பதறும் பதினாறு 16: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

அண்மை நாட்களாக கௌதமின் நடவடிக்கைகளில் லேசான மாற்றத்தை அவனுடைய பெற்றோரால் உணர முடிந்தது. எப்போதும் கலகலப்பாகப் பேசுபவன் தனிமையை விரும்பினான். அடிக்கடி தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான். காரணம் கேட்டபோது பட்டும் படாமலும் பதில் சொன்னான். சில நாட்களில் சரியாகிவிடும் என அவனுடைய பெற்றோர் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், ஒரு மாதம் கழிந்த பிறகும் கௌதம் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. பெற்றோரிடம் இருந்து விலகியே இருந்தான். குளித்துவிட்டு வந்தால் உடை மாற்றிக்கொண்டு வெளியே வர அரை மணி நேரத்துக்கும் மேலாகிறது. வீட்டில் இருக்கும்போதுகூட பேன்ட், சட்டையை அணிகிறான். கை இல்லாத டிஷர்ட்டும் டிராயரும் போடச் சொன்னால் பிடிவாதமாக மறுக்கிறான். வளர்ந்த பிள்ளையிடம் இயல்பாக இருக்கும் கூச்சம் என அதைப் புறந்தள்ள முடியவில்லை. எட்டாம் வகுப்புதானே படிக்கிறான், அதற்குள்ளாகவா இப்படி விலகிச் செல்வான் என நினைத்தார்கள். நண்பர்களிடம் பேசுவதைத் தவிர்த்தான். சரிவரப் படிப்பதில்லை எனப் பள்ளியில் இருந்து புகார் வந்தது. எதைக் கேட்டாலும் மௌனத்தைத்தான் பதிலாக வைத்திருந்தான் கௌதம். கல்லூரியில் படிக்கும் அவனுடைய பெரியப்பா மகனை அழைத்து கௌதமிடம் பேசச் சொன்னார்கள். தன் உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையில் கௌதம் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பது அப்போதுதான் அவனுடைய பெற்றோருக்குப் புரிந்தது.

மன உளைச்சல் தந்த வளர்ச்சி

குழந்தை முதலே ஆரோக்கியமான உடல்வாகுடன் இருந்தான் கௌதம். வளரிளம் பருவத்தில் அடியெடுத்து வைத்ததுமே மற்ற குழந்தைகளைவிடச் சற்றே பருமனாக இருந்தான். பதின் பருவத்தின்போது உடலுக்குள் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் கௌதமுக்கும் எந்தக் குறையும் இல்லாமல் நடந்தேறின. அங்குதான் சிக்கலும் தொடங்கியது. அவனுக்கு மார்புப் பகுதி விரிவடைந்ததோடு மார்பகங்களும் வளரத் தொடங்கின. அதுதான் அவனை அவமானத்தில் குன்ற வைத்திருக்கிறது. பெண்களுக்குத்தானே மார்பகம் வளர்ச்சி பெறும், நான் ஆண் இல்லையா என்றெல்லாம் யோசித்து உள்ளுக்குள் புழுங்கியிருக்கிறான். பெற்றோரிடம் இதைச் சொல்லவும் அவனுக்குத் தயக்கமாக இருந்திருக்கிறது. மார்பக வளர்ச்சி வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத்தான் வீட்டிலும் கைவைத்த தளர்வான சட்டைகளையே அணிந்திருக்கிறான். பள்ளியில் நண்பர்கள் கேலி பேசுவார்களோ என்ற பயத்தில் அவர்களிடம் பேசுவதைத் தவிர்த்திருக்கிறான்.

எல்லோருக்கும் இனியவன்

கௌதமைவிட ஒரு வயது மூத்தவன் அகிலேஷ். துறுதுறுப்பும் பொறுப்பும் நிறைந்தவன். அவன் இருக்கிற இடம் சிரிப்பும் கொண்டாட்டமுமாகக் களைகட்டும். பள்ளியிலும் வீட்டுக்கு அருகிலும் ஏராளமான நண்பர்களைச் சேர்த்துவைத்திருக்கிறான். எந்த விஷயமாக இருந்தாலும் அகிலேஷிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்கிற அளவுக்குச் செல்வாக்கும் ஆளுமையும் நிரம்பியவன். விளையாட்டிலும் படுசுட்டி. கிரிக்கெட் மைதானத்தில் இறங்கினால் சதம் அடிக்காமல் வெளியேற மாட்டான். படிப்பில் நடுத்தரம் என்றாலும் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை அவன்.

அகிலேஷுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று தன் அக்காவிடம் சண்டையிடுவது. வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாம் அவளை வம்புக்கு இழுத்தபடி இருப்பான். அம்மாவுக்கு உதவுவதாகச் சொல்லி சமையலறைக்குச் சென்றால் வெண்கலக் கடைக்குள் யானை புகுந்ததைப்போல அனைத்தையும் தலைகீழாக்கிவிடுவான். ஆனால், அடுத்த நிமிடமே அனைத்தையும் கச்சிதமாகச் சரிசெய்துவிடுவான். பொதுவாக பெரும்பாலான வீடுகளில் பதின் பருவத்தில் இருக்கும் மகன்களுக்கும் அப்பாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். அகிலேஷின் விஷயத்தில் அது நடக்கவில்லை. அம்மாவைவிட அப்பாவிடம் நெருக்கமாக இருப்பான். நடப்பு அரசியல் குறித்து அவரிடம் விவாதிப்பான். அப்பாவும் மகனும் ஹாலிவுட் படங்களைப் பார்த்துவிட்டுப் பேசுவதைப் பார்த்து அம்மாவும் அக்காவும் வியப்பார்கள். அந்த அளவுக்கு இருவரும் நண்பர்களைப் போல பழகுவார்கள்.

திடீர் மாற்றம்

ஆனால், இவற்றையெல்லாம் அகிலேஷ்தான் செய்தான் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு இப்போது மாறிவிட்டான். ஒன்றுக்குப் பத்து முறை கேட்டால்தான் பதில் சொல்கிறான். அதுவும் அரை மனதாக ஏனோதானோவென்று பேசுகிறான். முன்பு போல எதையும் விரும்பிச் சாப்பிடுவதில்லை, பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவதில்லை. நண்பர்களுடன் விளையாடச் செல்வதில்லை. அக்காவே வலியவந்து சண்டை போட்டால்கூட அமைதியாக இருக்கிறான். அகிலேஷின் இந்தத் திடீர் மாற்றம் அவனைச் சுற்றியிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தது. அவனைப் பாதிக்கிற வகையில் எதுவுமே நடக்காதபோது ஏன் இப்படிப் பேசாமடந்தையாகிவிட்டான் என்பது புதிராகவே இருந்தது.

நள்ளிரவு நிகழ்ச்சி

காலையில் நாளிதழைப் படிக்கும்போது சில செய்திகளை மட்டும் அவன் கவனத்துடன் படிப்பதை அகிலேஷின் அம்மா கவனித்தார். அவன் படித்துமுடித்த பிறகு என்ன செய்தியாக இருக்கும் என்று பக்கங்களைப் புரட்டியவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு ஒருநாள் அவன் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தபோது எதேச்சையாக அங்கே செல்வதைப் போல அவன் அருகில் சென்று அமர்ந்தார். அவன் எந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டிருக்கிறான் என்பதை நோட்டம் விட்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அவன் விளம்பரப் பகுதி இருந்த பக்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அகிலேஷின் அம்மா இதைத் தன் கணவரிடம் சொன்னார். அவருக்கும் ஏதும் புரியவில்லை. அன்று இரவு தண்ணீர் குடிப்பதற்காக எழுந்துவந்தவர், ஹாலில் வெளிச்சம் தெரியவும் நின்றார். அகிலேஷ்தான் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். டிவியின் சத்தத்தைக் குறைத்துவைத்திருந்தான். அவன் பார்த்துக்கொண்டிருந்த நிகழ்ச்சியைப் பார்த்தவருக்கு முதலில் எதுவும் புரியவில்லை. ஏன் இதை அவன் பார்க்கிறான் என்ற குழப்பத்துடன் தன் அறைக்குச் சென்றுவிட்டார் அகிலேஷின் அப்பா.

ஆண்மை குறைபாடு குறித்து தொலைக்காட்சியில் நடக்கும் கேள்வி – பதில் நிகழ்ச்சியைத்தான் அகிலேஷ் பார்த்துக்கொண்டிருந்தான். அதைத் தன் மனைவியிடமும் சொன்னார். அவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 14 வயதில் ஆண்மை குறித்துக் கவலைப்படுகிற அளவுக்கு அவனுக்கு என்ன நடந்திருக்கும் என யோசித்தனர். காலையில் மகனிடமே பேசிவிட இருவரும் முடிவெடுத்தனர்.

தீராத சந்தேகம்

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பது அகிலேஷின் பெற்றோருக்கு வசதியாகிவிட்டது. காலையில் தாமதமாக எழுந்தவன், இயல்புக்குத் திரும்பும்வரை பெற்றோர் காத்திருந்தனர். அகிலேஷின் அப்பாதான் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார். தன் சிறு வயது சாகசங்களைச் சொல்லிச் சிரித்தார். அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கிற தொனியில் அகிலேஷ் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு பெண்கள் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு குறித்துச் சொன்னார். அகிலேஷின் கண்களில் சிறு ஒளி தெரிய, அவனுடைய அப்பா உற்சாகத்துடன் தொடர்ந்தார். பிறகு தன் இளமைப் பருவ சாகசங்களை விவரித்தார். “உனக்கு இப்படி எதுவும் நடக்கலையாடா..?” என சிரித்தபடியே அகிலேஷிடம் கேட்டார். அதுவரை இருந்த உற்சாகம் வடிந்தவனாக முகம் இருள தந்தையைப் பார்த்தான். சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கம் அவனைத் தடுத்தது. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு, பார்த்துக்கலாம் என அப்பா நம்பிக்கை தர, அகிலேஷ் மனம் திறந்தான்.

சில வாரங்களுக்கு முன் தன் நண்பர்களுடன் விளையாடச் சென்றிருந்தான் அகிலேஷ். அனைவரும் சிறுநீர் கழித்தபடியே ஏதேதோ பேசிச் சிரித்திருக்கிறார்கள். அப்போது அகிலேஷின் பக்கத்தில் நின்றிந்த நண்பன் ஒருவன், “என்னடா உனக்கு இவ்ளோ சின்னதா இருக்கு. நீ இன்னும் வளரவே இல்லையாடா?” என்று சொல்ல... சிறுநீர் கழிப்பதைச் சட்டென நிறுத்திவிட்டான் அகிலேஷ். சுற்றி நின்றிருந்த நண்பர்கள் கேலியாகச் சிரிக்க, அவமானத்தில் முகம் கன்றினான்.

பெற்றோருக்குத் தெரியுமா?

வீட்டுக்குத் திரும்பியவன், அந்தச் சம்பவத்திலிருந்து மீளவே இல்லை. திரும்பத் திரும்ப அதை நினைத்தபடியே இருந்தான். உண்மையிலேயே தான் இன்னும் வளரவில்லையோ, தனக்கு ஆண்மை குறைவு இருக்குமோ என்றெல்லாம் யோசித்தான். அதுதான் அவனது திடீர் ஒதுக்கத்துக்குக் காரணம். அதற்கான விடையை யாரிடம் கேட்பது எனத் தெரியாமல்தான் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களைப் படித்திருக்கிறான். நள்ளிரவு தாண்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறான்.இவையெல்லாமே அகிலேஷின் சந்தேகத்தை நீரூற்றி வளர்த்தனவே தவிர அதைத் தீர்த்துவைக்கவில்லை.

மகன் சொன்னதைக் கேட்ட தந்தைக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. அரசியல், சினிமா என எத்தனையோ விஷயங்களைத் தன்னிடம் பேசிய மகன், இதைப் பற்றி முன்பே கேட்டிருக்கலாமே என ஆதங்கப்பட்டார்.

கௌதம், அகிலேஷ் மட்டுமல்ல… இன்றைக்குப் பெரும்பாலான பதின் பருவ ஆண் குழந்தைகளிடம் இருக்கும் சிக்கல் இதுதான். தங்கள் உடல் வளர்ச்சி குறித்து அவர்களாகவே ஒரு கற்பனையை வளர்த்துக்கொள்கிறார்கள். அதைத் தொடந்து பயந்து பயந்து இயல்பைத் தொலைக்கிறார்கள். பதின் பருவத்தில் அவர்களின் உடலுக்குள் ஏற்படும் இயல்பான வளர்ச்சி குறித்த புரிதலை அவர்களுக்கு எப்படி ஏற்படுத்துவது? முதலில் பெற்றோருக்கு அது குறித்து முழுமையாகத் தெரிந்திருக்கிறதா?

(நிஜம் அறிவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE