கா.சு.வேலாயுதன்
‘அரசனை நம்பி புருஷனை கைவிட்டு, அரசனும் புருஷனும் ஆத்தோட போன கதை’ என்கிற சொலவடை கிராமங்களில் பிரபலம். அந்தக் கதையாக கண்ணீர் உகுக்கிறார்கள் தூமனூர் இருளர் பழங்குடிகள்.
‘‘பசுமை வீடு கட்டித்தர்றேன்னு சொல்லி, நல்லாயிருந்த பழைய வீட்டையும் இடிச்சாங்க. ஆச்சு மூணு தீபாவளி... பழசும் போய்... பசுமையும் கிடைக்காம ஆனைக் காட்டுக்குள்ள அல்லாடுறோம். எங்க கஷ்டத்தை நேர்ல வந்து பாருங்க சாமிகளா!” என்கிற பழங்குடி மூதாட்டி ஒருவரின் கண்ணீர் குரல் கேட்டு தூமனூர் பயணமானேன்.
கோவை, மன்னார்காடு சாலையில் மாங்கரை தாண்டினால் வனத்துறை சோதனைச் சாவடி உள்ளது. அங்கே எனக்காக ஜீப்புடன் காத்திருந்தார் ஓர் ஆதிவாசி இளைஞர். சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்களிடம் சாவியை வாங்கிக்கொண்டு பயணப்பட்டோம். 2 கி.மீ. தூரம் பயணித்தால் வருகிறது வனப்பாதை. அந்நியர்கள் நுழையாதபடி பூட்டப்பட்டிருந்த இரும்புக் குழாய் தடுப்பை, வனத்துறை ஊழியரிடமிருந்து பெற்ற சாவியால் திறந்து, பின் பழையபடியே பூட்டிவிட்டுக் கிளம்பினோம்.