நீரோடிய காலம் 5: அடிமரத்தை வெட்டும் இறால் பண்ணைகள்

By ஆசை

மயிலாடுதுறையிலிருந்து எங்கள் பயணம் மறுபடியும் தொடர்ந்தது. வைத்தீஸ்வரன் கோயில் வழியாகச் செல்லும்போது இரு மருங்கிலும் ஒரு வீடு தவறாமல் ‘இங்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படும்’ என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் பாரம்பரியத்தின் ஒரு பகுதி போல இருந்த நாடி ஜோதிடம் இன்று பெரிய வணிகப் பொருளாகிவிட்டது.

வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி வழியாக கொள்ளிடம் எனும் ஊரை அடைந்தோம். சீர்காழிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் தைக்கால் என்ற ஊரில் இஸ்லாமியர்கள் கோரைப் பாய், பிரம்பு நாற்காலி போன்றவற்றை விதவிதமாகச் செய்கிறார்கள். அங்கேயே கோரையும் பயிராகிறது. ஆனால், காவிரியில் தண்ணீர் வருவதே பெரும் திண்டாட்டமாக ஆகிவிட்டதால் முன்பு போல கோரை விளைவதில்லை. ஆகவே, பாய் பின்னும் தொழிலும் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. “முன்னாடியெல்லாம் கொள்ளிடம் ரயிலடியில ஒவ்வொரு வண்டி வந்து நிற்கும்போதும் வெட்டிவேர் விக்கும். இப்ப அதையும் காணோம்” என்றார் தங்க.ஜெயராமன்.

கொள்ளிடம் ஊரை அடைந்ததும் பிரதான சாலையிலிருந்து சற்று விலகி, கொள்ளிடம் ஓடும் இடத்துக்குச் சென்றோம். கொள்ளிடத்துக்குக் குறுக்கே நீண்ட பாலம் ஒன்று இருந்தது. கொள்ளிடத்தின் ஊடாகப் பார்க்கும்போது தூரத்தில் ஆற்றுத் தீவு தெரிந்தது. அதற்கு நடுத்திட்டு என்று பெயர்.
கொள்ளிடம் ஊரில்தான் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து சிதம்பரம் செல்லவேண்டும். நாங்கள் நின்ற கரைக்கு மறுகரைக்கு (வடக்கு கரை) அப்பால்தான் புகழ்பெற்ற பிச்சாவரம் அலையாத்திக்காடுகள் இருக்கின்றன.

“மறு கரையை ஒட்டி ‘பழைய கொள்ளிடம்’ இருக்கு. ‘பழைய கொள்ளிடம்’, ‘பழங்காவேரி’ அப்படின்னெல்லாம் போட்டி ஆறுகள் ஓடுது தெரியுமா? ஏன் அந்தப் பேர்கள் வந்துச்சுன்னு தெரியல” என்றார் தங்க.ஜெயராமன்.

“கொள்ளிடத்தை எல்லாரும் ஆறு ஆறுன்னே சொல்லுவாங்க. அது தப்பு. அது ஒரு வடிகால். நீர்நிலைகளோட நமக்கு இருக்குற உறவு குறைஞ்சுகிட்டே வர்றதோட அடையாளம்தான் நீர்நிலைகளோட பெயர்கள் நமக்கு மறந்துபோறதும், குழம்பிப் போறதும்” என்றார் தங்க.ஜெயராமன்.
மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தோம். கொள்ளிடம் கடைத்தெருவின் வழியே கார் நுழைந்து கிழக்குப் பக்கமாகச் செல்லும் சாலையில் திரும்பியது. கொஞ்ச தூரம் சென்றதும் ‘ஆச்சாள்புரம்’ என்ற ஊரின் பெயர்ப் பலகை தென்பட்டது. உடனே துள்ளிக்குதித்தேன். சிதம்பரம் கோயிலில் பல ஆண்டுகள் ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக இருந்த ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் ஊர் அல்லவா! நல்லூரில் எங்களுக்காகக் காத்திருந்த ‘காமதேனு’ சிறப்புச் செய்தியாளர் கரு.முத்துவைக் கைபேசியில் அழைத்தேன்.

“ஆமா சார்! சின்னத்தம்பி ஊர்தான் அது. அங்கதான் இருக்கார். வயசு ரொம்ப ஆயிடிச்சு. நீங்க திரும்பி வர்றப்ப முடிஞ்சா அவரப் பார்க்கலாம்” என்றார்.

சீர்காழி தாண்டிய பிறகு வந்த ஊர்களைப் பார்த்தால் மையத் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ரொம்பவும் தூரமான இடங்கள் போலவே தெரிந்தன. தொழில் வாய்ப்புகள் குறைவாகத் தெரிந்தது போலவே அங்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விவசாயத்தின் வீழ்ச்சியையும் நம்மால் உணர முடிந்தது. சாலைகளும் போக்குவரத்தும் இன்னும் அடிப்படை நிலையிலேயே இருந்தன.

நல்லூரில் தனது வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டு கரு.முத்து நம்மை வரவேற்றார். மக்கள் அடர்த்தி குறை
வான ஊர் என்பதால், ஏழையோ பணக்காரரோ எல்லோரது வீட்டையும் சுற்றிலும் நிறைய இடம் இருந்தது.
அதனாலேயே சென்னைவாசிகளை விட அவர்களைப் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லிவிடலாம்.

“பெரும்பாலும் எங்க சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிங்க, வாழை இலை, தேங்காய் எண்ணெய் இப்படிப் பெரும்பாலான விஷயங்களையெல்லாம் நாங்களே உற்பத்தி பண்ணிடுவோம். கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் விவசாயம்கூட பிரச்சினை இல்லாமத்தான் ஓடிக்கிட்டு இருந்துச்சி. இப்போ அதுக்கும் கொஞ்சம் தள்ளாட்டம் ஆரம்பமாச்சு. மூணு போகம் பண்ணுனதெல்லாம் போயி இப்போ ஒரு போகம் தாங்குறது மாதிரி ஆச்சு ” என்றார் கரு.முத்து.

காந்தி  கூறிய தன்னிறைவு  பெற்ற கிராம வாழ்க்கையை இயல்பாகவே கரு.முத்துவும் அந்தக் கிராமத்திலுள்ள மற்றவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

அவர் வீட்டில் மதிய உணவு உண்டுவிட்டு மகேந்திரப் பள்ளிக்குப் புறப்பட்டோம். நல்லூரிலிருந்து மகேந்திரப் பள்ளி ஐந்து கி.மீ. தொலைவில் இருந்தது. அங்கு சம்பந்தரால் பாடல் பெற்ற அருள்மிகு வடிவாம்பிகை உடனுறை திருமேனியழகர் கோயில் இருக்கிறது. மகேந்திரப்பள்ளியிலிருந்து கொள்ளிடத்தின் கரை வழியாகப் பயணித்து, கொள்ளிடம் கடலில் கலக்கும் பழையாறு என்ற ஊருக்குச் செல்வதாகத் திட்டம்.
மகேந்திரப்பள்ளிக்குச் செல்லும் வழி, காலத்தில் பின்நோக்கிச் செல்வதுபோல் இருந்தது. பல வீடுகள் கைவிடப்பட்டும் இடிந்தும் அந்தப் பிரதேசமே வெறிச்சோடிக் காணப்பட்டது. பாதி இடிந்த வீடுகளிலும் கூட ஒருசில குடும்பங்கள் வசிப்பதைக் காண முடிந்தது.

“விவசாயம் போச்சு சார்! பக்கத்துல இறால் பண்ணைகள் வேற அதிகம் வந்து நிலைமையை இன்னும் மோசமாக்கிடிச்சு. கொள்ளிடத்துல இப்போ நீங்க பாக்குற தண்ணீ தற்காலிகம்தான். பெரும்பாலும் வறண்டுதான் கிடக்கும். முடிஞ்சவங்க இங்கருந்து கிளம்பிட்டாங்க. முடியாதவங்க இங்கேயே இருந்து, கெடைக்கிற வேலையைச் செஞ்சுகிட்டுக் காலத்தத் தள்ளுறாங்க” என்றார் கரு.முத்து.
மகேந்திரப்பள்ளிக்கு நாம் சென்ற நேரம் அங்குள்ள சிவன் கோயில் நடை சார்த்தப்பட்டிருந்தது.

‘திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்அரவரை அழகனை அடியிணை பணிமினே’என்று சம்பந்தர் பாடிய ‘மகேந்திரப்பள்ளி’யில் இன்று செழுமையின் சுவடு சிறிதும் இல்லை. இப்போதே இங்கு வருவது அவ்வளவு எளிதாக இல்லை, சம்பந்தர் காலத்தில் எப்படி இங்கு வந்திருப்பார் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. ஒருகாலத்தில் செழிப்பான ஊராக இது இருந்திருக்கக் கூடும் என்றும் தோன்றியது. சிவன்
கோயிலைப் போலவே பழமையான விஜயகோதண்டராமர் கோயில் ஒன்றும் இங்கு இருக்கிறது.

“இங்கேருந்து மேற்கே கரூர்வரை ஆற்றுவழிப் போக்குவரத்து பழைய காலத்தில் இருந்திருக்கு”  என்றார் கரு.முத்து.
சிவன் கோயிலுக்கும் கொள்ளிடம் கரைக்கும் இடையே எங்கிலும் சீமைக் கருவை மரங்கள். செப்பனிடப்படாத தார்ச் சாலைகளையும் கருவை சூழ்ந்துவிட்டது. அதன் ஊடாக ஒருவர் கையில் பையுடன் நாம் இருக்கும் திசை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
“மீன் புடிச்சிட்டு வர்றாங்க. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சி, சாப்பாடுக்கும் ஆச்சு” என்றார் கரு.முத்து.

காரிலேயே கொள்ளிடக் கரையை அடைந்தோம். அங்கு ஒரு காலத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ள தார்ச் சாலையில் வழியே தள்ளாடியபடியே கார் ஊர்ந்தது. ஊரில் உள்ள வீடுகளைப் போலவே கொள்ளிடக் கரையில் சில இறால் பண்ணைகளும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. இயங்கிக்கொண்டிருக்கும் பண்ணைகளும் அவ்வளவு செழிப்பாக இருப்பதுபோல் தெரியவில்லை. நுனிமரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக இறால் பண்ணை அமைக்கப்பட்டது மகேந்திரப்பள்ளி பகுதியில்தான் என்றார் கரு.முத்து. “ஊட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்தான் இங்கே இறால் பண்ணைக்கு வித்திட்டது. விளைநிலங்களை மிக அதிக விலைக்கு வாங்கி இறால் பண்ணைகளை உருவாக்கி நல்ல லாபம் பார்த்திருக்கிறார். விவசாயிகளும் நல்ல விலை கிடைக்கிறது என்பதால் தங்கள் நிலங்களை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்து மற்றவர்களும் இந்தத் தொழிலில் இறங்க மகேந்திரப்பள்ளி, காட்டூர் உள்ளிட்ட ஊர்களில் இறால் பண்ணைகள் புற்றீசல்களாக முளைத்தன. அதற்குப் பின்னர்தான் நாகை, கடலூர் மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் இறால் பண்ணைகள் புதிய தொழில் வாய்ப்பாக மாறியது. கூடவே, காவிரி பிரச்சினையும் சேர்ந்துகொள்ள விவசாயம் அழிந்துவரும் தொழிலானது” என்றார் கரு.முத்து.
கொஞ்ச தூரத்திலேயே கரைவழிப் பயணம் தடைப்பட்டது. அந்தச் சாலையை நம்பி நாங்கள் வந்திருக்கக் கூடாதுதான். தூரத்தில் எக்கிப் பார்த்தால் கடலுடன் கொள்ளிடம் கைகுலுக்குவது தெரிந்தாலும் நாங்கள் இங்கிருந்து திரும்பி, கூடுதலாக ஓரிரு கி.மீ. பயணித்து பழையாற்றை அடைய வேண்டும்.
பார்த்துவிடலாம்!

(சுற்றுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE