ஹாட் லீக்ஸ்: இளவரசனை கூல்படுத்திய ரஜினி

By காமதேனு

இளவரசனை கூல்படுத்திய ரஜினி

‘ரஜினி மக்கள் மன்றத்தில் உழைப்புக்கு வேலை இல்லை. பணம் இருப்பவர்களுக்கே பதவிகளைக் கொடுத்து உண்மை விசுவாசிகளை ஓரங்கட்டுகிறார்கள்’ எனத் தமிழகம் முழுக்கவே புகைச்சல்கள். இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் டாக்டர் இளவரசன்தான் எனச் செய்திகள் பரவின. ஆனால், “நியமனங்களும் ஒழுங்கு நடவடிக்கைகளும் என்னுடைய ஒப்புதல் பெற்றே அறிவிக்கப்பட்டது” என சென்னை திரும்பிய வேகத்தில் அறிக்கை கொடுத்தார் ரஜினி. இந்த அறிக்கை வெளியானதின் பின்னணியிலும் இளவரசன் இருக்கிறார் என்பது அடுத்த குமுறல்! சென்னை திரும்பிய ரஜினியிடம், தன் மீது மன்றத்தினர் எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமாக பதிலளித்த இளவரசன், “இதற்கு மேலும் இந்தப் பொறுப்பில் தொடரவேண்டுமா என்று யோசிக்கிறேன்” என்றாராம். அவரைச் சமாதானப்படுத்திய ரஜினி உடனடியாக, இளவரசன் மீது எந்தத் தவறும் இல்லை என்பது போல் அறிக்கை வெளியிட்டதுடன், இளவரசனுக்கு போன் போட்டு, “இப்ப திருப்திதானே” என்று கேட்டாராம். அதற்கு, “இன்னைக்குதான் நிம்மதியாக தூங்கப் போறேன்” என்று சொல்லி சிரித்தாராம் இளவரசன்.

அதையும் எடுத்துட்டாங்க!

முதல்வர் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்களைக் கண்கொத்திப் பாம்பாக கணக்கெடுத்து வழக்கு மீது வழக்காக போட்டுக்கொண்டிருக்கிறது திமுக. இதற்கு செக் வைக்கும் விதமாக, “திமுக முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் மீது ஊழல் வழக்குகள் பாயும்” என்று அலாரம் அடித்திருக்கிறார் முதல்வர். இதற்கான வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்கும்படி காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜனும் (இப்போது தினகரன் அணியில் இருக்கும்) வெற்றிவேலும் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தார்கள். அந்த மனுவையும் தேடி எடுத்து அதிலிருந்து ஏதாவது நூல் பிடிக்க முடியுமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE