தீபாவளியும் புதுத்துணியும்... - சுகா

By காமதேனு

‘எல! டபுள்கலர் சட்டத்துணி ஆரெம்கேவில காலியாயிட்டாம். நவராத்திரி முடிஞ்ச ஒடனெ வரும். சொல்லுதேன்னு செதம்பரம் சொல்லியிருக்கான்.’ தீபாவளி என்றால் பதின் வயதின் இறுதிகளில் புதுத்துணி. அதற்கு முந்தைய பருவத்தில் வெடி. பட்டாசு என்ற வார்த்தை எங்கள் நண்பர்களிடையே புழக்கத்தில் இல்லை. பழைய பேட்டையிலிருந்தோ, பாட்டப்பத்திலிருந்தோ ‘கட்ட’ சண்முகம் அண்ணன் ரகசியமாக வாங்கி வரும் ‘கல் டி’க்காகக் காத்துக் கிடப்போம். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ‘கட்ட’ சண்முகம் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பிப்போம். திருநவேலி பகுதிகளில் குட்டையாக இருப்பவர்களைக் கட்டையாக இருப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் குட்டையாக இருக்கும் சண்முக அண்ணன், ‘கட்டை’ சண்முகம் என்றழைக்கப்பட்டு, பின் பேச்சு வழக்கில் ‘கட்ட’ சண்முகம் ஆனான். எவ்வளவு சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாலும், ‘கட்ட’ சண்முகம் அண்ணனின் கால்கள் தரையைத் தொடாமல் ஆடிக் கொண்டிருக்கும்.

‘ச்சம்மொண்ணே! இந்த மட்டம் ஆளுக்கு ஒரு அம்பது கல் வெடியாவது வாங்கிக் குடுண்ணே!’

‘அம்பதா? என்ன வெளாடுதேளா? போலீஸ்காரன் கண்ணுல படாம இதைக் கொண்டாறதுக்குள்ள நான் படுத பாடு எனக்குத்தான் தெரியும்! ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது!’

‘கட்ட’ சண்முகண்ணன் சொல்வது ஓரளவு உண்மைதான். ‘கல்’ வெடி என்பது ‘மினி’ கையெறி குண்டு. சின்னச் சின்ன உருண்டையாக பச்சை சணல் சுற்றி இருக்கும். எடுத்து வரும் போதே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ‘கல்’ வெடியை பெரிய கல்சுவரில், தார் ரோட்டில், சிமிண்டு தரையில் ஓங்கி எறிந்து வெடிக்கச் செய்ய வேண்டும். ஊதுபத்தியைப் பொருத்தி, பயந்து பயந்து, ‘எல பத்திட்டு’ என்கிற சத்தம் கேட்கவும் ஓட வேண்டிய அவசியம் இல்லாத வெடி. இன்னும் சொல்லப் போனால் நம் தமிழ் சினிமாவின் நிரந்தர ஹீரோவாகிவிட்ட ரவுடித்தனமான ஆண்மையை பறைசாற்றும் வெறித்தனமான வெடி. சில சமயம் கைகளில் ஏந்தி வரும்போது ஒன்றிரண்டு ‘கல்’ வெடிகள் கை தவறி கீழே விழுந்து வெடித்து ‘ஆண்மை’க்கு சேதம் விளைவிப்பதுண்டு. நாளடைவில் ‘கல்’ வெடிகள் காணாமல் போயின. எங்களுக்கும் வெடி மீதிருந்த ஆசை மெல்ல விலகி, துணி மீது போனது. தீபாவளிக்கு புதுத்துணி போடுவது என்பது, நமக்காக அல்ல. பெண்பிள்ளைகள் பார்ப்பதற்காக என்னும் உண்மை யார் சொல்லாமலும் எங்களுக்கே விளங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE