடி சாம்பல் ஆவது நிச்சயம். ஆற்றங்கரையில் நிற்கும் மரமும் அரசபோகமும் நிரந்தரமல்ல என்று எச்சரிக்கிறேன். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று சேரன் தம்பி சிலம்பில் இசைத்ததை ஆள்வோருக்கு நினைவூட்டுகிறேன்’’ என்ற காரசாரமான நடையில் முதல் கூட்டத்தில் முதலுக்கு மோசம் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் பேசிவிட்டுக் கீழே இறங்கினேன். அப்போது ஒருவர் என்னை வெகுவாகப் பாராட்டி, “பேச்சு பிரமாதம் தம்பி... சென்னை இனி உன்னை சுவீகாரம் எடுத்துக்கொள்ளும். நானும் திமுகவின் தலைமைக் கழகப் பொழிவாளன்தான். என் பெயர் சங்கு சுப்பிரமணியம்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, “ இலக்கியம் பேசுவாயா?” என்று கேட்டார். “எனது களமே அதுதான் அண்ணா” என்றேன். “அப்படி என்றால் வருகிற 27- ல் வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அரு. கோபாலன் தலைமையில் சிலப்பதிகாரத்தை மையப் பொருளாக வைத்து நடக்கும் பட்டிமன்றத்தில் ஒரு அணிக்குத் தலைமை ஏற்று நீ பேச வேண்டியது வரும். சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைக் கலந்துவிட்டு தம்பிக்கு நாளை தகவல் தருகிறேன். பகல் பன்னிரண்டு மணி அளவில் அன்பகம் பக்கம் வர இயலுமா?” என்று அவர் கனிவோடு கேட்டது என் காதில் தேனாய் பாய்ந்தது.

அடுத்த நாள் அன்பகத்தில் திரு. சங்கு சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்தேன். “நான், உதகை தீப்பொறி திருமலை எல்லாம் சிலம்புச் செல்வர் ம. பொ. சியின் தமிழரசுக் கழகத்தில் சொற்பொழிவாளராக இருந்தவர்கள். இளைத்து களைத்துப் போனபிறகு திமு கழகத்துக்கு இளைப்பாற வந்தவர்கள். ஏதோ மாலை நேரத்து மேடையை நம்பித்தான் எங்களுக்கு காலைப் பொழுதே உதயமாகிறது” என்று தன்னைப் பற்றிய விரிவான அறிமுகத்துடன் அளவளாவிவிட்டு “ ‘ சேரன் தம்பி இசைத்த சிலம்பில் கருத்தைவிட்டு அகலாத காண்டம் புகாரா, மதுரையா, வஞ்சியா?’ என்பதுதான் தலைப்பு தம்பி . வஞ்சிக்காண்டம் அணிக்குத் தலைமையேற்று நீ வாதாடுகிறாய்” என்று சொல்லிவிட்டு அண்ணன் சங்கு சுப்பிரமணியம் அவர்கள் விடை பெற்றார்கள்.

கையில் சிலம்பும் இல்லை. காசும் இல்லை. அன்று அந்தி சாய்ந்த வேளையில் திருவல்லிக்கேணியில் கடை விரித்திருந்த பழைய புத்தகக் கடைக்குச் சென்று புதையலைத் தேடுகிறவனைப் போல் தேடினேன். புலியூர்க் கேசிகன் உரையுடன் உள்ள சிலப்பதிகாரம் கிடைத்தது. பேரம் பேசி வாங்கி வந்து சிலம்பைப் படிக்கத் தொடங்கினேன். அரசினர் தோட்டம் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நண்பர் பரிதி. இளம்வழுதியின் அறை எண் 45 ன் வாசலில் வராந்தாவில்தான் அப்போது தூக்கம். அணையாத விளக்கின் வெளிச்சத்தில் அன்றிரவே வஞ்சிக் காண்டத்தின் அருமையை வாசித்துத் தெளிந்தேன். தொடர்ந்து கருத்தூன்றி சிலம்பைப் படித்ததனால்தான் கடற்கரையில் இருந்து கண்ணகி சிலை அகற்றப்பட்ட வேளையில் திருமுதுகுன்றம் தமிழ் மன்ற மேடையில் தொடர்ந்து பேசுகிற துணிவும் நம்பிக்கையும் எனக்கு வந்து சேர்ந்தது.

பேராசிரியர் அரு. கோபாலன் அவர்கள் தமிழில் ஆழங்கால் பட்ட புலமை உடையவர். தமிழின மீட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதியும் பேசியும் இயங்கியும் வருபவர். நாம் தமிழர் இயக்கம் கண்ட சி. பா. ஆதித்தனாரின் தமிழ்க்கொடி இதழின் ஆசிரியராக இருந்த அறிஞர், பட்டிமன்ற விவாதம் தொடங்குவதற்கு முன்னால் சிலம்பின் பாயிரம் குறித்து அவர் பேசியதற்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கலாம். செறிந்த அடர்த்தியான தமிழ் நடையில் அவர் முன்னுரை வழங்கிய பின், புகார் அணிக்கும் மதுரை அணிக்கும் தலைமை தாங்கிய பெருமக்கள் தங்குதடையில்லாத தமிழ் நடையில் தத்தம் அணியின் சிறப்பை வாதிட்டனர். அதன் பிறகு நான் அழைக்கப்பட்டேன்.

புகார்க் காண்டமும் மதுரைக் காண்டமும் கர்ண பரம்பரையாகவே மக்கள் கேட்டறிந்தறிப்பார்கள். அதைவிட கலைஞரின் பூம்புகார் சித்திரம் தமிழர்தம் நெஞ்சில் ஓவியமாகவே படிந்தும் இருந்தது. வஞ்சிக் காண்டத்தை நிலை நிறுத்த நான் போராட வேண்டியதாயிற்று. மக்கள் இதுவரை அறிந்திராத செய்தியை அறிவிக்க வேண்டிய நிலைக்கு நான் ஆளானேன். அது மட்டுமல்ல; நான் சென்னைக்கு அறிமுகமாகாதவன் என்ற பலவீனமும் எனக்கு இருந்தது. ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. வஞ்சிக் காண்டத்தை வானத்தின் உச்சிக்கே கொண்டு சென்று பாராட்டைப் பெற்றேன். பொதுவாகவே பட்டிமன்றங்களின் தரமும் தகவும் இன்று தகர்ந்து வருகிறது. பட்டிமன்றத்தை பாட்டு மன்றம் ஆக்கியது மட்டுமல்ல... கிளுகிளுப்பை பந்தி வைக்கிற மலிவான தலைப்புகளை விவாதத்துக்கு எடுத்து கொச்சை நடையில் கூத்தடிக்கிற பெருமையைக் காணச் சகிக்கவில்லை. இதைக் கற்றறிந்த தமிழ்ப் பேராசிரியர்களே செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை. உன்னதத் தலைப்பில் உயர்ந்த செய்தியைச் சொன்னாலும் தமிழர்கள் கேட்பார்கள் என்பதற்கு அன்றைய பட்டிமன்றம் உரைகல்லாக அமைந்தது.

“சிலப்பதிகாரப் பாயிரம் மூன்று செய்திகளை முன் வைத்தாலும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்த வேண்டும் என்பதே தமிழர்களின் கனவு. அரசியலில் தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாவதும் விதி தனது ஆட்டத்தைத் தொடர்ந்து நிகழ்த்துவதும் காலம் காலமாக நாம் கண்டும் கேட்டும் படித்துப் பார்த்தும் தெரிந்த உண்மைகள். சரித்திரச் சாலையில் ஊர்வலம் வந்தால் உலகெங்கும் புகார்க் காண்டமும் மதுரைக் காண்டமும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் பத்தினி ஒருத்திக்கு படிமம் சமைத்த சரித்திரம் இங்கு மட்டும்தானே நிகழ்ந்தது. குன்றக் குரவையில் குறவர்கள் வேங்கை மரத்து நிழலில் ஒரு முலை இழந்து நின்ற கண்ணகியைக் கண்டதும் ‘வேட்டுவக் குடியில் பிறந்தவர்களே இவளைப் போல் ஒரு பெருந்தெய்வம் நம் குலத்துக்கு வேறு இல்லை. இவளைத் தெய்வமாகக் கொள்ளுங்கள்’ என்று அறிவித்ததால் சோற்றாணிக் கரையிலும் கொடுங்கலூரிலும் பகவதியாய் இன்று அவள் பரிணமித்து நிற்கிறாள். பகவதி வழிபாடே கண்ணகி வழிபாடு அல்லவா? இயற்கையை ஆராதித்தவன் தமிழன். இயற்கையோடு இசைந்து வாழ்ந்தவன் தமிழன். முருகனைக் கொண்டாடுவதும் கும்பிடுவதும் இயற்கையைத் தமிழன் மதித்ததன் நீட்சிதான் என்ற தமிழ்த்தென்றல் திரு வி. க, முருகன் அல்லது அழகு என்று நிறுவ அடியெடுத்துக் கொடுத்ததே வஞ்சிக் காண்டம் அல்லவா? ‘ குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும் ஆறுமுக ஓருவ! நின் அடி இணை தொழுதேம்’ என்று வஞ்சிக் காண்டத்தில் வருவதை மறக்கத்தான் முடியுமா? இவர்கள் மறுக்கத்தான் முடியுமா?’’ என்று எதிரணியின் மீது நான் ஏவுகணையை வீசியதும், நடுவர் “அற்புதம் அற்புதம்... பலே பலே” என்று பாராட்ட, கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது.

“கண்ணகியைப் பாடினால் பரவினால் கல்யாணம் கை கூடும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இருந்ததை வஞ்சிக் காண்டம் படம் பிடித்துக் காட்டுகிறது. மலைவளம் காண இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் புதல்வன் சேரன் செங்குட்டுவன் அரசி வேண்மாளுடன் பெரியாற்றின் கரைக்கு வந்தான். அப்போது வஞ்சி முற்றத்தில் மலைக் குறவர்கள் சேரனுக்குக் கொண்டு வந்து குவித்த காணிக்கைப் பொருள் தமிழகத்தின் வற்றாத செல்வ வளத்தைக் காட்டுவது வஞ்சிக் காண்டம் அல்லவா? சீத்தலைச் சாத்தனார் கண்ணகி வரலாற்றை செங்குட்டுவ மன்னனிடம் சொன்னது வஞ்சிக் காண்டத்தில் அல்லவா? கோப்பெருந்தேவிக்கா அல்லது நம் நாடு வந்த கண்ணகிக்கா படிமம் சமைப்பது என்று சேரன் வேண்மாளிடம் கேட்டபோது ‘ பத்தினிக் கடவுளைப் பரவல் வேண்டும்’ என்று அரசி அறுதியிட்டுச் சொன்னது வஞ்சிக் காண்டமல்லவா? கொங்கணர், கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர் போன்ற பகை மன்னர்களைப் பந்தாடினான் சேரன் என்ற சேதி வஞ்சியில் அல்லவா வருகிறது, பத்தினிக் கடவுளின் உருவம் எழுத கல் கொண்டு வராமல் நான் திரும்பினால், ‘குடி நடுக் குறூஉம் கோலேன் ஆக’ என்று சேரன் வஞ்சினம் உரைத்தது வஞ்சியில் அல்லவா? சிவனின் திருவடியை முடியில் சூடி போருக்குப் புறப்பட்ட சேரனுக்கு திருவனந்தபுரத்துப் பள்ளிகொண்ட பதமநாபனின் அருள் பிரசாதத்தைக் கொடுத்தல்லவா வாழ்த்தி அனுப்பினார்கள் என்ற செய்தி வஞ்சியில் தானே வருகிறது. கனகனும் விஜயனும் அருந்தமிழரின் ஆற்றலை இகழ்ந்ததால் அவர்களை எதிர்கொள்ள கங்கைக் கரைக்குப் படையெடுத்த சேரனை வாழ்த்தி திறை கொடுத்தவர்களுக்கு அடையாளமாக செங்குட்டுவன் இலச்சினை பொறித்திருந்த திருமுகம் கொடுக்கப்பட்ட வரலாற்றுச் செய்தி வஞ்சியில் அல்லவா வருகிறது.

கனக விஜயர்களின் தலையில் கல்லேற்றிய செய்தி, அந்தக் கல்லை கங்கையில் நீராட்டிய செய்தி, களம் கண்ட வீரர்களை செங்குட்டுவன் கவுரவித்த செய்தி, அருமறை உணர்ந்த மாடலனுக்கு எடைக்கு எடை பொன் தந்த செய்தி, வெற்றிச் செய்தியை பாண்டிய சோழ மன்னர்களுக்குத் தெரிவித்த செய்தி, வாகை சூடி வஞ்சி மீண்ட செய்தி, செங்குட்டுவன் அறங்கள் புரிந்த செய்தி, வல்லவன் கோதையிடம் ஆரிய மன்னரை சிறையில் இருந்து விடுவிக்க ஆணையிட்ட செய்தி, அணி அணிந்த கண்ணகி வானில் தோன்றியபோது மன்னன் பார்த்து வியந்த செய்தி, அம்மானை , கந்துகம், ஊசல், வள்ளா போன்ற பாவகைகளில் பாடிய செய்தி, கண்ணகி சேரனை வாழ்த்திய செய்தி, மணிமேகலையின் துறவுச் செய்தி, கண்ணகி வரம் தந்த செய்தி, மல்லல் மா ஞாலத்து வாழ் மக்களுக்கு இளங்கோவடிகள் பரிவும் இருக்கணும் பாங்குற நீங்குமின் என நல்லுரை வழங்கிய செய்தி எனக் காப்பியத்தின் முத்தாய்ப்பான தொகுப்பெல்லாம் வஞ்சியில்தான் வருகிறது.

தமிழர் வீரத்தைப் பரை சாற்றிய வஞ்சிக் காண்டத்துக்கு தீர்ப்பு தாருங்கள். நல்ல தீர்ப்பு தராததால் மதுரையில் என்ன நடந்தது எனபதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? வஞ்சிக்குத் தீர்ப்பு தாருங்கள்; கெஞ்சிக் கேட்கிறேன். மிஞ்சிய கண்டம் வஞ்சிக் காண்டமே’’ எனச் சொல்லி முடித்தபோது நானும் பெருமிதத்தின் உச்சிக்கே சென்றேன். ஆய்ந்து அலசி, “வஞ்சிக் காண்டமே” என்று நடுவர் தீர்ப்பு வழங்கியபோது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றேன்.

(இன்னும் பேசுவேன்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE