ஒரு பத்திரிகையாளரின் முத்திரை!

By காமதேனு

திரைபாரதி

தீண்டாமை தீ உச்சத்தில் இருந்த1942-ல் ‘நந்தனார்’ என்ற மிகத் துணிச்சலான படம் ஒன்றைத் தந்தார் பத்திரிகையாளர் ஒருவர். அவர்தான் முருகதாஸா என்று அழைக்கப்பட்ட கே.முத்துசாமி அய்யர். மவுனப்பட காலத்தில், 1923, 1930 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை ‘நந்தனார்’ படமானது. சினிமா, மவுனம் கலைத்தபிறகு 1933, 1935 ஆகிய ஆண்டுகளில் ‘நந்தனார்’ கதை மீண்டும் இருமுறை படமானது. அதில் 1935-ல் வெளியான ‘பக்த நந்தனார்’ படத்தில்தான் கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் ஊதியம் வாங்கிக்கொண்டு நந்தனாராக நடித்தார்.

இந்த நான்கு படங்களுமே தோல்வி அடைந்தன. ஆனால், ஜெமினியின் தயாரிப்பில் கர்நாடக சங்கீதப் பாடகர் எம்.எம். தண்டபாணி தேசிகர், நந்தனாக நடித்த ‘நந்தனார்’ 1942-ல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு வசூலையும் வாரிக் குவித்தது. அதற்குமுன் பல படங்களை இயக்கி அனுபவம் பெற்றிருந்தபோதும் முருகதாஸாவுக்கும் ஜெமினி நிறுவனத்துக்கும் பெரும்புகழைக் கொண்டுவந்து சேர்ந்தது தமிழ் சினிமாவின் இந்த ஐந்தாவது ‘நந்தனார்.’
தமிழ்த் திரையிசைக்கு பெரும் பங்களிப்பைச் செய்த பாபநாசம் சிவனைத் திரைக்கு அறிமுகப்படுத்தியவர் முருகதாஸாதான். தனக்குப் பாதை அமைத்துக்கொடுத்தவர் இயக்கிய ‘நந்தனார்’ படத்துக்கு எவ்வளவு சிறந்த பாடல்களை எழுதியிருப்பார் பாபநாசம் சிவன்! இந்தப் படத்துக்காக முருகதாஸாவின் கட்டளையை ஏற்று, சாதி ரீதியாக மேலடுக்கில் இருந்த பார்வையாளர்களை அன்று திடுக்கிட வைத்த வரிகளையும் அவர் எழுதினார். மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கு வலு சேர்க்கும் வண்ணம் காட்சிகளை அமைத்திருந்தார் முருகதாஸா. இசையையும் தண்டபாணி தேசிகரின் சிறந்த குரல், நடிப்பு ஆகியவற்றையும் தாண்டி முருகதாஸாவின் திரைமொழி ரசிகர்களை ஆச்சரியத்துடன் ஈர்த்தது.

காட்சிமொழியின் மீது காதல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE