என்றென்றும் ஏழுமலையான் - 17: வாழையடி வாழையாய் வஸ்திரம் தரும் நெசவாளர்கள்

By என். மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். இதைக் காண்பதற்கு பக்தர்கள் முன்கூட்டியே அபிஷேக சேவை டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்போது இந்த அபிஷேகத்தை முன் பதிவு செய்பவர்கள் அடுத்ததாக பத்து வருடங்கள் கழித்துத்தான் இந்தச் சேவையில் பங்கேற்க முடியும்.

இவ்வளவு பிரசித்திபெற்ற ஏழுமலையானின் அபிஷேகத்தில் அவர் அணியும் மேல்சாத்து வஸ்திரமும் அவ்வளவு முக்கியத்
துவம் வாய்ந்ததாகும். இதனை சேலம் அம்மாப்பேட்டை, கொண்டலம்பட்டி, பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த நெசவாளர்
கள் உள்பட பலரும் நெய்து கொடுத்து வருகிறார்கள்.

பிரதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகம் முடிந்த பிறகு, சுவாமிக்கு வெள்ளை பட்டு வேட்டி அணிவிக்கப்படும். இதை மேல் சாத்து வஸ்திரம் என்றழைக்கின்றனர். இதைத்தான் அம்மாப்பேட்டை, கொண்டலம்பட்டி, பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த நெசவாளர்கள் பரம்பரை பரம்பரையாக நெய்து கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வர்த்தகத் துறை அதிகாரிகள் என்னிடம் பேசுகையில், “பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் கத்வால் மன்னர், ஆண்டுக்கு இரண்டு முறை பட்டு வஸ்திரங்களை எடுத்து வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நெசவாளர் குடும்பத்திடம் இதற்கான பொறுப்பை ஒப்படைத்திருந்தார் மன்னர். அந்த நெசவாளரும் கடுமையான விரதமிருந்து உயர் ரக வெண்பட்டு நூலில் சுவாமிக்கான மேல் சாத்து வஸ்திரத்தை நெய்து கொடுத்து வந்துள்ளார்.

வழி வழியாய் வந்த அந்த வழக்கமானது 1973-ம் ஆண்டு தேவஸ்தானத்துடன் ஒப்பந்தமாக எழுதப்பட்டது. அதன்படி ஆர்டரின் பேரில் ஒரு மேல்சாத்து வேட்டியும், அங்கவஸ்திரமும் வாரம் தோறும் அந்த நெசவாளர்களால் நெய்து தரப்படுகிறது.
ஏழுமலையானுக்கு சாத்தப்படும் அங்க வஸ்திரம் என்பது 5.5 மீட்டர் நீளமும், 36 அங்குலம் அகலமும் கொண்டதாகும். ஒவ்வொரு அபிஷேகத்திற்குப் பிறகும் சுவாமிக்கு 2 செட் வஸ்திரங்கள் அணிவிக்கப்படும். இதில், உள்சாத்து வஸ்திரம் என்பது முழுமையாக பருத்தியில் நெய்யப்பட்டு, பார்டருடன் இருக்கும். மேல் சாத்து வஸ்திரம் என்பது 3 கிலோ பட்டு நூலில் 2 கிலோ எடையில் நெய்யப்பட்டிருக்கும். இதன் மதிப்பு சுமார் 60,000 ரூபாய் வரும்” என்றார்.

இந்த மேல்சாத்து வஸ்திரத்தை ஏழுமலையானுக்குப் பல ஆண்டுகளாக நெய்து கொடுக்கும் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த கே. சண்முகம் என்னிடம் பேசுகையில், “நான் ஏழுமலையானுக்கு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக மேல் சாத்து வஸ்திரத்தை நெய்து கொடுக்கிறேன். மிகவும் தரமான பட்டு நூலை மட்டுமே இதற்காக உபயோகப்படுத்துவோம். காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்கள் சிலரும் சுவாமிக்கு தற்போது மேல் சாத்து, உள் சாத்து வஸ்திரங்களை நெய்து கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். மேலும், சென்னையில் உள்ள நல்லி சில்க்ஸ், போத்தீஸ், மற்றும் குமரன் சில்க்ஸ் ஆகிய நிறுவனங்களும் சுவாமிக்கு செலுத்தப்படும் மேல் சாத்து வஸ்திரங்களை விற்பனை செய்கின்றன.

ஏழுமலையானுக்கு மட்டுமல்லாது தனது கட்டுப்பாட்டில் உள்ள பிற கோயில்களுக்கும் தற்போது மூலவர்களுக்கு சாத்த வஸ்திரங்களை வாங்குகிறது திருப்பதி தேவஸ்தானம். தமிழகக் கூட்டுறவு சங்கம் சார்பில் கோ-ஆப் டெக்ஸ் மூலமாகவும் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் நெய்து கொடுக்கப்படுகிறது.

‘திருப்பதி துப்பட்டா’ என்ற பெயரில் தமிழகக் கூட்டுறவு நெசவாளர்கள் சங்கத்தினர் 2.30 மீட்டர் நீளமுள்ள பட்டு சால்வையை நெய்து கொடுக்கின்றனர். இதில் சங்கு, சக்கரம் மற்றும் நாமம் பொறிக்கப்பட்டிருக்கும். ‘எஸ்.ஏ முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்’ மற்றும் ‘எஸ்-869 ஜே.ஓ. கொண்டலம்பட்டி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்’ உள்ளிட்டவையும் தற்போது இந்தச் சால்வை தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர். ஆண்டாண்டு காலமாக திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கும் உள் சாத்து, மேல் சாத்து வஸ்திரங்களை தமிழகத்து நெசவாளர்கள் மட்டுமே நெய்து தருவதை நினைத்தால் தனி பெருமையாக இருக்கிறது” என்று சொன்னார்.

ஏழுமலையான் சன்னிதியில் இதைப் போல முகம் காட்டாத இன்னும் எத்தனையோ முகங்கள் அந்த வேங்கடவனுக்கு இரவு பகல் பாராது சேவை செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படி சேவை செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதி திருமலையில் தவமாய் தவம் கிடக்கிறார்கள். அப்படித் தவம் கிடக்கும் அத்தனை பேருக்கும் குன்றாத வாழ்வும் குறையாத செல்வமும் தந்து ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் அந்த ஏழுமலையான்.

திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் கல்வெட்டுகள்!

திருப்பதியில் கோயிலைச் சுற்றிலும், கோயிலுக்கு உள்ளும் ஏராளமான தமிழ் கல்வெட்டுகளைக் காணலாம். அவற்றில் ஏழுமலையானுக்குப் பல்வேறு சக்கரவர்த்திகள், மன்னர்கள், குறுநில மன்னர்கள், மிராசுகள் போன்றோர்கள் வழங்கிய காணிக்கைகள், நிலங்கள் குறித்த தகவல்கள் உள்ளன. இங்கு மொத்தம் 1,180 கல்வெட்டுகள் உள்ளன. இதில், 236 கல்வெட்டுகள் சேர, சோழ, பாண்டியர் காலத்தவை. 229 கல்வெட்டுகள் கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 169 கல்வெட்டுகள் சாளுவ மன்னர்களுக்குச் சார்ந்தவை. 251 கல்வெட்டுகள் அச்சுதராயர் காலத்தவை. 147 கல்வெட்டுகள் சதாசிவராயர் காலத்தவை. 135 கல்வெட்டுகள் கொண்டைவீடு அரசர் காலத்தவை. கி.பி 830-ல் பல்லவ நந்திவர்மன் காலத்தில் தொடங்கி, 1909 வரையிலான கல்வெட்டுகள் திருப்பதி கோயிலில்உள்ளன. இதில் கன்னட, தெலுங்கு மொழிகளில் 50 கல்வெட்டுகள் தான் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 1130 கல்வெட்டுகளும் தமிழ் கல்வெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கடந்து வரும் வாசனை திரவியங்கள்!

ஏழுமலையானின் அபிஷேகத்திற்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து குங்குமப் பூவும், நேபாளத்திலிருந்து கஸ்தூரி மஞ்சளும் சீனாவிலிருந்து புனுகும் பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்களும் ஐரோப்பாவிலிருந்து விலையுயர்ந்த ரோஜாப்பூக்களும் விமானத்தில் வரவழைக்கப்படுகின்றன. அத்துடன் வெள்ளிக்குடத்தில் சந்தனம், பால் கலந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் 15 செட் உள்சாத்து வஸ்திரங்கள் உபயோகப்படுத்தப்படும்.

மாமன்னர்களான கிருஷ்ண தேவராயர், ராஜேந்திர சோழன், அச்சுதராயர் ஆகியோர் திருப்பதி ஏழுமலையானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து விலை மதிப்பில்லா வைர, வைடூரியங்களைக் காணிக்கையாக வழங்கி உள்ளனர். கிருஷ்ண தேவராயர் மட்டும் தங்கக் காசுகளால் சுவாமிக்கு‘கனகாபிஷேகம்’ செய்திருக்கிறார்.

966-ம் ஆண்டு, பல்லவ குறுநில மன்னனான சக்தி விடங்கனின் பட்டத்து அரசியான காடவன் பெருந்தேவி அம்மையார், திருப்பதி ஏழுமலையானுக்கு வெள்ளியால் ஆன உற்சவ மூர்த்தியைக் காணிக்கையாக வழங்கி உள்ளார். உக்ர னிவாசர் எனும் அந்த வெள்ளி மூலவர் சிலையை பெருந்தேவி அம்மையார் 4 வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் சென்று சிறு உற்சவமும் நடத்தி உள்ளார். இந்த உக்ர னிவாசரே முன்பு உற்சவ மூர்த்தியாக வழிபடப்பட்டு வந்தது. ஆனால், ஒவ்வொரு முறை உற்சவத்தின் போதும், பெரும் மழையோ, அல்லது இயற்கைச் சீற்றமோ நிகழ்ந்ததால் உக்ர னிவாசர் சுவாமியின் கருவறையிலேயே மூலவருக்கு அருகில் நிரந்தரமாக வைக்கப்பட்டார். அதன்பிறகு தற்போதுள்ள மலையப்ப சுவாமி உற்சவராக உருவெடுத்தார்.

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் கோயில் அருகே உள்ள புஷ்கரணியில் (குளத்தில்) கலப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தக் குளம் புனித குளமாகக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை அபிஷேகத்திற்கு முன்பு வடகலை, தென்கலை சாத்துமுறை என 2 சாத்துமுறைகள் நடப்பது ஐதீகம். அதன் பிறகே ஏழுமலையானுக்கு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும். அபிஷேகத்திற்கு முந்தைய நாளான வியாழக்கிழமையே சுவாமியின் அபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ‘பரிமள அறை’ யில் தயாராய் இருக்கும். குங்குமப் பூ, புனுகு, உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அனைத்தும் உடனுக்குடன் அரைக்கப்பட்டு சந்தனத்தில் கலந்து அபிஷேகத்திற்கு வைக்கப்படும். இப்படி ஒரு முறை அபிஷேகம் செய்வதற்கான செலவு மட்டுமே சுமார் பத்து லட்ச ரூபாயைத் தாண்டுமாம்!

(முகங்கள் - நிறைவு)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE