பதறும் பதினாறு 14: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

பதின் பருவத்தில் குழந்தைகள் இப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் எனச் சிலவற்றை அனுமானிக்கலாம். ஆனால், நம் அனுமானங்கள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிற அளவுக்கு எதிர்பாராதவற்றைக்கூட சில நேரம் குழந்தைகள் செய்துவிடக்கூடும்.

ப்ரித்வி, பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தான். அப்பா, அம்மா, தங்கை என அளவான குடும்பம் மட்டுமல்ல, அற்புதமான குடும்பமும்கூட. பெற்றோர் இருவரும் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள். குழந்தைகள் பதின் பருவத்தை அடைந்ததுமே அவர்களைத் தனி மனிதர்களாக நடத்தியவர்கள். அவர்களை ஒதுக்காமல் அவர்களின் ஒவ்வொரு கருத்தையும் விருப்பத்தையும் மதித்தார்கள். அதனாலேயே ப்ரித்வியும் அவனுடைய தங்கையும் பொறுப்புடன் நடந்துகொண்டனர்.

மூத்தவன் என்பதால் ப்ரித்வி எப்போதும் பொறுப்புணர்ந்து செயல்படுவான். தனக்குக் குழப்பம் ஏற்படும் விஷயங்களை பெற்றோரிடம் மனம் திறந்து விவாதிப்பான். அவர்களிடம் கருத்து கேட்ட பிறகே எதையும் செயல்படுத்துவான். தன்னை மதிக்கிற பெற்றோர் மீது ப்ரித்விக்கு அளவுகடந்த அன்பும் மரியாதையும் இருந்தது. அவனுடைய வருத்தமெல்லாம் கணிதப் பாடத்தில் பின்தங்கி இருந்ததுதான். அதற்கும் அவனுடைய பெற்றோர் தீர்வு சொன்னார்கள். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல என்று ப்ரித்விக்கு நம்பிக்கை தந்தவர்கள், கணிதப் பாடத்துக்கு மட்டும் அவனை டியூஷன் போகும்படி சொன்னார்கள். அப்படியும் அந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டு மதிப்பெண்களில் கணிதத்தில் தவறிவிட்டான்.

அரவணைத்த பெற்றோர்

தேர்வு முடிவு வந்ததுமே ப்ரித்வி பதறிவிட்டான். என்ன செய்வதெனத் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கினான். தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரின் கனவைச் சிதைத்துவிட்டோமே என வேதனைப்பட்டான். அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவனிடம் தன்மையாகப் பேசினர் அவனுடைய பெற்றோர். தேர்வில் தோல்வியடைவதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று தாங்கள் படித்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விக் கதைகளை வேடிக்கையாகச் சொல்லிச் சிரித்தனர். தன்னுடன் நன்றாகப் படித்த மாணவனைவிட மதிப்பெண் குறைவாக வாங்கிய மாணவன் வாழ்க்கையில் சாதித்த கதையை ப்ரித்வியின் அப்பா சொன்னார். அவனுக்குள் இருந்த குழப்பமும் குற்றவுணர்வும் மெல்லக் கரைந்தன. இப்போதுதான் உடனடி மறுதேர்வு முறை இருக்கிறதே, அதை எழுதித் தேறிவிட்டால் இந்த ஆண்டே கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என அவனுடைய அம்மா சொல்ல, ப்ரித்விக்கு அது ஆறுதலாக இருந்தது.

வீட்டுக்குள்ளேயே இருந்து மதிப்பெண்ணைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதைவிட வெளியே செல்ல அவர்கள் முடிவெடுத்தனர். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினர். பெற்றோரின் புரிதலும் பக்குவமும் தேர்வில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை ப்ரித்விக்குள் விதைத்தன. இடைவிடாமல் கணிதப் பயிற்சியில் ஈடுபட்டான். அவன் படிப்புக்குக் குடும்பமே துணை நின்றது. மறுதேர்வு எழுதிவிட்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். நிச்சயம் எண்பது சதவீதம் கிடைத்துவிடும் என நம்பிக்கையோடு சொன்னான்.

எதிர்பாராத முடிவு

மறுதேர்வு முடிவு வெளியாகும் நாளன்று வீடே பரபரப்பாக இருந்தது. கம்ப்யூட்டர் திரையில் ஒளிர்ந்த மதிப்பெண்ணைப் பார்த்ததும் ப்ரித்வியின் முகம் இருண்டது. எப்படி இந்த அளவுக்கு மதிப்பெண் குறைந்தது என அதிர்ந்தான். நன்றாகத்தானே கணக்குகளைப் போட்டிருந்தோம், பிறகு எப்படி இந்த முறையும் ஃபெயிலாகிப் போனோம் என யோசித்தான். யோசிக்க யோசிக்க எதுவுமே புரியவில்லை. ப்ரித்வியின் பெற்றோருக்கும் என்ன சொல்லி மகனைத் தேற்றுவது எனத் தெரியவில்லை. அப்பா அவனை ஆதூரமாக அணைத்துக்கொண்டார். விடுப்பா, கணக்கு சரியா வரலைன்னா கம்ப்யூட்டர் கோர்ஸ் ஏதாவது சேர்ந்து படிக்கலாம் என மகனிடம் சொன்னார். அது தொடர்பாக என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று அம்மாவும் பட்டியலிட்டார்.

ஆனாலும் ப்ரித்வியால் அந்தத் தோல்வியிலிருந்து  மீள முடியவில்லை. ஏன் பெற்றோர் தன் மீது இவ்வளவு நம்பிக்கையும் அன்பும் வைக்க வேண்டும். அவர்கள் ஏதாவது திட்டி இரண்டு அடி அடித்திருந்தால்கூட அவன் சமாதானமாகியிருப்பான். ஆனால்,அவர்கள் அவன் மீது காட்டிய பாசமும் அக்கறையும் அவனை அந்தத் தோல்வியிலிருந்து மீளவிடாமல் செய்தன. நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பியவன், சடலமாகத்தான் வீடு திரும்பினான். வீடே அதிர்ச்சியில் உறைந்துபோனது.

தோளுக்கு மேல் வளர்ந்த மகனை ஏதாவது கடுமையாகப் பேசினாலோ அடித்தாலோ மனம் உடைந்துபோவான் என்று தான் பெற்றோர் அவனிடம் தன்மையாக நடந்துகொண்டனர். இரண்டு முறை தோல்வியடைந்தபோதும் அவனைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினர். ஆனால், மகன் அப்படி
யொரு விபரீத முடிவு எடுப்பான் என்பதை அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை.

மகனை நல்லவிதமாக வளர்த்ததுதான் தாங்கள் செய்த குற்றமா எனக் கதறியழுத அந்தப் பெற்றோரின் கேள்வியில் நியாயம்
இருக்கவே செய்கிறது. ஆனால், பதின் பருவத்துக் குழந்தைகள் எப்போது, என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட சில நடவடிக்கைகள் அவர்களது மன ஓட்டத்தைச் சொல்லிவிடும். அந்த மாற்றங்களை நாம் சரியாக அவதானித்துவிட்டால், தவறாக முடிவெடுப்பதிலிருந்து அவர்களை நாம் மீட்டுவிடலாம்.

அதிகரிக்கும் தற்கொலைகள்

2011-ல் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அந்த ஆண்டு  மட்டும் 1,36,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொள்கிறவர்களில் 40 சதவீதத்தினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்; பதின் பருவக் குழந்தைகள் அதில் கணிசமாக இருக்கின்றனர். 2002-ம்ஆண்டுடன் ஒப்பிடும்போது 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்திருக்கிறது. தெற்கு டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் பதின் பருவக் குழந்தைகளில் 15.8 சதவீதத்தினருக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமோ அல்லது அது சார்ந்த தூண்டலோ இருப்பது தெரியவந்திருக்கிறது.

இன்று அதிகரித்திருக்கும் வாழ்க்கை நெருக்கடி இந்த சதவீதத்தை அதிகரித்திருக்குமே ஒழிய குறைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். காரணம், பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாகவே வளர்க்கிறார்கள். அனைத்திலும் அவர்கள் வெற்றிபெற வேண்டும், அனைத்தையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தங்களால் சாதிக்க முடியாத அனைத்தையும் தங்களுடைய குழந்தைகள் மீது திணிக்கிற பெற்றோரும் நம்மிடையே உண்டு. பதின் பருவத்தில் குழந்தைகளிடம் இயல்பாக ஏற்படுகிற மாற்றங்களோடு இப்படியான நிர்பந்தங்களும் சேர்ந்துகொள்ள அவர்கள் சட்டென உணர்வுவயப்பட்ட முடிவெடுக்கக்கூடும். அதனால், கத்தி மேல் நடக்கும் கவனத்துடன்தான் பதின் பருவக் குழந்தைகளைக் கையாள வேண்டும்.

மூன்று காரணிகள்

மரபணு ரீதியான காரணம், உளவியல் காரணிகள், சமூகக் காரணிகள் ஆகிய மூன்றும்தான் தற்கொலையையோ அல்லது தற்கொலை எண்ணத்தையோ தீர்மானிக்கின்றன. குடும்பத்திலோ அல்லது உறவினர் வகையிலோ யாராவது தற்கொலைக்கு முயன்றிருந்தாலோ தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் அதே எண்ணம் தோன்றக்கூடும். எல்லா வீடுகளிலும் இது நடந்தே தீரும் என்பதில்லை; நடப்பதற்கான சாத்தியம் அதிகம். சிறு வயது முதலே எடுத்ததற்கெல்லாம் உணர்வுவயப்பட்டு வினையாற்றுகிற குழந்தைகளும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தெரியாத/முடியாத குழந்தைகளும் உளவியல் ரீதியாக உந்தப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ளக்கூடும். மனச் சோர்வும் குழந்தைகளிடம் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்.

இவை இரண்டைத் தவிர சமூகக் காரணிகளும் அதிக அளவில் குழந்தைகளைப் பாதிக்கின்றன. தன் வயதையொத்த குழந்தைகளோடு சேர்ந்து, அவர்களுடைய வழிகாட்டுதலில் தவறான முடிவெடுப்பது, தேர்வு, காதல் போன்றவற்றில் தோல்வியை எதிர்கொள்வது, காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றுக்கு அடிமையாகிக் கிடப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு அனுமதியில்லாத படங்களை இணை
யத்தில் பார்ப்பது, சவால் நிறைந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது இப்படிப் பல்வேறு புறக் காரணிகளும் சில நேரம் குழந்தை
களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும். பொதுவாக உணர்வுவயப்பட்ட நிலையிலும் மனநோய் பாதித்த நிலையிலுமே பெரும்பாலான பதின் பருவக் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

ஆண்களே அதிகம்

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளே தற்கொலைக்கு அதிகமாக முயன்றாலும் ஆண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர். தற்கொலைக்கு முயலும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பிழைத்துக்கொள்கின்றனர். காரணம், பெண் குழந்தைகள் பதின் பருவத்தை அடைந்த பிறகும் பெற்றோரிடம் இருந்து அவ்வளவாக விலகுவதில்லை. தன் தோழிகளிடம் விவாதிப்பதற்கு இணையாகவோ அல்லது அதைவிடக் குறைவாகவோ பெற்றோரிடம் பேசுகின்றனர். அதனால் அவர்களால் எந்தப் பிரச்சினையிலிருந்தும் ஓரளவு வெளியே வர முடிகிறது அல்லது பெற்றோர் மூலமாக மாற்றுப் பார்வை கிடைக்கிறது. தற்கொலைக்கு முயன்றாலும் அருகிலிருப்பவர்களால் உடனடியாக காப்பாற்றப்பட்டுவிடுகிறார்கள்.

ஆண் குழந்தைகள் அப்படியல்ல. பெரும்பாலான வீடுகளில் பதின் பருவத்தில் இருக்கும் ஆண் குழந்தைகளுக்கு அப்பாவைக் கண்டாலே பிடிக்காது. அப்பா என்ன சொன்னாலும் அவர்களுக்கு அது எட்டிக்காயாகத்தான் கசக்கும். அம்மா சொல்வதையும் முழுதாகக் கேட்பதில்லை. போனால் போகிறதென்று காதுகொடுப்பார்கள். வீட்டைவிட வெளியேதான் அவர்கள் நட்புறவைப் பராமரிக்கிறார்கள். தங்கள் வயதையொத்தவர்களிடமோ அல்லது தங்களைவிட வயதில் ஒன்றிரண்டு வயது மூத்த ஆண்களிடமோ அவர்கள் அதிகமாகப் பழகுவார்கள். அதனால், அவர்களுக்கு அந்த வயதுக்கே உரிய சிந்தனைகள்தான் தோன்றுமே தவிர, பக்குவப்பட்ட முடிவு எதுவும் தோன்றாது. பிரச்சினைக்கு வெளியே சிந்திக்கவும் அவர்களால் முடியாது. அதற்குள்ளேயே உழன்று அவசரகதியில் வினையாற்றுவார்கள். சிலநேரம் அது தற்கொலையாகவும் அமைந்துவிடும்.

(நிஜம் அறிவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE