நாங்க புதுசா வாங்கிக்கிட்ட சைக்கிள்தானுங்க!

By காமதேனு

கே.கே.மகேஷ்

“எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக நிகழ்ச்சிகளை நடத்துவதில் வல்லவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். விஞ்ஞான பூர்வமாக யோசித்து செய்பவர்” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டியிருக்கிறார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மதுரையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் உதயகுமார் நடத்துகிற நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்தாக வேண்டும்.

மார்ச் மாதம், ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு 70 வகை சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் நடத்திவைத்தார் உதயகுமார். சீர்வரிசைப் பட்டியலைப் பார்த்ததும் பயனாளிகள் கூடிவிட, அதுக்கென்ன 120 ஜோடிக்கு நடத்திட்டாப் போச்சு என்று அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணிவைத்துவிட்டார். மணமக்களை வாழ்த்த 50 ஆயிரம் பேரை ‘அழைத்து’ வந்து, அவர்களுக்கு விருந்தும், பரிசுப் பொருட்களும் வழங்கினார். இதெல்லாம் சாதாரண மனிதர்களின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்களா?

ஜூலை 15ல் 5000 இளைஞர்கள் பங்கேற்கும் அதிமுக சாதனை விளக்க சைக்கிள் பேரணி. பங்கேற்பாளர்களுக்கு புத்தம் புதிய சைக்கிளோடு, தலா 5 ஆயிரம் ஊதியம், ஒயிட் அண்ட் ஒயிட் டிசர்ட், டிராக் சூட், 5 நாட்களும் உணவு என்று ஏதேதோ செய்ய, 5500 பேர் வந்துவிட்டார்கள். இந்தத் திட்டத்தை நாடு முழுக்க விரிவுபடுத்தினால் என்ன என்று யோசித்த அண்ணன், மதுரை ரிங் ரோட்டில் வெட்டவெளியில் ஒரு சைக்கிள் தொழிற்சாலையே தொடங்கிவிட்டார். 500 மீட்டர் தள்ளி நின்று பார்த்தாலும், தலையைச் சுழற்றாமல் அத்தனை உருப்படிகளையும் பார்த்துவிட முடியாத அளவுக்குப் பல்லாயிரக்கணக்கில் புத்தம் புதிய சைக்கிள்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சர்க்கஸ் கூடாரம் போல ஒரு டென்ட் அடித்து உள்ளே ஒரு டஜன் வடநாட்டு இளைஞர்கள் எந்திரம் போல வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எந்த மாவட்டத்தில் சைக்கிள் பேரணி நடந்தாலும் இங்கிருந்துதான் சைக்கிள்கள் அனுப்பப்படுகின்றன. இப்போது மழைக்காலம் என்பதால், இதுவரை நிகழ்ந்த ஆறு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE