குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
கடந்த வாரம், குடி போதையில் காரை ஓட்டி வந்ததாக பாஜக இளைஞரணியின் (யுவ மோர்ச்சா) செயற்குழு உறுப்பினர் நடிகை காயத்ரி ரகுராமுக்கு அபராதம் விதித்தது அடையாறு போலீஸ். இந்தச் சம்பவத்தை அடுத்து, காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழக பாஜகவில் உள்குத்து அரசியல் நடக்கிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் இருக்கிறார்கள். அந்தப் பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன். என் மீது களங்கம் சுமத்துவதற்காக சிலருக்குக் கையூட்டு கொடுக்கப்படுகிறது’ என்று காட்டமாக கருத்துப் பதிவிட்டிருந்தார். இந்தச் செய்தி பாஜக வட்டாரத்தில் காட்டுத் தீயாக பரவிக்கொண்டிருந்த சமயத்தில் காயத்ரி, காமதேனு இதழுக்கு பேட்டி அளித்தார்.
பாஜகவில் உள்குத்து அரசியல் நடப்பதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
இன்னிக்கு நேத்து இல்ல... அது ரொம்ப நாளாவே போய்ட்டு இருக்கு. நமக்கு கெட்ட பேர் வாங்கிக் குடுக்கணும்னு வெயிட் பண்ணிட்டே இருக்காங்க. ஆனா, அதுக்கான எவிடென்ஸ் என் கையில் இல்ல.
அப்படி உங்களைக் குறிவைத்துத் தாக்க என்ன காரணம்?
எதையாவது சொல்லி என்னைக் கீழே தள்ளி மிதிச்சுட்டு கட்சிக்குள்ள அவங்க முன்னணி பதவிக்கு வர நினைக்கிறாங்க.
உங்களுக்கு எதிரான சதி என்னன்னு கொஞ்சம் விரிவா சொல்ல முயுமா?
கொஞ்ச நாள் முந்தி சின்னதா ஒரு மிரட்டல் வந்துச்சு. இப்ப அது என்னனு வெளிப்படையா ஷேர் பண்ணிக்க விரும்பல. ஓகேயா! ஆனா, அவங்க எச்சரிக்கை என்கிற போர்வையில் பயமுறுத்தின மாதிரியான சம்பவம் எனக்கு எதிரா யார் மூலமா நடந்தாலும் சரி... என்னை பயமுறுத்தியவங்க அதுக்குப் பின்னால் இருப்பதாக உறுதி ஆயிடும். அப்ப அவங்க மேலதான் நான் நடவடிக்கை எடுப்பேன்.
வேலை இருந்ததாலையா இல்ல, மிரட்டல் வந்ததால ஒதுங்கீட்டீங்களா?
சேசே... உண்மையிலேயே வேலை இருந்துச்சு. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்; பயப்படுற ஆளும் கிடையாது நான். முதல்ல மிரட்டல் விடுத்தவங்கதான் இப்ப நான் குடிச்சிட்டு கார் ஓட்டுனதா பணம் குடுத்துப் பொய்ப் பிரச்சாரம் செஞ்சுருக்காங்க. இதுலயும் நான் சொல்ற அந்த ஆளின் கைவரிசை இருக்கு.
உண்மையிலேயே அன்றைக்கு அடையாறு செக்போஸ்ட்ல என்னதான் நடந்துச்சு?
நான், எங்க அம்மா, என்னோட கோ ஆர்ட்டிஸ்ட் பொண்ணு மூணு பேரும் ஷூட்டிங் முடிச்சுட்டு கார்ல போயிட்டு இருந்தோம். அன்னைக்கு எனக்கு உடம்புக்கு முடியாம இருந்துச்சு. வீஸிங் ப்ராப்ளத்துக்காக இன்ஹெலர் அடிச்சுருந்தேன். இன்ஹெலர்ல ஆல்கஹால் இருக்கும். போலீஸ்காரங்களோட பிரத் அனலைசர்ல அதுதான் காட்டுச்சு. நான் குடிச்சிருக்கதா போலீஸ் சொன்னாங்க.
அவங்கட்ட எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி, ‘உங்களுக்கு சந்தேகமா இருந்தா பிளட் டெஸ்ட் எடுத்துப் பாருங்க’ன்னு சொன்னேன். ‘அதெல்லாம் வேணாம் மேடம்... ஆர்க்யூ பண்ணாம ஃபைனைக் கட்டிட்டு போயிட்டே இருங்க’ன்னாங்க. ஆனா, என் கையில் கார்டு தான் இருந்துச்சு பணம் இல்லை. அதனால, என்னோட ஃப்ரெண்டு வீட்டுக்கு வாங்க, அவங்கட்ட ரூபாய் வாங்கித் தர்றேன்னு நான்தான் போலீஸ்காரரை என்னோட காருல ஏத்திட்டுப் போனேன். ராஜ்குமார் என்ற அந்த போலீஸ்காரர் என்கூட செல்ஃபி எல்லாம் எடுத்தாரே! போலீஸ்காரங்க யாரும் என்னோட காரை ஓட்டல. நான்தான் ஓட்டிட்டுப் போனேன். நான் குடிச்சிருந்தா என்கிட்ட காரை எப்படிக் குடுத்தாங்க? என்னை எப்படி காரை ஓட்டவிட்டாங்க?
இதுல உங்க உள்கட்சி எதிரியோட சதி எங்க வருது ?
நிச்சயமா... ஏன்னா, என்னோட காருக்குப் பின்னால தினப் பத்திரிகை நிருபர் ஒருத்தரு குடிச்சுட்டு காரோட்டிட்டு வந்தார். அவரையும் போலீஸ் நிறுத்தி வெச்சாங்க. இந்த விஷயத்தை எனக்கிட்ட சொன்ன போலீஸ்காரங்க, ‘மேடம் நீங்க காரைவிட்டு கீழ இறங்காதீங்க... பின்னாடி இன்ன பத்திரிகையோட நிருபர் நிக்கிறார்’னு அந்தாளோட பேரைச் சொல்லிச் சொன்னாங்க. மறுநாள் காலையில பாஜக தரப்பிலிருந்து எனக்குப் பேசிய ஒருத்தர், ராத்திரி என்னோட காருக்குப் பின்னால் வந்த நிருபரின் பெயரைச் சொல்லி ‘மேடம் உங்ககிட்ட அவரு பேசணும்னு சொல்றார்’னாரு. தாராளமா பேசச் சொல்லுங்கன்னு சொன்னேன். ஆனா, அந்த நிருபர் என்கிட்ட பேசவே இல்ல. அதுக்குள்ளதான், நான் குடிச்சிட்டு கார் ஓட்டுனதா தப்பான செய்தியை திட்டமிட்டுப் பரப்பிட்டாங்க. எனக்கெதிரா வதந்தி பரப்புனதுல நான் சொல்ற பாஜக பிரமுகருக்கு உள்ள கனெக்ஷன் இப்ப புரியுதா. என்னைப் பொறுத்தவரை தப்புன்னா தப்புன்னு ஒத்துக்கிட்டுப் போயிட்டே இருப்பேன். ஆனா, தப்பே செய்யாதவட்ட தப்புத் தப்புன்னு சொன்னா அதை என்னால ஒத்துக்க முடியாது.
‘பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன். இளம் தலைவர்களுக்கு வாழ்த்துகள்’ என்றெல்லாம் உங்கள் ட்வீட் பேசுகிறதே..?
கட்சிக்குள் அப்படி ஒரு குரூப் இருக்கு. அவங்க யாருன்னு எனக்குத் தெரியும். கடவுள்னு ஒருத்தர் இருக்கார். அதனால அவங்க ஒருநாள் கையுங்களவுமா மாட்டுவாங்க. அப்ப அவங்களப் பத்தி உங்ககிட்ட விரிவா பேசுறேன்.
“பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகும்போதே கட்சியிலிருந்து விலகிவிட்ட காயத்ரி ரகுராம் இப்போது பாஜகவில் இல்லை” என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்திருக்கிறாரே?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் மூன்று மாதத்துக்கு தற்காலிகமாகக் கட்சி நடவடிக்கைகளில் பங்கெடுக்கமுடியாது என்றுதான் சொல்லிவிட்டுச் சென்றேன். ஆனால், அதற்குப் பிறகு நான் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தது இவங்களுக்குத் தெரியாதா? இவங்களுக்கு நான் தேவை என்றால் அழைப்பார்கள். எனக்கொரு பிரச்சினை என்றால் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பார்களா? என்னை பிளாக் மெயில் செய்யும் கூட்டம் சொல்வதைக் கேட்டுக் கொண்டு ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இப்படி நடந்து கொள்வது சரியில்லை. நான் யுவ மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினர். கட்சியில் நான் இருக்கிறேனா இல்லையா என்பது தேசிய தலைமைக்குத் தெரியும்.
பாஜகவுக்குள்ள இப்படியெல்லாம் உள்குத்து அரசியல் இருந்தால் தமிழகத்தில் தாமரை எப்படி மலரும்?
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டிய பொறுப்பு தமிழக பாஜக தலைவர் கையில் இருக்கு. ஆனா, சரியான ஆளுங்கள வெச்சு கட்சியை வழி நடத்தினாத்தான் அது சாத்தியமாகும். இந்த மாதிரியான ரவுடியிஸம் பண்ணிக்கிட்டு, மிரட்டல் அரசியல் செஞ்சுட்டு இருக்கிற பசங்கள எல்லாம் வெச்சுருந்தா, தமிழகத்தில் தாமரைக்கான வாய்ப்புகள் நழுவிப் போயிக்கிட்டேதான் இருக்கும்.