பதறும் பதினாறு 15: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

பதின் பருவத்தில் பெரும்பாலான குழந்தைகள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பார்கள். திரிகிள்ளிய வெடியைப் போலவே இருக்கும் அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சிறு பொறி. அது கிடைத்தால் போதும் வெடித்துத் தீர்ப்பார்கள். பெரியவர்கள் சொல்வதைக் கேட்கும் இளகுத் தன்மையும் பொறுமையும் அவர்களிடம் இருக்காது. பெரும்பாலான நேரம் இறுக்கத்துடன் இருப்பார்கள். எதையும் அவ்வளவு சீக்கிரம் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இப்படியான சூழலில் வீட்டினர் அல்லது சமூகத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முடியாத போதும் சிக்கலான சூழலில் தெளிவான முடிவெடுக்க முடியாத போதும் சில குழந்தைகள் தற்கொலைக்கும் துணிவார்கள்.

சமாதானம் அடையாத மனது

சிறு வயது முதலே தன்னம்பிக்கைக் குறைவாக உள்ள குழந்தைகள் மிக எளிதாக உணர்வுவயப்பட்டு முடிவெடுப்பார்கள். எனக்கு எந்த நல்லதும் நடக்காது, நான் எது செய்தாலும் அது தவறாகத்தான் முடியும் என்று தங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள். வெளியே சிரித்துப் பேசினாலும் உள்ளுக்குள் உடைந்திருப்பார்கள். ப்ரித்வியும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். என்னதான் பெற்றோர் அவனை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினாலும் அவனுக்குள் இயல்பாகவே இருந்த தாழ்வு மனப்பான்மை அவனை வேறுவிதமாக வழிநடத்தியிருக்கக்கூடும். தன்னம்பிக்கை குறைவாக உள்ள குழந்தைகளை மிக எளிதாகச் சமாதானப்படுத்திவிட முடியாது. பெற்றோர் சொன்ன சமாதானம் அவனை எந்த வகையிலும் முன்னோக்கி நகர்த்தியிருக்காது. ஏற்கெனவே மனச் சோர்வில் இருந்த அவனுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்வி வேதனையை அதிகரித்திருக்கும். என் பெற்றோரின் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்திசெய்ய முடியவில்லையே என்ற குற்றவுணர்வில் மனம் உடைந்திருப்பான். நான் தோற்றுவிட்டேன், என்னை நிரூபிக்கத் தவறிவிட்டேன் அதனால் எனக்கு வாழத் தகுதியில்லை என அவன் நினைத்திருக்கக்கூடும். மனம் விட்டுப் பேசுகிற பெற்றோர் கிடைத்திருக்கிறார்களே, அவர்களிடம் அனைத்தையும் சொல்லியிருக்கலாமே என நாம் யோசிக்கலாம். ஆனால், ப்ரித்வியின் வயது அதைச் செய்யவிட்டிருக்காது. அதுதான் தன்னையே மாய்த்துக்கொள்ள அவனைத் தூண்டியிருக்கிறது.

சிறு வயது முதலே குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனித்தாலே அவர்களது மன ஓட்டத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். வழக்கமான பழக்க வழக்கம் அல்லது செயல்பாடுகளிலிருந்து விலகியிருப்பது, யாருக்கும் கீழ்ப்படியாமல் இருப்பது, பொருட்களுக்கு நெருப்பு வைப்பது, விலங்குகளை அடித்துத் துன்புறுத்துவது போன்றவற்றைத் தொடர்ச்சியாகச் செய்யும் குழந்தைகளுக்கு ஏதோ சிக்கல் என்பதைப் புரிந்துகொள்ளலாம். குழந்தைப் பருவத்தில் இதுபோன்றவற்றை அறியாமல் செய்வதில் தவறில்லை. ஆனால், வளர்ந்த பிறகும் இவையெல்லாம் தொடர்ந்தால் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மிரட்டல் ஆயுதம்

சில நேரம் பெற்றோரை மிரட்டுவதற்கும் தற்கொலையைச் சில குழந்தைகள் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும். மதிப்பெண்கள் குறைவாக வாங்கினாலோ அல்லது தேர்வில் தோல்வியடைந்தாலோ குழந்தைகளைத் திட்டுவது பல பெற்றோரது இயல்பு. பெற்றோரின் திட்டுக்கும் அடிக்கும் பயந்து சில குழந்தைகள் தற்கொலை நாடகமாடக்கூடும். அதேபோல காதலில் தோல்வியடைகிற குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்ளத் துணிவார்கள். தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் துன்புறுத்துகிற ஆண்கள் முதலில் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள். அதற்குப் பிறகுதான் வன்முறையைக் கையிலெடுப்பார்கள்.

“காதல் தோல்வியாலோ புறக்கணிப்பாலோ தற்கொலைக்கு முயலும் பெரும்பாலான ஆண் குழந்தைகள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டவர்களாகவே இருப்பார்கள். தற்கொலைக்கு முயன்று என்னிடம் அழைத்துவரப்பட்ட ஆண் குழந்தைகள் பலரது கைகளிலும் வெட்டுக்காயம் இருந்தது. சில நேரம் தங்களது ஈகோ காயப்பட்டால்கூட தற்கொலைக்குத் துணிந்துவிடுகிறவர்களும் உண்டு” என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த அரசு மனநல மருத்துவர் அபிராமி.

அதிகரிக்கும் எண்ணிக்கை

மிரட்டுவதற்காகத் தற்கொலை முயற்சியில் இறங்கும் குழந்தைகள் பெரும்பாலும் தாங்கள் காப்பாற்றப்பட்டுவிடுவதற்கான சூழலை உருவாக்கிவைத்துவிட்டே  செயல்படுவார்கள். கடிதம் எழுதி, அதை மற்றவர் பார்வையில் படும்படி வைப்பது, தற்கொலைக்கு முயன்றுவிட்டு அதை உடனடியாக வீட்டில் இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துவது போன்றவை அவற்றில் சில. பெரும்பாலும் பெண்களே இப்படிச் செய்கிறார்கள். தற்கொலைக்கு முயலும் ஆண் குழந்தைகள் தாங்கள் இறந்துவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியும் விடுகிறார்கள். அதனால்தான் பெண் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலைக்கு முயன்றாலும் அவர்கள் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் ஆண் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றாலும் அவர்கள் இறந்துவிடுவதால் அவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

பாலியல் சீண்டலும் காரணம்

குடும்பச் சூழலும் சில நேரம் பதின் பருவக் குழந்தைகளைத் தற்கொலையை நோக்கித் தள்ளக்கூடும். சிறு வயது முதலே அன்புக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் குழந்தைகள் சட்டென உணர்வு வயப்பட்டு முடிவெடுப்பார்கள். கணவன் – மனைவி சண்டையின் போது சில வீடுகளில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவார்கள். அதைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் தற்கொலை எண்ணம் வரலாம். குடும்பத்தின் வறுமை நிலையும் குழந்தைகளிடம் தற்கொலை எண்ணத்தைத் தூண்டக்கூடும். தனக்கு நேரும் துயரத்தை வெளியே சொல்ல முடியாத குழந்தைகள் இறுதி வாய்ப்பாக தற்கொலையை நாடுவார்கள்.

பதின் பருவக் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படக்கூடிய பாலியல் சீண்டலுக்கும் தற்கொலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தனக்கு நிகழும் பாலியல் சீண்டல் குறித்து குழந்தைகள் சொன்னால் எத்தனை பெற்றோர் அதைக் கவனத்துடன் கையாள்கிறார்கள்? “நீ ஏன் அங்கே போன, எதுக்கு அவர்கிட்ட பேசின?” என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளைத்தான் பெரும்பாலான பெற்றோர் குற்றம் சாட்டுவார்கள். அதற்குப் பயந்துகொண்டே குழந்தைகள் அதைப் பெற்றோரிடம் மறைத்துவிடக்கூடும். சில நேரம் பள்ளிகளிலோ, மாலை நேர பயிற்சி வகுப்புகளிலோகூட குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகக்கூடும். இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இரு பாலரும் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படக்கூடும். வீட்டில் சொன்னால் படிப்போ பயிற்சி வகுப்போ தடைபடக்கூடுமோ என்ற அச்சத்திலும் குழந்தைகள் அதை உள்ளுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளலாம்.

ஆலோசனை நல்லது

நாம் எதைச் சொன்னாலும் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு உருவாக்குவது பெற்றோரின் கைகளில்தான் இருக்கிறது. நான் தனியாக இல்லை, என்னை அரவணைக்கவும் துணை நிற்கவும் வீடு இருக்கிறது என்று குழந்தைகளை உணரவைப்பதும் பெற்றோரின் கடமையே. எவ்வளவு இணக்கமாக இருந்தாலும் பதின் பருவத்தில் அவர்கள் எந்த முடிவையும் எடுக்கலாம். ஆனால், அவர்களிடம் தென்படுகிற சின்னச் சின்ன மாறுதல்களை வைத்தே அவர்களது மனநிலையைக் கண்டுகொள்ளலாம். பதின் பருவக் குழந்தைகளிடம் எப்போதும் அறிவுரை சொல்வதைவிட அவர்களுக்குப் பிடித்த வகையில் சிறு சிறு ஆலோசனைகளாக நம் கருத்துகளைச் சொல்லலாம். குழந்தைகளை நண்பர்களைப் போல நடத்தினால் மட்டுமே மனம்விட்டுப் பேசுவது சாத்தியப்படும். அவர்கள் தோல்வியடைந்தாலோ கோபத்தில் இருக்கும்போதோ எதையும் எதிர்மறையாகப் பேசக் கூடாது. அவர்கள் ஓரளவு இயல்புக்குத் திரும்பிய பிறகோ உற்சாகமான மனநிலையில் இருக்கும்போதோ நம் தரப்பை எடுத்துச் சொல்லலாம். அதற்காக எல்லா நேரமும் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு. கொஞ்ச வேண்டிய நேரத்தில் கொஞ்சி, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தாலே குழந்தைகள் ஓரளவு அனைத்துக்கும் பழக்கப்பட்டுவிடுவார்கள்.

ஈகோ தேவையில்லை

பெற்றோருக்குப் பிள்ளைகளிடம் ஈகோ இருக்கக் கூடாது. நான் சொல்லி நீ கேட்கலைன்னா என்ன அர்த்தம் என்பது போன்ற கோபம் தேவையற்றது. அந்தக் காலத்துல நாங்க எல்லாம் எப்படி வளர்ந்தோம் தெரியுமா என்ற பேச்சை ஆரம்பித்தாலே பெரும்பாலான குழந்தைகள் எரிச்சல் அடைவார்கள். காரணம், அந்தக் காலச் சூழல் வேறு, தற்போதைய சூழல் வேறு. இரண்டையும் ஒப்பிட்டுப் பேசி குழந்தைகளை அதன்படி நடக்கச் சொல்வது அபத்தம். நல்லது, கெட்டதுஅனைத்துக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோரே முதல் முன்னுதாரணம். அதனால் எப்போதும் நேர்மறையாகப் பேசி, தோல்வியைத் தாங்கும் உறுதியுடன் நாம் இருந்தால்தான் குழந்தைகளும் சிக்கலான சூழ்நிலைகளில் உடைந்துபோக மாட்டார்கள்.

“நீ பதின் பருவத்தில் இருக்கிறாய். நீ வளர்ந்துவிட்டாய் அதை நான் மறுக்கவில்லை. உன்னால் எந்த விஷயத்திலும் முடிவெடுக்க முடியும். ஆனால், அது உணர்வுவயப்பட்ட முடிவாகவும் இருக்கக்கூடும். எங்களிடம் சொன்னால் நாங்கள் எங்கள் அனுபவத்தைக் கொண்டு அதற்கு வேறு நல்ல முடிவையும் சொல்ல முடியும். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து இறுதி முடிவை நீயே எடு” என்று குழந்தைகளிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னால் நிச்சயம் நாம் சொல்வதைக் கேட்பார்கள். நாம் அப்படிச் செய்யும்போதுதான் உணர்வுவயப்பட்ட முடிவுக்கும் அறிவுபூர்வமான முடிவுக்குமான வேறுபாட்டை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பெரும்பாலான தற்கொலைகளுக்கு நண்பர்களின் தூண்டுதலும் தவறான வழிகாட்டுதலும் காரணமாக இருக்கின்றன. அதனால் நண்பன் என்றாலே நல்லவன் என்று குழந்தைகள் நினைத்திருப்பது தவறு என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். நண்பர்களும் நம் குழந்தைகளின் வயதோ அல்லது அதைவிட ஒன்றிரண்டு வயது அதிகமாகவோ இருப்பதால் அவர்களாலும் பின்விளைவை யோசித்து முடிவெடுக்க முடியாது என்பதைச் சொல்லி வளருங்கள். பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான புரிந்துகொள்ளலும், இணக்கமும் சீராக இருக்கிற வீட்டில் தற்கொலை என்ற எண்ணத்துக்கே இடமிருக்காது.

(நிஜம் அறிவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE