கடத்தல்காரனா...
காட்ஃபாதரா...
தீவிரவாதியா...
ராபின் ஹூட்டா...
அல்லது இவனே
ஒரு அரசாங்கமா...?
பிரம்மாண்ட போதை சாம்ராஜ்யத்தின் இருட்டுப் பாதைகளில்...
வாரம்தோறும் பயணிப்போம்...
இறுதியில், அவர்கள் இருவர் மட்டுமே எஞ்சி இருந்தார்கள்.
‘அடுத்து என்ன?’ என்கிற கவலை இருவரின் முகங்களிலும் படர்ந்திருந்தது. அப்படி ஒரு கவலை இருப்பதாக அவன் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், லிமான் தன் மன, முக கவலையைச் சொற்களாகக் காட்டிவிட்டான்.
“எல் பேத்ரோன்… அடுத்து நாம என்ன செய்யப் போறோம்..?”
எல் பேத்ரோன்..? ஆமாம். அப்படியென்றால், ஸ்பானிய மொழியில் ‘தி பாஸ்’ என்று அர்த்தம். அவனை, அவனுக்குக் கீழ் பணியாற்றிய அனைவரும் அப்படித்தான் அழைத்தார்கள். அவர்கள் புழங்கும் தொழிலில் யாரும் யாருடைய உண்மையான பெயரையும் சொல்லி அழைப்பது மரபு அல்ல.
அவ்வளவு ஏன்… லிமான் என்ற பெயர்கூட உண்மையான பெயர் இல்லை. அல்வரோ த ஜீசஸ் அகுதெலோ என்பதுதான் லிமானின் உண்மையான பெயர். ஆனால், எல் பேத்ரோன் ஏன் அவனுக்கு லிமான் என்ற பெயரைச் சூட்டினான் என்ற காரணம் யாருக்குமே தெரியாது.
தன் தலையை மெல்ல மேலேயும் கீழேயும் ஆட்டியவாறே சோபாவில் சரிந்தான் ‘பாஸ்’. சோபாவில் உட்கார்ந்த பின்பும் தலையை ஆட்டியவாறு லிமானைப் பார்த்து அரைப் புன்னகை சிந்தினான் அவன்.
அவனிடம் லிமானுக்குப் பிடித்த விஷயமே அந்த ‘கம்போஷர்’தான். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தன் உள்ளக் கொந்தளிப்பை வெளியே தெரியாதபடிக்கு மிகவும் அமைதியாக இருந்து வந்திருக்கிறான் அவன். இப்போதும் அப்படியே..!
முன்பு அந்த அமைதி, லிமானுக்குப் பலமுறை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது, அவனின் அமைதியைப் பார்த்து லிமான் கலக்கமுற்றான்.
‘என்ன மனுஷன் இவர்… தான் கட்டி எழுப்பிய வியாபாரத்தை இழந்து, உறவுகளை இழந்து, தன் குடும்பத்தைப் பிரிந்து… எல்லாவற்றுக்கும் மேலாக, தனது உயிர் தன் கையில் இருக்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தெரிந்தும் எப்படி இவரால் இவ்வளவு சாந்தமாக இருக்க முடிகிறது..?
ஒரு பக்கம், ‘சர்ச் பிளாக்’ இவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், ‘லோஸ் பெபேஸ்’ இவரைக் கண்டமாக்கக் காத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், கலி கார்ட்டெல் இவரை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டியிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு, அமெரிக்க டி.இ.ஏ. ஏஜென்ட்டுகள் இவரை உயிருடன் பிடித்து கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த வலை விரித்திருக்கிறார்கள்.
இந்த நொடி, இவர் இந்த நகரத்தில் இருக்கிறார் என்ற விஷயம் நிச்சயமாக அவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எந்த நேரத்திலும், இவரை அவர்கள் போட்டுத் தள்ளலாம். அது உறுதி. ஆனால், யாருடைய துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டா இவரது உயிரைக் குடிக்கப் போகிறது என்பதுதான் இப்போதையே கேள்வி. ஆனாலும், மனுஷனுக்குத் தைரியம் ஜாஸ்திதான்…’ – என்று நீண்டு கொண்டிருந்த லிமானின் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, பாஸின் கனைப்பு.
ஐந்து அடிக்கும் சற்றே குறைவான உயரம். சற்றே பருத்த உடல். ‘அப்பர் மிடில் கிளாஸ்’ மத்திம வயதுக்காரர்களுக்கே உரிய தொந்தி. அணிந்திருந்த நீல நிற போலோ சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டிருந்தான். எப்போதும் போல, நெஞ்சு வரை பொத்தான்களை மாட்டாமல் காற்றோட்டமாகத் திறந்துவிட்டிருந்தான். சட்டைக்குப் பொருத்தமாக வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட். கால்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக ஷூ இல்லாமல், சாண்டல்களை அணிந்திருந்தான் பாஸ்.
மெல்ல எழுந்தான் அவன். சுவரின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ரேடியோவைக் கையிலெடுத்தான். ஸ்பீக்கைரைத் தன் வலது கையில் ஏந்தியவாறே, ஃப்ரீக்வென்ஸிக்காகக் காத்திருந்தான்.
‘சர்ச் பளாக்’ தன்னைத் தேடத் தொடங்கிய நொடி முதல், அவன் தொலைபேசியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டான். ஒட்டுக் கேட்கப்படலாம் என்கிற பயம்தான். ஆனால், ரேடியோ மூலம் தொடர்புகொள்ளும் போது வேறு வேறு அலைவரிசையில் தொடர்பு கொள்வதால் அதை போலீஸார் ‘ட்ரேஸ்’ செய்வது கடினம்.
தன் எதிரிகள் நிரம்பிய அந்த நகரத்தில் அவன் காற்றைப் போலச் சுற்றித் திரிந்தான். காற்றை யாரால் கண் கொண்டு பார்க்க முடியும்..? அவன் அங்குதான் இருக்கிறான் என்பது தெரிந்தும், யாராலும் அவனை நெருங்க முடியவில்லை.
காற்றைப் பார்க்க முடியாது. ஆனால், கேட்க முடியுமே..! அமெரிக்க டி.இ.ஏ. ஏஜென்ட்டுகள் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் உதவியுடன் அவனது குரலைப் பின்தொடரத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.
அங்கும் இங்கும் ஓடித் திரிந்து, ஒளிந்து, மறைந்து அவன் சோர்ந்து போயிருந்தான். இப்போது அவனிடம் போய், ‘உன் குரலைக் கவனிக்கிறார்கள்’ என்று யாரேனும் சொல்லியிருந்தால் அவன் கவலைப்பட்டிருப்பானா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், இந்த நொடி அவன் பேசியாக வேண்டும். தன் மனைவி, மகன், மகள் ஆகியோரின் குரல்களைக் கேட்டு, அவன் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.
சில ‘கரகர’ப்புகளுக்குப் பிறகு ரேடியோவில் சிக்னல் கிடைத்தது.
“பாப்பா..?” – மறுமுனையில் மகன் கிரிகோரி. யுவான் பாப்லோவின் செல்லப் பெயர் அது.
“கிரிகோரி…”
“சொல்லுங்க பாப்பா…”
“கேள்வி வந்திருக்குனு சொன்னியே... இப்ப பதில் சொல்றேன். அப்படியே எழுதிக்கோ…”
“சரி பாப்பா…”
முந்தைய தினம்தான், ‘செமானா’ எனும் பத்திரிகையிலிருந்து யுவான் பாப்லோவுக்கு அந்தக் கேள்விகள் வந்திருந்தன. சுமார் 40 கேள்விகள். எப்போதெல்லாம் தான் முட்டுச்சந்தில் மாட்டிக்கொள்ள நேர்கிறதோ, அப்போதெல்லாம் மீடியாவைப் பயன்படுத்தி அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அச்சாரம் போடத் திட்டமிடுவான் ‘பாஸ்’. அன்றும் அதே மாதிரிதான்.
“முதல் கேள்வியைப் படி…”
“உங்கள் தந்தை கைதான பிறகே, எந்த ஒரு நாடும் உங்களை அகதியாக ஏற்றுக்கொள்ளும் என்ற நிலை இருக்கிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், உங்கள் தந்தை தானாக முன் வந்து சரணடைவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?”
“எழுதிக்கோ…”
“ம்..”
“நானும் எனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டில் பாதுகாப்பாகக் குடியமர்த்தப்படும் வரையில், எனது தந்தை சரணடைய மாட்டார். அத்துடன், என் தந்தையைக் கைது செய்கிறோம் என்ற பெயரில், மெதஜின் நகரத்தில் போலீஸார் நடத்தும் படுகொலைகளை நிறுத்த வேண்டும்…”
“ம்… சரி..”
“அடுத்து…”
“ஏன் பல நாடுகள் உங்களை, உங்களது தாய் மற்றும் தங்கையை அரசியல் அகதியாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன..?”
“ஏனென்றால் அந்த நாடுகளுக்கு, உண்மை என்னவென்பது தெரியாது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுத் தூதரகங்களின் கதவுகளையும் நாங்கள் தட்டப் போகிறோம். எங்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்…”
“சரிப்பா…”
“அடுத்த கேள்வி…”
“நீங்கள் ஏன்….”
தட்… தட்… தட்ட்ட்டட்… தடதடதடதட…. அந்த வீட்டின் கதவுகள் பலமாகத் தட்டப்பட்டன.
ஸ்பீக்கரைக் கீழ் இறக்கியவாறே “லிமான்… யாருன்னு பாரு…” என்று குரல் கொடுத்தான். கதவு தட்டப்படும் சத்தம் பலமாகவும் அவன் உஷாரானான்.
“கிரிகோரி… நான் அப்புறம் பேசுறேன்..” என்று சொல்லிவிட்டு ரேடியோவை அணைத்தான். ரேடியோவைக் கீழே வைக்கும்போது அனிச்சையாக அவனது இடது கை, அவன் இடுப்புக்குப் பின்புறம் சென்றது. துப்பாக்கியை உருவினான். சிக் சாவெர். அவனது ஃபேவரைட் துப்பாக்கி.
இரண்டாவது மாடியிலிருந்து அவன் வேக வேகமாகக் கீழிறங்கினான். அதே சமயம் கீழ் தளத்திலிருந்து லிமான் மூச்சிரைக்க மேலே வந்தான்.
“எல் பேத்ரோன்… அவங்க வந்துட்டாங்க…” என்று சொல்லிக்கொண்டே மேலே படியேறினான். அவனுக்குப் பின்னால் துப்பாக்கிகள் சத்தமிட்டன.
டுமீல்… டுமீல்…
இரண்டாவது மாடியிலிருந்த ஜன்னலை உடைத்தான் லிமான். முதலில் அவன் வெளியே குதித்தான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பாஸுக்கு சிக்னல் கொடுத்தான். சாண்டல்களை உதறினான். தொடர்ந்து ஜன்னல் வழியே அவனும் கூரையில் குதித்தான்.
இருவரும் கூரையின் மீது ஓடத் தொடங்கினார்கள். வீட்டின் பின்புறத்தை அடைந்து தப்பிப்பதுதான் அவர்களது திட்டம். ஆனால், ‘சர்ச் ப்ளாக்’ கமாண்டோக்கள் அந்த வீட்டின் பின்புறத்தைச் சுற்றி வளைத்திருந்தார்கள். அவர்களின் தோட்டாக்கள் முதலில் லிமானைப் பதம் பார்த்தன. கூரையிலேயே இறந்துவிட்டவனின் சடலம் சரிந்து, கீழே புல்தரையில் விழுந்தது.
லிமான் சுடப்பட்டதைப் பார்த்து சுதாரித்துக் கொண்டான் பாஸ். கூரைச் சுவரோடு ஒட்டியபடியே நகர்ந்து நகர்ந்து அடுத்த வீட்டுக் கூரைக்குத் தாவ முயற்சித்தான். அப்போது ஒரு தோட்டா பறந்து வந்து அவனது வலது காலைப் பதம் பார்த்தது. வலது காலின் பின்புறம் முழங்காலுக்கு மேலே பாய்ந்த அந்தத் தோட்டா, அந்தக் காலின் முன்புறம் வெளியேறியது.
இரண்டாவது தோட்டா அவனது வலது தோள்பட்டையின் பின்புறம் பாய்ந்தது. ஆனால், அது அவனது உடலைவிட்டு வெளியே செல்லவில்லை. அவன் கீழே சரிந்தான். மயக்க நிலையில் இருந்தான்.
“பாப்லோ… எழுந்திரு பாப்லோ எழுந்திரு… இன்னும் ஓட வேண்டும். உன் வாழ்க்கை இங்கே முடியக் கூடியது அல்ல. நீ அழிக்க வேண்டிய எதிரிகள் இன்னும் இருக்கிறார்கள். ஓடு பாப்லோ… ஓடு…” என்ற குரல் அவனது காதுக்குள் ஒலித்தது.
வாழ்வு தேடி வந்த நகரம் தன்னைக் கைவிட்டுவிட்டதாக உணர்ந்தான் அவன். கூரையில் மேலதிக பூட்ஸ் சத்தங்கள் கேட்டன. அப்போது அந்த மூன்றாவது தோட்டா வெடித்தது. எங்கிருந்து, எப்படி, யாரால் வெடித்தது அந்தத் தோட்டா…? பாப்லோ என்ன ஆனான்..?
அதையெல்லாம் தெரிந்துகொள்ளும் முன்...
யார் இந்த பாப்லோ…? யார் இந்த எல் பேத்ரோன்…?
பாப்லோ எமிலியோ எஸ்கோபார் கவீரியா. சுருக்கமாக பாப்லோ எஸ்கோபார். அவன் ஒரு நார்கோ..!
(திகில் விலகும்...)