நானொரு மேடைக் காதலன் - 18

By நாஞ்சில் சம்பத்

அரசியல் களத்திலும் இலக்கியத் தளத்திலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி நாவாடுவது ஒவ்வொரு நாளும் அறை கூவலாகத்தான் இருக்கும். இந்த அறை கூவலுக்கு முகம் கொடுத்து வாகை சூடியவர்களில் எங்கள் மண்ணில் பிறந்து சிறந்த தலைவர் பூதப்பாண்டி ஜீவானந்தம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிக்கத்தக்க தலைவர் தா. பாண்டியன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் பேரியக்கத்தில் எங்கள் மண்ணுக்கு மகிமை சேர்த்த குமரி அனந்தன், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், திக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் சேலம் அருள்மொழி போன்றவர்கள் முக்கியமானவர்கள். 



இவர்கள் எல்லாம் நாவாடுவதில் என்னைக் காட்டிலும் வல்லவர்கள் என்றாலும் அவர்கள் தங்களுக்குள் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டார்கள். இதில் நான் கொஞ்சம் வித்தியாசமானவன். பள்ளி வாசலிலும் பேசுவேன். பத்ரகாளி அம்மன் சன்னிதியிலும் பேசுவேன். இப்படித்தான் ஒருநாள் திருவாரூர் மாவட்டம் வடக்கு ஆலத்தூர் வள்ளலார் சன்மார்க்க சபையில் இருந்து அருட் பிரகாச வள்ளலார் பற்றி பேசுவதற்கு அழைப்பு வந்தது. அதை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதில் எனக்குள்ளேயே பட்டிமன்றம் நிகழ்ந்தது. கசாப்புக் கடை நடத்துகிறவன் காந்தியைப் பற்றிப் பேசலாமா என்றெல்லாம் விமர்சனங்கள் வருகிற நாட்டில் புலால் உணவு சாப்பிடுகிற நான் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசலாமா என்று யாரும் கேள்வி கேட்டால் பெற்ற செல்வாக்கு பெருமூச்சு வாங்குமே என்றும் யோசித்தேன். தன் நெஞ்சறிவது பொய்யற்க என்ற குறள் என்னைக் குத்திக் கிழித்தது. ஜீவ காருண்யத்தை உயிர் மூச்சாகக் கொண்டு உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து வழி காட்டியவர் வள்ளல் பெருமான்.

என்னுடைய மனச்சாட்சி அந்த விழாவில் பேச என்னை அனுமதிக்க வில்லை. வடக்கு ஆலத்தூரில் தொடர்ந்து வலியுறுத்தியும் வற்புறுத்தியும் வந்தார்கள். யார் சொன்னால் இவன் வருவான் என்று யோசித்து எனக்கு வானமும் சிறகுமாய் வாய்த்த நண்பன் திருவாரூர் ரயில் பாஸ்கரை அணுகினார்கள். அவர் ஆணையை மீற முடியாதவனாக வள்ளலார் விழாவில் பேச ஒப்புக்கொண்டேன். அப்படி ஒப்புக்கொண்ட நாளில் இருந்து அதாவது 51 நாட்கள் நானும் புலால் உணவை மறுத்தவனாய் மறந்தவனாய் இருந்து அந்த விழாவில் உரையாற்றும் தகுதியைப் பெற்றேன்.

வடக்கு ஆலத்தூர் - திமுக மேடைகளுக்குப் பல்கலைக் கழகத் தகுதியை வாங்கித் தந்த நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த ஊர் என்று அறிந்தபோது ஆர்வம், அணையாத நெருப்பாய் என்னில் எரிந்தது. ஆரூர் நண்பன் பாஸ்கருடன் வடக்கு ஆலத்தூர் சென்றேன். சின்னஞ்சிறு ஊர் என்றாலும் அனைவரது பங்களிப்போடும் பென்னம் பெரிய விழாவாக நிகழ்ச்சியை வடிவமைத்து இருந்தார்கள். இலக்கிய மேடைகளில் உரையாற்றச் சென்றாலும் எனது அரசியல் அடையாளம் பெருந் திரளாக மக்கள் வருவதற்கான ஒரு நல் வாய்ப்பைத் தருகிறது என்பதைப் புறந்தள்ள முடியாது. உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும் என்பதை நெஞ்சில் நினைத்தவனாய் கறுப்புத் துண்டு கழுத்தை அலங்கரித்தாலும் நெற்றியில் நீறு பூசிய கோலத்தில் மேடையேறினேன். 

‘மருந்தறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்றறியேன் மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கை நிலை அறியேன் திருந்தறியேன் திரு அருளின் செயலறியேன் அறந்தான் செய்தறியேன் மனமடங்கு திறத்தினில் ஓர் இடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ இருந்ததிசை  சொலஅறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே’ என்ற வள்ளலாரின் முறையீட்டை முதலில் பாடியதும்தான் சன்மார்க்கிகள் கணக்கு பார்க்காமல் கை தட்டினார்கள்; உற்சாகத்தின் உச்சிக்கே சென்றேன்.
 “சாதியிலே சாத்திரச் சந்தடியிலே கோத்திரச் சண்டையிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் என்றும் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடிப் போகட்டும் என்றும் பாடிய வள்ள லாரின் அருட்பாவை திராவிட இயக்கம் வழிமொழிந்தது. அறியாமையிலும் அந்தகாரத்திலும் அழுந்திக் கிடக்கிற மனிதனைக் கரை சேர்க்க வள்ளலார் வகுத்த நெறிகளுக்கு திராவிட இயக்கம் வடிவம் தருவதற்குத் தன்னாலான பங்களிப்பை எண்ணத்தாலும் எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் தந்திருக்கிறது. அந்தத் தகுதியில் உங்கள் முன்னால் நிற்கிறேன். 

வாயிலிருந்து வருகின்ற வார்த்தைக்கும் வாழுகின்ற வாழ்க்கைக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி உள்ள மனிதர்களுக்கு மத்தியில் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த மகோன்னதத்தின் பெயர் வள்ளலார். ஆசாபாசம் என்ற அழுக்கு அண்டாமல் வாழ்ந்த வள்ளலார் மானுடப் பற்றாளர்களின் வரிசையில் முதல் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய பெருமைக்குரியவர். ஆண்டாண்டு காலம் ஆகம விதிப்படி பின்பற்றி வந்த வழிபாட்டு முறையை ஏற்க மறுத்து அருட்பெருஞ்சோதி தரிசனத்தை அறிமுகம் செய்ததால் புரட்சியாளராகவும் கருதப்படுகிறார். ஏதுமற்ற ஏழை மக்கள் பால் அவர் காட்டிய கருணைக்கு வானம் கூட ஈடாகாது. பசித்திருந்ததால் விழித்திருந்ததால் தனித்திருந்ததால் தன்னை வென்று சரித்திரம் படைத்தார். 

மணிமுடி தரித்திருந்த மன்னாதி மன்னர்களுக்குக் கிடைக்காத பெருமையும் கிட்டாத செல்வாக்கும் அவர் வாழ்ந்த காலத்திலேயே வள்ளலாருக்கு வாய்த்தது. வரமாகக் கிடைத்ததல்ல; வாழ்ந்த நெறி வழுவாத வாழ்க்கையில் கிடைத்தது. அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருகனை வழிபடு கடவுளாகவும் சிவம் தழைக்க வந்த திருஞான சம்பந் தரைக் குருவாகவும் கரையாத நெஞ்சையும் கரைய வைக்கின்ற மாணிக்க வாசகப் பெருந்தகையின் திருவாசகத்தை வழிபடு நூலாகவும் வழக்கமாக்கிக்கொண்ட வள்ளலார் பெருமான் திருவொற்றியூர் தியாகேசன் மீதும் வடிவுடையம்மை மீதும் தீராக் காதல் கொண்டு இருந்தார்.

திருவொற்றியூர் சன்னிதித் தெருவில் நிர்வாணக் கோலத்தில் இருக்கின்ற தோபர் சுவாமிகள் தெருவில் போகின்றவர்களைப் பார்த்து நாய் போகிறது நரி போகிறது நத்தை போகிறது நண்டு போகிறது கழுதை போகிறது தேள் போகிறது என்று அன்றாடம் சொல்வது அவர் வழக்கம். அந்த சன்னிதித் தெருவில் வள்ளலார் பெரு மானும் ஒருநாள் போனார்.தோபா சாமிகள் வள்ளலாரைக் கண் கொண்டு பார்த்ததும் ‘இதோ ஒரு உத்தமர் போகிறார்’ என்று சொல்லி கரங்களால் தன்னுடலை மறைத்து வள்ளலார் முன்னால் பயபக்தியுடன் கூனிக்குறுகி நின்றார். திகம்பரக் கோலத்தில் இருந்தது தோபா சுவாமிகளுக்கு ஒரு குற்ற உணர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். வள்ளலார் பெருமான் சில நொடிகள் தோபா சுவாமிகளிடம் வாயாடி விட்டு அந்த இடத்தைக் கடந்தார். வள்ளல் பெருமானின் தரிசனத்துக்குக் காத்திருந்ததைப் போல் அன்றிரவே தோபா சுவாமிகள் மாயமானார். இப்படி உலுத்தவர் கள் வாழ்ந்த பூவுலகில் உத்தமர் என்ற பெயரெடுத்த அருளாளர் வள்ளல் பெருமான். 

வீடு செல்ல மனமில்லாமல் திருக்கோயில் மண்டபத்தில் பசியோடு சிவனே என்று படுத்துக் கிடந்த வள்ளலாரை அர்ச்சகர் ஒருவர் துயிலெழுப்பி அன்னம் பாலித்தார். விசாரித்தால் அப்படி யொரு அர்ச்சகர் அன்று ஊரிலேயே இல்லை. அர்ச்சகர் உருவில் வந்து அமுதூட்டி அன்னம் பாலித்தவர் அவரை ஆட்கொண்ட சிவனே என்பது  தெளிவாயிற்று. இதைப்போல இன்னொரு நாளில் அண்ணியார் வடிவில் வந்து வடிவுடையம்மனே அன்னம் பாலித்து அமுதூட்டினாள். சிந்திக் கிடந்த சோற்றுப் பருக்கைகளை வள்ளல் பெருமானின் அண்ணியார் பார்த்ததே சாட்சி. அவரது சித்தம் சிவமயமாகி இருந்தது. சித்து அவரிடத்தில் சித்தி கொண்டிருந்தது. ஆனால், அவர் தன்னைச் சித்தர் என்று சொல்லிக்கொள்ளவில்லை. எள்ளளவும் எள்ளின் மூக்களவும் மூக்கின் நுனி அளவும் தன் முனைப்பு இல்லாத வள்ளல் பெருமானின் வாழ்க்கை இன்னொரு மனிதன் பின்பற்ற முடியாத அளவுக்கு முழுவதும் நெறிப்பட்டு இருந்தது வரலாற்று அதிசயம். 

சத்திய ஞான சபையை நிறுவியதும் சித்தி வளாகத்தில் ஜோதி தரிசனத்துக்கு வழி வகுத்ததும் ஜீவ காருண்ய நெறியை இடையறாது பின்பற்றியதும் சமரச வேத பாடசாலை தொடங்கி யதும் திருக்குறள் வகுப்பு நடத்தியதும் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து அதை வெற்றிகரமாக முன்னெடுத்ததும் அவரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மட்டுமல்ல; அவரை ஆகாயமும் அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயர்த்தியது. 

சைவ சமய குரவர்களுக்கும் ஆழ்வாராதிகளுக்கும் சற்றும் குறைவில்லாமல் அருட்பாவை அருளிச் செய்ததன் மூலம் தமிழன்னைக்குத் தங்க மகுடத்தைச் சூட்டி அழகு பார்த்தார் வள்ளல் பெருமான். கதை வாயிலாக ஜீவ காருண்யத்தின் மேன்மையைச் சொன்ன வள்ளலார் தாம் நினைத்த நீதிகளை இரக்கத்தோடு சொல்லும் பாங்கு தமிழுக்குப் புதிது. மனச்சாட்சியை உலுக்குகின்ற திருஅருட்பாவை ஒருமுறை ஒருமையுடன் படித்தால் ஒருக்காலும் தவறிழைக்க மாட்டார்கள். 

‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சிநேகரைக் கலகம் செய்தேனோ! குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டம் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ! உயிர்க்கொலை செய்தோர்க்கு உபகாரம் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! ஆசை காட்டி மோசம் செய்தேனோ! வரவு போக்கொழிய வழியடைத்தேனோ! வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! கோள் சொல்லி குடும்பம் குலைத்தேனோ! நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ! கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! கருப்ப மழித்து களித்திருந்தேனோ! குருவை வணங்கக் கூசி நின்றேனோ! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ! பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ! பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ! ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ! கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! அன்பு டையவர்க்கு துன்பம் செய்தேனோ! குடிக் கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! வெயி லுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தேனோ! பகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ! பொது மண்டபத்தை போயிடித்தேனோ! ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! சிவனடியாரைச் சீறி வைதேனோ! தவஞ் செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ! சுத்த ஞானி களைத் தூஷணம் செய்தேனோ! தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ! என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!’ ’’ என்று சொல்லி முடித்ததுதான் தாமதம். அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. பலர் கண்களில் கண்ணீர். ஏன் என் கண்ணிலும்தான்.

(இன்னும் பேசுவேன்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE