அரியநாச்சி 14 - வேல ராமமூர்த்தி

By காமதேனு

‘இல்லே... சும்மா கேட்டேன்...'

அரண்டுபோனான் கருப்பையா. குரல்வளையிலேயே இருந்தது மாயழகியின் கை.
‘அய்யய்யோ! கேவலப்பட்டுப்போச்சே!’ பாம்பை மிதித்த மாதிரி பதறிப்போனான். நெஞ்சு, ‘பதக்பதக்’குன்னு அடிக்குது. ரத்தமும் சதையும் காய்ஞ்சுபோச்சு. வெறும் எலும்புக் கூடாய் நின்றான். ‘பருசம் போட்டாச்சுன்னா பாதிப் பொண்டாட்டின்னு சொன்ன ஊருப் பயலுக பேச்சைக் கேட்டு வந்தது தப்பாப் போச்சே!’
மாயழகியின் கை தளர்ந்தது. கழுத்தை விட்டுவிட்டாள். இடுப்புக் குடத்தோடு புதரை விட்டுப் பாதைக்கு வந்தாள். கருப்பையாவை நோக்கிக் கை நீட்டி, “லூஸு… லூஸு!” என்றவள், ‘க்ளுக்’ என சிரித்தாள். கிணற்றை நோக்கி நடந்துபோனாள்.
“சிரிக்கிறா!” முணுமுணுத்தான்.
கண்கள் நிலைகுத்த, வாய் பிளந்தவாறு முள்ளுப் புதருக்குள்ளேயே நின்றான். சந்தோசம் தாங்க முடியலெ. இருட்டுப் புதருக்குள் குதித்த குதியில், காலில் ‘வதக்’ என முள் ஏறியது.
உள்ளே வருகிற எல்லா கைதிகளுக்கும் வந்த புதுசுலெதான் அது ஜெயில். அதிகபட்சம் ஒரு வாரம். ஜெயில் களியும் பூட்டும் திறப்பும் பழகிருச்சுன்னா அது ஒரு தனி லோகம்!
விடுதலையாகி வெளியே போகிற வரை சுற்றுக் கோட்டைதான் கோடிக்கால் பூதமா நின்னு மிரட்டும். வலு இருந்தா இடிச்சுத் தள்ளிட்டுப் போயிருவான்ங்க. இடிக்க எங்கே இடிக்க? வெள்ளைக் காரன்ங்க கட்டின கோட்டை. காரை கூட பெயராமல் கம்பீரமா நிக்குது.
இளவட்டக் கைதிகள் எல்லாம் ஊர்ப் பெருமை, சாதிப் பெருமை பேசிக்கிட்டே சந்தோசமாத்தான் இருக்கிறான்ங்க. தெரியாத்தனமா வந்து சிக்கிய ஒண்ணு ரெண்டு கிழடு கெட்டைகள் பாடுதான் சிரமம். எப்போ பார்த்தாலும் பிள்ளைகள் நெனப்பு. வீட்டு நெனப்பு. காலம் போன காலத்திலே ஞானோதயம் பிறக்கும். பேச்சுத் துணையா வந்து சிக்குற இளவட்டப் பயலுககிட்டே அறிவுரையா அள்ளித் தட்டுவாங்க. சிக்குறவனுக்கு இது ஒரு தண்டனை.
உள்ளே இருக்கிற கைதிகளில் வெள்ளையத் தேவன்தான் மூத்த ஆளு. பேச்சு, சுருக்கம். ஒரு நாளைக்குப் பத்து வார்த்தை பேசுறதே அதிகம். எல்லாம் பார்வைதான். அத்தனை கைதிகளுக்கும் இவரு ‘அய்யா’தான். கைதிகளுக்கு மட்டுமில்லெ. ஜெயில் வார்டர், கண்காணிப்பாளர் அத்தனை பேருக்கும் வெள்ளையத்தேவன் மேலே ஒரு மரியாதை.
அரசமரச் சுற்றுத் திண்டில் வெள்ளையத்தேவன் கவிழ்ந்தபடி அமர்ந்து இருந்தார்.
“அய்யா!”
நிமிர்ந்து பார்த்தார். ஏழெட்டுக் கைதிகள், கை வேலைகளைப் போட்டுவிட்டு வந்து முன்னே நின்றார்கள்.
“ம்?”
“அடுத்த வாரம் அய்யா விடுதலை ஆகிப் போறீகளாம்!”
மறுபடியும் தலை கவிழ்ந்தார்.
கைதிகள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
“ஜெயிலை விட்டு அய்யா விடுதலை ஆகிப்போறது, எங்களுக்கு சந்தோசம்தான். ஆனாலும்….”
சொன்னவனை ஏறிட்டுப் பார்த்தார்.
அடுத்தவன் சொன்னான். “அய்யா… நாங்க நல்ல பயலுக இல்லை. கொலை, களவு பண்ணிட்டு உள்ளே வந்த குத்தவாளிகள்தான். செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்கத்தான் ஜெயிலுக்கு வந்தோம். ஆனா நீங்க இருக்கிற இந்த ஜெயிலு எங்களுக்கு ஜெயிலா தெரியலெ.”
வெள்ளையத்தேவனின் தலை தாழ இறங்கியது.
“எங்களை விட்டுட்டு அய்யா போறது நெஞ்சுக்குள்ளே ஒரு பக்கம் குத்துது” எல்லோரும் மெளனமாய் நின்றார்கள்.
அரசமரம் நோக்கி வந்த வார்டர், “என்ன இங்கே கூட்டம்?” என்றவர், “ஓ! தேவர் இருக்காரா…?” விலகி நின்ற கைதிகளுக்குள் நுழைந்தார்.
வார்டரைப் பார்த்ததும், “லீவுக்கு எசமான் என்ன சொன்னாரு?” என்றார் வெள்ளையத்தேவன்.
“அடுத்த வாரம் விடுதலையாகிப் போகப் போறீக. அதுக்கு இடையிலே எப்பிடி லீவு தருவாக தேவரே?” வெள்ளையத்தேவனுக்கு அருகில் அமர்ந்தார் வார்டர்.
“நாளை… ஏம் மக கல்யாணம்.”
“வாஸ்தவம்தான். என்ன பண்றது? சர்க்கார் கொடுக்கிற சிறப்புச் சலுகையிலெ உங்க பேரைத்தான் முதல் ஆளா சிபாரிசு பண்ணியிருக்கோம். மூணு வருசம் தண்டனை கழியுது. ஒரு நாள் போய் கல்யாணத்திலே தலை காட்டுறது முக்கியமா? மூணு வருச தண்டனைக் கழிவு முக்கியமா… தேவரே?”
“அதுக்கில்லே. ஏம் மக… தாயில்லாத பிள்ளை. தகப்பன் உயிரோட இருந்தும் போக முடியலை யேன்னுதான் நெஞ்சைப் பிசையுது!” கண் ஓரம் கலங்கியது.
சுற்றி நின்ற எல்லோர் நெஞ்சையும் பிசைந்தது.
“ஏம் மகன் ஒரு அவசரப் புத்திக்காரன். சொந்த பந்தத்தை அனுசரிச்சு, சண்டை சத்தமில்லாம கல்யாணத்தை முடிக்கணும். எப்பிடிக் கரை ஏறப் போறானோ!” வெள்ளையத்தேவனின் இமைகள் தளும்பின.
வெள்ளாங்குளத்துக்கு வள்ளி அத்தை வந்து போன பின்தான், பூவாயி கிழவி ‘உஸ்ஸ்… அப்பாடா!’ என நிம்மதியாய் மூச்சு விட்டாள். அன்னம் தண்ணி எடுக்காமல் அரியநாச்சி அழுது கிடந்ததும் பூவாயி காவல் இருந்ததும் இப்போ இல்லை.
உறவுமுறைக்கு முன்னாடி அசிங்கப்பட்ட புருசன் சக்கரைத்தேவன், பெருந்தன்மையா எல்லாத்தையும் மறந்து, ‘கல்யாணத்துக்கு நாங்க வந்துருவோம்’ன்னு வள்ளிக்கு வாக்கு கொடுத்து அனுப்பிட்டான். புருசன் சொன்ன சொல்லு அரியநாச்சி கண்ணீரைத் துடைச்சிருச்சு. படுத்த படுக்கையாவே அழுது கிடந்தவள், எழுந்து நடமாட ஆரம்பிச்சுட்டாள். சோறு கஞ்சி காய்ச்சக் கிளம்பிட்டாள்.
பூவாயிக்குக் கொஞ்சம் விடுதலை. காலையிலேயும் சாயங்காலமும் வந்து எட்டிப் பார்ப்பாள்.
“அரியநாச்சி… என்னடீ பண்றே?” என விசாரிப்பாள். வீடு வாசலைக் கூட்டிப் பெருக்குவாள். பாத்திரம் பண்டங்களை விளக்கிப் போடுவாள். அரியநாச்சியை உட்கார வச்சுக் குளிப்பாட்டுவாள். கலைந்து போட்ட சேலை, துணிமணியைக் கண்மாய்க்குக் கொண்டுபோய்த் துவைத்துப் பிழிந்து எடுத்துவருவாள்.
“பூவாயி அய்த்தைக்கு நான் என்ன கைம்மாறு பண்ணப்போறேனோ…” என அரியநாச்சி புலம்புவாள்.
“அடி… இவ யாருடீ! நீ எங்க வெள்ளையண்ணன் மகள்! உனக்கு ஊழியம் பார்க்காம யாருக்குப் பார்க்கப் போறேன்? கைம்மாறாம்… கைம்மாறு! அதெல்லாம் ஒரு கழுதையும் வேணாம். கைகாலு சுகத்தோட நீ ஒரு பிள்ளையைப் பெத்துப்போடு. அது போதும்” என்பாள் பூவாயி.
பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. காலையில் வந்து போன பூவாயியை எதிர்பார்த்துத் தாழ்வாரத் திண்ணையில் அமர்ந்திருந்தாள் அரியநாச்சி.
வண்டிப் பாதை வழியாக சக்கரைத்தேவனின் கூட்டு வண்டிதான் வந்தது. சோலை ஓட்டி வந்தான்.
“அரியநாச்சி…” என்றபடியே வண்டியை விட்டு இறங்கி வந்த சக்கரைத்தேவன், எதிர்த் திண்ணையில் அமர்ந்தான். “என்னம்மா இங்ஙன உக்காந்திருக்கே?”
புருசன் சொன்னதைக் காதில் வாங்காமல், “குடிக்க தண்ணி கொண்டுவரவா?” என்றபடி கையூன்றி எழ முயன்றாள்.
“சிரமப்படாதே… நீ உக்காரும்மா” கை அமர்த்தினான்.
அரியநாச்சியின் மனசெல்லாம் நெறஞ்சு போயிருந்தான் புருசன்.
வண்டியை ஓரங்கட்டி, காளைகளை அவிழ்த்துக் கட்டுத்துறையில் தறித்துவிட்டு வந்தான் சோலை.
சாவகாசமாய்க் கால் விரித்து அமர்ந்திருந்த அரியநாச்சி, கொழுந்தனைக் கண்டதும் கால் ஒடுக்கி அமர சிரமப்பட்டாள். மதினிக்காரி சங்கடப்படுவதைப் பார்த்த சோலை, “நீங்க பாட்டுக்கு இருங்க மதினி…” வீட்டுக்குள் நுழைந்தான்.
“ஏப்பா… சோலை, குடிக்கத் தண்ணி கொண்டுவா…” என்ற சக்கரைத்தேவன், அரியநாச்சியின் முகத்துக்கு நேர் பார்த்து, “நாளை எந்நேரம் கிளம்புறதும்மா?” என்றான்.
“சாயங்காலம் போவோம்.”
“நம்ம கூட… பூவாயி சின்னத்தா வரும். வேற யாரு வருவாக?”
“வேற யாரு வரப் போறாக? ‘கல்யாணத்துக்கு வாங்க’ன்னு இந்தூர்லெ ஒரு பிள்ளைக்குச் சொல்லலெ. அப்புறம் எப்பிடி வருவாக? நம்ம போறதே… ஏந் தங்கச்சி மாயழகிக்காக!” என்றவள், குரல் தாழ்த்தி, “ஆமா… ஒங்க தம்பி வரணும்லே?” என்றபோது, தண்ணீர் செம்பை சக்கரைத் தேவனுக்கு முன்னால் நீட்டிக்கொண்டு நின்றான் சோலை.
“ஏப்பா… சோலை. நாளைக்குப் பெருநாழி போய்ட்டு வந்துருவோம்” தம்பியை ஏறிட்டுப் பார்த்துச் சொன்னான் சக்கரைத் தேவன்.
“கல்யாணத்துக்கா? நான் எதுக்கு? அந்தப் பயலுக மூஞ்சியிலே நான் முழிக்க மாட்டேன்…”
“அடேய்… விடுறா. அவன்ங்களுக்குத் தெரிஞ்சது அம்புட்டுத்தான். ஜெயில்லெ கிடக்குற நம்ம அம்மானுக்காகப் போய்த் தலையைக் காட்டிட்டு வந்துருவோம். நாளை சாயங்காலம் வண்டியைப் பூட்டு.”
லோட்டா சாயா கடையிலே, சாராயம் தீ பறந்துகொண்டிருந்தது. பெருநாழி இளவட்டங்கள் எல்லாம் இங்கேதான் கிடக்கிறான்.
கடைக்கு உள்ளே இளவட்டங்களும் ஓரஞ்சாரமாய்ப் பெருசுகளும் அமர்ந்து சாராயத்தை மண்டிக்கொண்டிருந்தார்கள்.
கை ஓயாமல் ஊற்றி கொடுத்துக்கொண்டிருந்தான் லோட்டா. “அடேய்… எளவட்டங்கா! ஓசி சாராயத்தைக் குடிங்க. அதிலேயே குளிக்காதீங்க…”
போதை தலைக்கேறிய கள்ளராமன், “அடேய் லோட்டாப் பயலே! கல்யாண மாப்பிள்ளை கருப்பையா வேப்பங்குளம் சாராயத்தை கேன் கேனா இறக்கிட்டான். நாங்க குடிக்கிறோம், குளிக்கிறோம். அதை பத்தி நீ கவலைப்படாதே. ஊத்திக்குடுக்கிறதுதான் உன் வேலை. அந்த வேலையை ஒழுங்கா பாரு…” என்றான்.
ஓங்கி மிதித்தான் லோட்டா. “ராத்திரி தாலிகட்டு. எல்லாரும் இம்புட்டு போதையோட போயி சபையிலே நில்லுங்க. மணத்துப் போகும்!”
மிதியை வாங்கிக்கொண்ட கள்ளராமன், “அதை நீ சொல்லக் கூடாது. சாராய வாடையே அறியாத ஒரு பெரிய மனுசன் சொல்லட்டும்” என சிரித்தான்.
“இந்த ஊர்லேயே குடிக்காத பெரிய மனுசன்… கோவிந்தச் சித்தப்புதான். அவர்கிட்டே போய் நில்லு. செருப்புட்டேயே அடிப்பாரு.”
“அடிக்கட்டும். நல்லா அடிக்கட்டும். அவரு யாரு? எங்க பெரியப்பன்தானே? அதைப் பத்தி நீ பேசாதே. உன் வேலை ஊத்தி  ஊத்திக் குடுக்கிறதுதான். இந்தா… ஊத்து…”
கேசவன் வாய் திறந்தான். “ஆமா… வெள்ளாங் குளத்து சக்கரை அண்ணன் வருவாரா?”
“வந்தாலும் வரலாம்.”
“அவரு தம்பி… சோலை வருவானா?”
“அவனை ஏன் கேக்குறே? ஏதும் கலகம் இழுக்கப் போறியா?”
“இல்லே… சும்மா கேட்டேன்.”


(சாந்தி... சாந்தி...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE