பாப்லோ தி பாஸ் - 2: லா வயொலென்சியா..!

By ந.வினோத் குமார்

பாப்லோ எஸ்கோபார் எப்படி நார்கோ ஆனான்..?

 அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு பாப்லோ எஸ்கோபார் பிறந்த, வளர்ந்த சூழலை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்பு நாம் கொலம்பியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

 தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளில் ஒன்று கொலம்பியா. லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் நாடு இது. ஏனென்றால், அந்தக் கண்டத்திலேயே மிகவும் பழமையான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் நாடு அதுதான். 

இத்தாலியப் பயணி கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் முதன் முதலாக இந்தக் கண்டத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அவரின் நினைவாகவே இந்த நாட்டுக்கு கொலம்பியா என்று பெயர் சூட்டப்பட்டது.

கொலம்பியாவில் உள்ள மிக முக்கியமான மலைத்தொடர் களில் ஒன்று, சியெர்ரா நெவாடா த சான்ட்டா மார்ட்டா. இங்கு தான் ‘டைரோனா’ என்ற பூர்வகுடி மக்கள் வசித்து வந்தனர். அவர்கள்தான் கொலம்பியாவில் மிக அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர். வலுவான தேசங்கள், கப்பல் வழியாகப் பயணம் மேற்கொண்டு இதர பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அந்தப் பகுதி மக்களை அடிமைப்படுத்தும் காலனியாதிக்க நடவடிக்கைகள் மிகுந்திருந்த காலம் அது. 

 அந்தக் காலனியாதிக்க நாடுகளில் ஒன்று ஸ்பெயின். தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, மெக்ஸிகோ, கரீபியத் தீவுகள் மற்றும் இன்றைய அமெரிக்காவின் பெருமளவுப் பகுதிகளில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் ஸ்பானியர்கள் வைத்திருந்தனர். அவர்கள், கொலம்பியாவின் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தனர். ஆனால், டைரோனா மக்களை அடிமைப் படுத்த அவர்களுக்குச் சுமார் இருநூறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 

அதற்குப் பிறகு, ஸ்பானியர்கள் மீது ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஸ்பானியர்கள் எவ்வளவோ முயன்றும் ஐரோப்பியர்களிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீட்கவே முடியவில்லை. இருந்தும், அவர்கள் தங்களது முயற்சியை விடாமல், அவ்வப்போது ஐரோப்பியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தார்கள். 

இந்நிலையில்தான் 19-ம் நூற்றாண்டில், சிமோன் பொலிவார் எனும் மாவீரர், ஸ்பெயின் காலனியா திக்கத்துக்கு முடிவுரை எழுதத் தொடங்கினார். அவரது நினைவாகத்தான் பொலிவியா நாட்டுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெனிசுவேலா வில் பிறந்த அவர், காலனியாதிக்கத் தடைகளைத் தகர்த்தெறிந்து, கொலம்பியாவுடன் பனாமா, வெனிசுவேலா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளை இணைத்து ‘கிரான் கொலம்பியா’ (அதாவது, கிரேட் கொலம்பியா) என்று 1819-ல் உருவாக்கி னார் பொலிவார். அதற்குத் தலைவராக அவரே இருந்தார். ஆனால், அரசியல் கருத்து வேற்றுமை கள் காரணமாக 1831-ம் ஆண்டில் ‘கிரான் கொலம்பியா’ கலைக்கப்பட்டது.

1830-ல் பொலிவார் இறந்தார். அவரது இறப்புக்குப் பின்னே, கொலம்பியா தன்னை ஜன நாயக நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், அதன் அரசியல் பரிணாம வளர்ச்சி அவ்வளவு அமைதியாக நடைபெறவில்லை. காலம் காலமாக அதன் அரசு பலவீனமாகவே இருந்து வருகிறது. அது கொலம்பியாவின் சில நகரங்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. மலை களில் வாழும் மக்களைக் கண்டுகொள் வதே இல்லை. எனினும், அரசு செல்ல  முடியாத மூலைகளில்கூட, கத்தோலிக் கம் புகுந்திருக்கிறது. முன்னோர் வழி பாட்டு முறை, மூடநம்பிக்கை, வன்முறை ஆகியவை கலந்தே கத்தோலிக்கம் அங்கே வளர்ந்தது. 

கொலம்பியா எப்போதும் வன்முறை கள் நிறைந்த நாடாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த நாட்டில், பல கட்சி அரசியல் இயங்குமுறை இருந்தாலும், தாராளவாதிகள் (லிபரல்ஸ்) மற்றும் பழமைவாதிகள் (கன்சர்வேட்டிவ்ஸ்) ஆகிய இரண்டு கட்சிகள்தான் அடுத் தடுத்து ஆட்சி அமைத்து வருகின்றன. அரசாட்சியில் தேவாலயத்தின் தலை யீடுகள் தொடர்பாக, 19-ம் நூற்றாண் டில் மட்டும் இந்த இரண்டு கட்சிகளும் சுமார் 8 முறை சிவில் யுத்தங்களை மேற்கொண்டிருக்கின்றன. இரண்டு கட்சி களுமே கத்தோலிக்கச் சார்புடையவை என்றாலும், அரசாங்க விஷயங்களில் தேவாலயம் தலையிடக் கூடாது என்று தாராளவாதிகள் விரும்புகிறார்கள்.

இந்த சிவில் யுத்தங்களில் மிகவும் மோசமான யுத்தம் 1899-ல் நடைபெற்றது. ‘ஆயிரம் நாட்கள் போர்’ என்று அழைக்கப்படும் இந்த யுத்தம், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது மட்டுமல்லாமல், கொலம்பியாவில் அதுவரை இருந்த பொருளாதாரம், அரசு நிர்வாகம் என எல்லாவற்றையும் அழித்தது. 

 மிகவும் மோசமான காலம் அது. எங்கு பார்த்தாலும் பட்டினி. வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருந்தது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் பணம் படைத்தவர்கள்தான் என்று கூறி, மார்க்ஸியவாதிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை செல்வந்தர்கள் வன்முறை மூலம் ஒடுக்கினர். இந்தப் போராட்டங்களுக்கு கொலம்பியர்கள் ஆதரவளித்தனர் என்று கூற இயலாது. ஏனென்றால், பெரும்பாலான கொலம்பியர்கள் மார்க்ஸியவாதிகளோ அல்லது பணக்காரர்களோ அல்ல. அவர்கள் அன்றாடம்காய்ச்சிகள். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் அமைதி மட்டும்தான்!

“அந்த அமைதியை நான் உங்களுக்குத் தருவேன்” என்றார் கைட்டான். ஹோர்ஹே எய்ஸேர் கைட்டான் 49 வயது கொலம்பிய அரசியல்வாதி.  “நான் தனி மனிதன் அல்ல. நான் இந்த தேசம்!” என்று முழங்கியவர். திறன்மிக்க வழக்கறிஞரான அவர், தாராளவாதக் கட்சியின் தலைவராக இருந்தார். அலுவல் ரீதியாகச் செல்வந்தர்களுடன் பழகிவந்தாலும், எப்போதும் சாமானியர்களின் பக்கம் நின்றே பேசியவர். 1950-ல் நிச்சயம் அவரே நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த வேளையில், 1948-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி அவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதிலிருந்து தொடங்குகிறது கொலம்பியாவின் சமீபகால வரலாறு!

காடுகள், நதிகள் என இயற்கை வளத்திலும், மரகதம், தங்கம் என கனிம வளத்திலும் பசுமையான நாடு கொலம்பியா. எனவே பிற நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அவசியம் அதற்கு இருக்கவில்லை. அங்கு விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். தாராளவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட அவர்கள், அந்த இரண்டு கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்திருந்தனர். எனவே, அவர்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 

இதனால் பல கெரில்லா குழுக்கள் தோன்றின. இரண்டு கட்சியைச் சேர்ந்த விவசாயிகளும் ஒருவரை ஒருவர், பயிர் அறுக்கும் அரிவாளால் தாக்கிச் சண்டையிட்டுக் கொண்டனர். கைட்டான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உருவான இந்தக் கலவரம் ‘லா வயொலென்சியா’ என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கலவரமாக வெடித்த இந்த வன்முறை, பிற்காலத்தில் உள்நாட்டுப் போராக மாறியது. சுமார் பத்து ஆண்டுகாலம் நடந்த இந்த வன்முறையில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறைக்கு இடையில்தான், ரியோ நெக்ரோ எனும் இடத்தில் 1949-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பிறந்தான் பாப்லோ எஸ்கோபார். அவனுக்கு ராபர்ட்டோ எஸ்கோபார் என்ற அண்ணனும் உண்டு. இவர்களது தந்தை அபேல் எஸ்கோபார் ‘ராஞ்ச்’ என்று சொல்லப்படும் புல்வெளி நிலத்தில் கால்நடைகளைப் பராமரிக்கும் பணியைச் செய்து வந்தார். தன் முன்னோர்களிடமிருந்து கிடைத்த நிலத்தில் அவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவரது மனைவி ஹெர்மில்டா, பள்ளி ஆசிரியை. பாப்லோவுடன் சேர்த்து, மொத்தம் இவர்களுக்கு 7 குழந்தைகள்.
மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் குடும் பத்தில் ஒரு புயல் வீசியது. ஏதோ ஒரு வினோதமான நோய் தாக்கி, அவர்களது ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து போயின. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால், வீடு, வாசல், நிலம் அனைத்தையும் இழந்து, அவர்கள் நடுத்தெருவுக்கு வர வேண்டியதாயிற்று. 

பிறகு அவர்கள், திதிரிபு நகரத்துக்குக் குடிபெயர்ந் தார்கள். அங்கு தனக்கு ஒரு ஆசிரியப் பணியைத் தேடிக் கொண்டார் ஹெர்மில்டா. அதில் கிடைத்த வருமானம், வீட்டு வாடகைக்கும், வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருந்தது. எஸ்கோபார் சகோதரர்கள் படித்த பள்ளி, வெகு தொலைவில் இருந்தது. பேருந்தில் போக வசதியில்லை; நடந்துதான் செல்ல வேண்டும். உடுத்திக்கொள்ள நல்ல துணியில்லை. எப்போதும் கந்தல் துணியைத்தான் அவர்கள் அணிய வேண்டியிருந்தது. 

ஒரு முறை, காலில் ஷூ அணியாமல் சென்றதால், பள்ளியிலிருந்து விரட்டப்பட்டான் பாப்லோ. இதனால் மனம் கசந்த ஹெர்மில்டா, அருகிலிருந்த ஒரு ஷூ கடைக்குச் சென்று கடனுக்கு ஒரு புதிய ஷூவை வாங்கி வந்தார். இப்படியான வறுமை ஏற்படுத்திய காயம், பாப்லோவின் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. எஸ்கோபார் குடும்பம் தங்கியிருந்த ஊர், தாராளவாதிகள் கட்சியினர் அதிகம் இருந்த பகுதி. எனவே, கெரில்லாக்கள், எஸ்கோபார் குடும்பத்தினரும் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள்தான் என்று நினைத்து, அவர்களைக் கொல்ல வந்தனர். பாப்லோவுக்கு அப்போது 7 வயது. 
திடீரென ஒரு நாள் இரவு, கெரில்லாக்கள் அந்த ஊருக்கு வந்தனர். ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் உடைத்து, அங்கிருந்தவர் களைக் கொன்றனர். 

பாப்லோவின் வீடும் தட்டப்பட்டது. கதவு பலமானதாக இருந்ததால் அவர்களால் உடைக்க முடிய வில்லை. எனவே, கெரில்லாக்கள் நெருப்பு வைத்துவிட்டனர். குழந்தைகளைக் கட்டிலுக்கு அடியில் மறைந்திருக்கச் சொல்லிவிட்டு, ‘அடோச்சா குழந்தை இயேசு’விடம் மன்றாடினார் ஹெர்மில்டா. தனது குடும்பம், இந்த வன்முறையிலிருந்து தப்பித்துவிட்டால், அவருக்கு ஒரு கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அந்த நேரத்தில் பிரார்த்தனை மட்டுமே அவர்களுக்கான ஆயுதமாக இருந்தது!

அதிர்ஷ்டவசமாக, அங்கு வந்த ராணுவத்தினர் நெருப்பை அணைத்து எஸ்கோபார் குடும்பத்தினரைக் காப்பாற்றினர். அந்தத் தாக்குதல் நடந்த சில காலத் துக்குப் பிறகு, பாப்லோவும் ராபர்ட்டோவும் மெதஜின் நகரத்திலிருந்த தங்களது பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ‘நித்திய வசந்தத்தின் நகரம்’ என்ற புகழ் மெதஜினுக்கு உண்டு. அவ்வளவு அழகான நகரம் அது. 
அந்த நகரம் பாப்லோ எஸ்கோபாருக்கும் வசந்தத்தை அளித்தது. அங்குதான்  அவன் தனது கடத்தல் சாம்ராஜ்ஜியத் தையும் நிறுவினான்!

(திகில் விலகும்...)
 

ந.வினோத் குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE