விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 16: முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன்

By காமதேனு

என்.சுவாமிநாதன்

வெண் பொங்கலும்... மெதுவடையும்!

இளம் வயதிலேயே திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்த பெருமைக்குரியவர் சுரேஷ்ராஜன். 32 வயதில் சுற்றுலாத்துறை அமைச்சரான இவர், இருமுறை திமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர். தற்போதைய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், நாகர்கோவில் எம்எல் ஏ-வுமாக இருக்கும் சுரேஷ்ராஜன் இந்த வார விஜபி விருந்தினர்.

 “நாகர்கோவிலில் அசைவ உணவு சாப்பிடணும்ன்னா என்னோட முதல் சாய்ஸ் பிரபு ஹோட்டல். வெளியூர், வெளிமாவட்டங்களுக்குக் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகிட்டு லேட்டா வந்தா செட்டிக்குளம் தாஜ் ஹோட்டலுக்கு போவேன். அங்க புரோட்டா ருசியா இருக்கும். தொகுதிக்குள் பயணிக்கையில் குடிசை கடைகள் பலவற்றிலும் ருசித்திருக்கிறேன்.

சைவச்சாப்பாடுன்னா என்னோட ஒரே சாய்ஸ் ஆரியபவன் தான். இந்த இடத்துல இன்னொண்ணும் சொல்லியாகணும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை காலை டிபன் மட்டும்தான் சரியான நேரத்துக்குச் சொல்ல முடியும். மற்ற நேரத்து உணவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு சொல்ல முடியாது. உணவகமே இல்லாத குக்கிராமத்திலும் பணி செஞ்சுட்டு இருப்போம். சிலநேரம் ஏதாவது தொண்டர்கள் வீட்டில் சாப்பிடுவோம். சில நேரம் சாப்பிடாமல் நேரம் தாண்டிரும். அப்பல்லாம் சாப்பிடவும் முடியாது. அதுக்காகவே காலை சாப்பாட்டை ஹெல்தியாக எடுத்துக்கணுங்கிறது என்னோட கொள்கை. அதுக்கு என்னோட சாய்ஸ் நாகர்கோவிலில் ஆரியபவன் தான்.

பணியாளர்களுக்கு சீருடை, பரிமாறுபவர்களுக்குக் கையுறை, சுகாதாரமான சமையலறைன்னு தரத்தில் அசத்தினாலும், பட்ஜெட்டுக்கும் வேட்டு வைக்காத பக்காவான உணவகம் இது. முன்னாடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு மட்டுமே இருந்தது. இப்போது கூடவே நீதிமன்றம் அருகிலும், வடசேரி பகுதியிலுமாக மூன்று உணவகங்களாக ஆரியபவன் வந்துருச்சு. இங்க என்னோட ஃபேவரைட் உணவே வெண் பொங்கலும் மெதுவடையும்தான். கூடவே ரெண்டு இட்லியையும் சாப்பிட்டு ஒரு க்ரீன் டீயும் குடிக்குறது வழக்கம்”என்கிறார் சுரேஷ் ராஜன்.

 சுரேஷ்ராஜன் விரும்பிச் சாப்பிடும் ( நீதிமன்றம் எதிரே உள்ள) நாகர்கோவில் ஆரியபவனுக்கு அவருடனே சென்றோம். ஹோட்டல் உரிமையாளர் ரமேஷ் நம்மிடம், “நாகர்கோவில்ல ஆரியபவன் ஆரம்பிச்சு 51 வருசம் ஆச்சு. என்னோட அப்பா திருவேங்கடம் ஆரம்பிச்சு, இப்போ இரண்டாவது தலைமுறையா நான் நடத்திட்டு இருக்கேன். எங்க உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டியே கிடையாது. சாப்பாட்டில் அஜினமோட்டோவும் சேர்க்க மாட்டோம். டால்டாவும், ரசாயன கலவையும் பயன்படுத்துறதே இல்லை. வாடிக்கையாளர்கள் வயித்துக்குக் கெடுதல் இல்லாம நடந்துக்கிட்டாலே நம்ம வளர்ச்சியை அவுங்க பாத்துப்பாங்க.

எனக்கு சத்குருவின் மீது பற்று அதிகம். ‘மனிதகுல நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்’ன்னு அவரது வழியில், வாடிக்கையாளர்கள் நலனைக்காக்கும் வகையில் நாட்டுச்சர்க்கரை, நாட்டு மாட்டுப்பால்ன்னு ஆரோக்கியமான பொருள்களையே பயன்படுத்துகிறோம். நாகர்கோவிலிலேயே இயற்கை சம்பா அரிசி, பொன்னி அரிசின்னு ரெண்டு வகையான அரிசியில் சாதம் இங்கு மட்டும்தான். இதுபோக சாமை, திணைன்னு சிறுதானிய உணவுகளும் செய்றோம். காலையில் வாக்கிங் போயிட்டு டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு சுண்டல், முளைகட்டிய பயிறு, ஊறவைத்த கடலை இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் இலவசமாக கொடுக்குறோம்.

நான் பாரம்பரியத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். அவியலும், பாயசமும் இன்னிக்கும் உருளியில்தான் செய்வோம். புட்டு, பயிறு, பப்படம், குழிப்பணியாரம்ன்னு பாரம்பரியமான உணவுகள் ஒரு பட்டியலே போடும் அளவுக்குச் செய்யுறோம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாட்டு ரெசிபிக்களைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதுறாங்க. அதுல வர்ற எல்லா ரெசிபிக்களையும் செய்து, வாடிக்கையாளர்களை அசத்துவதே அடுத்த இலக்கு” என்றவர், பொங்கல் ரெசிபிக்குள் வந்தார்.

``ஒரு கிலோ பச்சரிசிக்கு அரை கிலோ பாசிப்பருப்பு, கால் கிலோ நெய், கால் கிலோ முந்திரி, 20 கிராம் நல்லமிளகு, 20 கிராம் சீரகம், ஒரு லிட்டர் பால், இதனோடு இஞ்சி, கறிவேப்பிலை, காயப்பொடியையும் தேவையான அளவு எடுத்துக்கணும். குக்கரில் தேவையான அளவு தண்ணீரில் ஒரு லிட்டர் பால் சேர்த்து, பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை வேகவைக்கணும். அது நன்றாக மசிய வெந்து பொங்கல் ஆனதும் கடாயில் நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி, காயப்பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டால் ருசியான பொங்கல் தயார் ஆகிவிடும்.’’ மெதுவடையைப் பொறுத்தவரை வீடுகளில் கையாளப்படும் வழக்கமான பக்குவம்தான் என்றாலும் வடைக்கான மாவை அரைத்து எடுப்பதிலும் அதைச் சரியான நேரத்துக்கு வடையாக சுட்டு எடுப்பதிலும் இவர்கள் தனிப் பக்குவத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

 நாகர்கோவிலில் மூன்று கிளைகளாக விரிந்துள்ள இந்த உணவகம், கோவை ஈஷா மையத்தில் ‘மூன்றாம்பிறை’ என்னும் ஹோட்டலையும் நடத்தி வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரில் ‘நாகர்கோவில் ஆரியபவன்’ என்ற புதிய கிளையைத் திறந்துள்ளது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் நாகர்கோவில் பக்கம் வரும்போது ஆரியபவனிலும் கை நனைத்துப் பார்க்கலாம்தானே!

படங்கள்: என்.ராஜேஷ்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE