பதறும் பதினாறு 13: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

பதின் பருவத்தில் சில குழந்தைகளிடம் வெளிப்படும் மூர்க்கத்தனமும் வன்முறையும் அடிதடி என்கிற அளவில்தான் இருக்கும் எனப் பலர் நினைக்கக்கூடும். உண்மையில் பலவிதங்களில் வன்முறை வெளிப்படலாம். அவர்கள் பேசும் வார்த்தைகள் வழியாகவும் அது வெளிப்படக்கூடும். அவர்களின் வயதைப் பொறுத்து இது அமையும். சில நேரம் வயதுக்கு மீறிய வார்த்தைகளைக்கூடப் பேசுவார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன்னுடன் படிக்கும் மாணவியைப் பார்த்து, “நீ ஏன் தண்டமா வந்து பிறந்தாய். உங்கம்மாவோட வயித்துலயே இருக்க வேண்டியதுதானே” எனத் திட்டியிருக்கிறாள். அதைக் கேட்ட அந்தச் சிறுமி அதே பள்ளியில் படிக்கும் தன் அக்காவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். அக்கா வகுப்பு ஆசிரியரிடம் புகார் சொல்ல, ஆசிரியர் அந்தச் சிறுமியை அழைத்து விசாரித்திருக்கிறார். வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்வதில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் வெளிப்பாடாகத்தான் அந்தச் சிறுமி இப்படித் திட்டியிருக்கிறாள்.

வார்த்தை வன்முறை

ஏழாம் வகுப்பு மாணவியொருத்தி, தனக்குப் பிடிக்காத மாணவியை எப்போதும் கேலியும் கிண்டலும் செய்வாள். அவளது நிறத்தில் தொடங்கி, குட்டையான கூந்தல், உடல் பருமன் என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுக் கேலி பேசி தோழிகளுடன் சேர்ந்துகொண்டு சிரிப்பாள். அவளைப் பொறுத்தவரை அது வெறும் விளையாட்டுதான். ஆனால், சம்பந்தப்பட்ட மாணவி இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவாள் என்பதை அந்த மாணவி அறியமாட்டாள். கேலி செய்வது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்றவற்றை மாணவிகள் செய்வார்கள் என்றால், ஆண் குழந்தைகள் வேறுவிதமான வன்முறையில் ஈடுபடுவார்கள். இப்போது பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் இயங்குவதால் அதையே தங்கள் வன்முறைக்கான களமாகவும் பயன்படுத்துகிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத மாணவன் அல்லது மாணவியைப் பற்றி சமூக வலைதளங்களில் எழுதுவது, போலி கணக்கைத் தொடங்கி அதன் மூலம் அவர்களது நடத்தையைத் தவறாகச் சித்தரிப்பது எனப் பலவிதங்களில் வன்முறை வெளிப்படுகிறது. பெண் குழந்தைகளும் இப்படியான சமூக வலைதள வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் ஆண் குழந்தைகளோடு ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைவு.

எப்போதும் இருக்கும் கோபம்பதின் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் தங்களை வளர்ந்தவர்களாகவும் தனித்தஆளுமையாகவும் நினைத்துக்கொள்வார்
கள். நாம் பெரியவர்களாகிவிட்டோம், அதனால் அனைத்திலும் தங்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என நினைப்பார்கள். யாரும் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால், பெற்றோர் எல்லா விஷயத்திலும் குழந்தைகளை அப்படி அனுமதிக்க முடியாதே. குழந்தைகள் பாதை மாறுவது தெரிந்தால் அதை உணர்ந்து அவர்களை நல்வழிப்படுத்துதல்தானே பெற்றோரின் கடமையாக இருக்க முடியும்? இந்த இடத்தில்தான் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் கருத்து மோதல் தொடங்குகிறது.

குழந்தைகளின் விருப்பத்துக்கு மாறாகப் பெற்றோர் எதைச் சொன்னாலும் மறுப்பதையும் எதிர்ப்பதையுமே பெரும்பாலான பதின் பருவத்துக் குழந்தைகள் வழக்கமாகக்கொள்வார்கள். பெற்றோர் மீது மட்டுமல்ல, தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் எதன் மீதும் எப்போதும் அவர்களுக்குக் கோபம் இருந்தபடியே இருக்கும். அப்படியொரு சூழலில் எது நடந்தாலும், ஏற்கெனவே இருக்கும் கோபத்தை அதிகப்படுத்துமே தவிர அது குறைக்காது. பதின் பருவக் குழந்தைகளிடம் இருக்கும் எரிச்சலும் கோபமும் ஆத்திரமாக மாறும். பின்னர் அதுவே ஆக்ரோஷமாகி வன்முறையாக வெடிக்கும். அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அவர்களது கோபத்தைத் தூண்டும் ஒரு காரணிதான். அது கிடைத்தவுடனே அது படபடவென அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிடும்.

உணர்வின் உந்துதல்

பதின் பருவக் குழந்தைகள் பொதுவாக உணர்வுபூர்வமாக முடிவெடுப்பார்கள். பெரியவர்களைப் போல அறிவுபூர்வமாக முடிவெடுக்கும் கட்டத்தை இன்னும் அவர்கள் நெருங்கவில்லை. அதனால் எது நடந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவார்களே தவிர, அதன் பின்விளைவுகள் குறித்து யோசிக்க மாட்டார்கள். தன்னைக் காதலிக்காத பெண்ணின் மீது வன்முறையைச் செயல்படுத்துவதும் பள்ளியில் ஆசிரியரைத் தாக்குவதும் இப்படியான உணர்ச்சிவசப்பட்ட நிலையின் செயல்பாடுகளே. ஆனால், சிறிது நேரத்தில் அந்தக் கோபம் வடிந்துவிடும். மனம் ஓரளவுக்குச் சமநிலைக்கு வரும். அப்போதுதான் அவர்கள் செய்துவிட்ட செயலின் விபரீதம் அவர்களுக்கு உறைக்கும். நாம்தானா இப்படிச் செய்தோம் எனப் பதறுவார்கள். ஆனால், பெற்றோர் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட்டால் குழந்தைகளின் இப்படியான செயல்பாடுகளைத் தவிர்க்க முடியும்.
உள்ளுக்குள் எரிமலையைப் போலக் கொதிப்பும் கொந்தளிப்புமாக இருக்கும் பதின் பருவக் குழந்தைகளை ஒரே நாளில் சாந்தப்படுத்திவிட முடியாது. ஆனால், சிறுவயது முதலே கோபத்தை முறைப்படுத்தும் முறையைச் சொல்லிக்கொடுத்து அவர்களை வளர்க்கலாம். கோபத்தை அடக்குவது நல்லதல்ல. தவிர கோபப்படாமல் இருப்பதும் கடினம். எந்த இயல்பான உணர்வையும் அடக்கிவைக்கத் தேவையில்லை. அதற்காக அனைத்தையும் அப்படியே வெளிப்படுத்துவது நல்லதல்ல. கோபம் வரும்போது அதை அந்த நிமிடமே வெளிப்படுத்துவதைவிட அதை வேறுவழியில் கையாளக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். சிறுவயது முதலே வீட்டில் அதைப் பழகிக்கொள்கிற குழந்தைகள், நாளடைவில் கோபத்தை எளிதாக மடைமாற்றவோ கையாளவோ கற்றுக்கொள்வார்கள்.

கத்தினால் பதில் இல்லை

குழந்தைகள் நம்மிடம் கோபப்பட்டால் நாமும் அவர்களிடம் பதிலுக்குக் கோபப்படக் கூடாது. நாம் அமைதியாக இருப்பதைப் பார்த்து குழந்தைகளே அமைதியாகிவிடுவார்கள். “நீ கோபப்பட்டுக் கத்தினால் பதில் சொல்ல முடியாது” என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கும் குழந்தைகள் கோபப்படத்தான் செய்வார்கள். ஆனால், நாம் தொடந்து இப்படிச் செய்வதால், கோபப்பட்டுக் கத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள். கோபப்பட்டு உடனுக்குடன் வினையாற்றுவதால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பொறுமையாக அவர்களுக்கு விளக்கலாம். ஆத்திரப்பட்டுச் செய்கிற செயல்களால் எதையும் சாதிக்க முடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சிறுவயது முதலே கோபத்தைக் கையாளத் தெரியாமல் வளரும் குழந்தைகள் வளர்ந்த பிறகும் அதைத் தொடர்வார்கள். ஆண்கள் பிறரை அடிப்பதன் மூலமும் திட்டுவதன் மூலமும் கோபத்திலிருந்தோ அந்தச் சூழலிலிருந்தோ வெளியேறிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படியில்லை. ஆண்கள் என்றால் கோபப்படலாம், பெண்கள் என்றால் அடங்கி நடக்க வேண்டும் எனச் சிறுவயது முதலே அவர்களுக்குச் சொல்லித்தரப்படுவதால் பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். இயல்பான உணர்வை இப்படி அடக்கிவைப்பதால் அதை யாரிடம், எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். சத்தம்போட்டுக் கத்துவார்கள். சில நேரம், “இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நான் வீட்டை விட்டுப் போயிடுவேன்” என உணர்வுபூர்வமான மிரட்டலையும் கையிலெடுப்பார்கள். குழந்தைகளாக இருந்தால் பெற்றோரையும் வளர்ந்தவர்கள் தங்கள் காதலரிடமும் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தலாம்.

“கோபத்தைக் கட்டுப்படுத்தலாமே தவிர, அடக்கிவைக்கக் கூடாது. அதுதான் வெவ்வேறு வடிவில் வன்முறையாக வெளிப்படும். குழந்தைகள் கோபப்படும்
போது அவர்களிடம் ஸ்பாஞ்ச் பந்தைக் கொடுத்து அழுத்தச் சொல்லலாம். அப்படி அழுத்துவதன் மூலம் ஆக்ரோஷம் கொஞ்சம் மட்டுப்படும். யார் மீதாவது அவர்கள் கோபத்தில் இருக்கும்போது அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை ஒரு காகிதத்தில் எழுதச்சொல்லுங்கள். கோபம் வடிந்துவிட்ட பிறகு அதைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். நாம்தானா இப்படியெல்லாம் எழுதினோம் என அவர்களே வெட்கப்படக்கூடும். அந்த வார்த்தைகளை அப்படியே பேசியிருந்தால் என்னவாகியிருக்கும் எனச் சொல்லி, கோபத்தின் தீய விளைவை எடுத்துச் சொல்லலாம்” என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

ஆமைபோல் இருக்கலாம்

தான் வெளிநாட்டில் உள்ள பள்ளி ஒன்றுக்குச் சென்றிருந்தபோது நடந்த நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார். “அந்தப் பள்ளியில் ‘கோப மூலை’ (Anger Corner) என்று ஒரு இடம் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருக்கிறது. எந்தக் குழந்தைக்குக் கோபம் வந்தாலும் அங்கு சென்று  நிற்க வேண்டும். அங்கே ஒரு ஆமையின் படம் இருக்கும். ஆபத்து நேரத்தில் ஆமை எப்படித் தன்னுடலை ஓட்டுக்குள் மறைத்துக்கொள்ளுமோ அதுபோல நாமும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தவே ஆமையின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். கோபம் முதலில் நமக்குத்தான் ஆபத்து. அதனால் நாமும் அந்த நேரத்தில் நம் புலன்களை அடக்கி, எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்பதால் குழந்தைகள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக நிற்பார்கள். கோபம் குறைந்த பிறகு வகுப்புக்குச் செல்வார்கள். கோபத்தின் உச்சநிலைதான் வன்முறை என்பதால், குழந்தைகளுக்குக் கோபத்தைச் சரியான விதத்தில் கையாள கற்றுக்கொடுத்தாலே போதும்” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

எல்லா இடத்திலும் தனக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கும் குழந்தைகள் அது கிடைக்காதபோது கோபப்படலாம். வீட்டில் பெற்றோர் கோபப்பட்டு அடிப்பது, கத்துவது போன்றவற்றைப் பார்த்து வளரும் குழந்தைகளும் எளிதில் கோபப்படக்கூடும். சிறுவயது முதலே பாசம் கிடைக்காமல் வளரும் குழந்தைகளும் ஏதோவொரு வகையில் வன்முறைக்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளும் வளர்ந்த பிறகு வன்முறையைக் கையிலெடுக்கக்கூடும். தன்னம்பிக்கை குறைவாக உள்ள குழந்தைகள் எப்படியாவது தங்கள் இருப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அதிகமாகக் கோபப்படலாம். கோபப்படும் குழந்தைகளைத் தண்டிப்பதும் தனிமைப்படுத்துவதும் நல்லதல்ல. கோபப்படுவதால் எதுவும் நடக்காது என்பதைச் சொல்வதோடு, கோபப்படாமலோ அல்லது அதைச் சரியாகக் கையாண்டாலோ அவர்களுக்குச் சிறு சிறு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம். வீட்டிலும் பள்ளியிலும் இதைச் செயல்படுத்தும்போது வளரிளம் பருவத்தில் வன்முறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

(நிஜம் அறிவோம்…)

-பிருந்தா சீனிவாசன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE