நானொரு மேடைக் காதலன் - 13

By நாஞ்சில் சம்பத்

அரசியல் பொழிவாளன் என்ற அடையாளம் அழுத்தமாக என் மீது விழுந்தாலும் அரசியல் செய்திகளை நியாயப்படுத்துவதற்கு இலக்கியக் காட்சிகளை அழகுபட விவரிப்பதை நாள் தவறாமல் பின்பற்றினேன். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சொற்பொழிவாளன் என்ற தகுதியை சின்ன வயதில் பெற்றாலும் ஒவ்வொரு மேடையிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற முனைப்பும் நினைப்பும் எப்போதும் ஒரு விளக்கைப் போல் என்னில் எரிந்துகொண்டே இருக்கும். கண்ணைப் பறிக்கிற விதவிதமான நகைகளை நவநவமாக அடுக்கி வைத்திருக்கும் நகை மாளிகை போல் விதவிதமான சொற்பொழிவாளர்களின் சொர்க்கமாக அந்த நாளில் திராவிட முன்னேற்றக்கழகம் இருந்தது. 

ஜனரஞ்சகமான சொற்பொழிவாளர்களுக்கு  மத்தியில் என்னை நான் தற்காத்துக்கொள்ள இன்பத் தமிழ் இலக்கியங்களே எனக்குத் துணை புரிந்தன. அரசியல் மேடைகளில் இலக்கிய நடையைக் கைக்கொண்டதால்தான் இலக்கிய மேடைகளும் என்னை அங்கீகரிக்கத் தொடங்கியது. கட்சி மேடையில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், “உன்னுடைய தமிழ் நன்றாக இருக்கிறது தம்பி. நாங்கள் நடத்துகிற இலக்கிய விழாவுக்கு வர வேண்டும்” என்று ஈரோடு சி.கே.சி. அறக்கட்டளையில் இருந்து அழைப்பு வந்தது. ஆன முதலில் அதிகத்தை அன்னைத் தமிழுக்கு வாரிச் செலவழிக்கும் குடும்பம் சி. கே. சி. குடும்பம். இந்தியா முழுவதும் இருக்கிற வர்த்தகர்கள் கைத்தறித் துணி வாங்கவும் மஞ்சள் வாங்கவும் வந்து குவிகிற பெருநகரம் ஈரோடு. தன்மானக் கொள்கைகளைத் தரணிக்குத் தந்த தந்தை பெரியார் பிறந்த பெருமைக்குரிய ஈரோடு, அல்லவை தேயவும் அறம் பெருகவும் சிந்திக்கிறவர்கள் நிரம்பி வாழுகிற ஊர். மேடைப் பேச்சை எடை போட்டு துல்லியமாகக் கணிக்கின்ற வித்தகர்களும் இலட்சியவாதிகளும் நெருங்கி வாழுகிற ஈரோடு நகரில் இன்பத் தமிழுக்கு விழா எடுக்கின்ற சி. கே. சி. அறக்கட்டளையில்
‘அந்த நாள் எந்த நாள்’ என்ற தலைப்பில் பேச அழைப்பு வந்த நாள் என்னைப் பொறுத்தவரை தித்திப்பான நாள்தான்.

“அறிவியல் உலகம் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் அரங்கேற்றி வருகின்றது. புவியெல்லாம் புதுமைகள் பூத்துக் குலுங்க புதுக்கோலம் போடுகின்றது. உண்ணுகிற உணவில் உடுத்துகிற உடையில் எண்ணிப் பார்க்க முடியாத மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. விண்ணுக்கும் மண்ணுக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. நாகரிக நங்கை புதிய வடிவம் பூண்டு காட்சி தருகிறாள். பாதைகள் விரிகின்றன. பயணங்கள் எளிதாகின்றன. நட்டு வளர்த்த மாங்கனியை விட ஒட்டு மாங்கனியின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. காலம் தோலுரிக்க ஏற்பட்டு வருகிற மாற்றங்களுக்கு முகம் கொடுப்பதற்கு அகிலம் ஆயத்தமாகி விட்டது. 

விட்டில் பூச்சிகளை வியப்பாகப் பார்த்த நமக்கு விமானம் சாதாரணமாகிவிட்டது. மனிதர்களுக்குத் தேவையும் பசியும் அதிகமாகிவிட்டது. இந்த நாளில் நடப்பதையே நொடிப்பொழுதில் கடந்து விடுகிற நாம் அந்த நாளைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கச் சொன்ன சி. கே. சி அறக்கட்டளை நிர்வாகிகளைத் தலையால் வணங்குகிறேன். தமிழால் ஆதரிக்கிறேன்’’ என்று நான் ஆரம்பித்தபோது கற்றறிந்த சபை என் கைக்கு வந்துவிட்டதாக மகிழ்ந்தேன். எனக்கு முன்பு பேராசிரியப் பெருமாட்டிகள் புனிதா ஏகாம்பரம், முனைவர் விஜயசுந்தரி, அருள்திரு ஜெகத் கஸ்பர் ஆகியோர் ஆற்றிய உரையில் அவை பண்பட்டு இருந்தது எனக்கு வியப்பாகி விட்டது. 

  “இந்த நாளில் நம் மீது பூட்டப்பட்டு இருக்கிற அடிமைச் சங்கிலிகளை, நாம் பூண்டிருக்கிற கோலங்களை நாம் சுமந்துகொண்டு இருக்கிற சுமைகளை, நம் மீது படிந்திருக்கிற அழுக்குகளை, நம் மீது திணிக்கப்பட்டு இருக்கிற ஆதிக்கத்தின் கொடூரங்களை, மன்றில் இருந்த நாம் மண் தரையில் அமர்ந்திருக்கும் சோகத்தை எல்லாம்  நீங்கள் ஒருகணம் உள் வாங்கிக்கொண்டால் அந்த நாள் வாழ்ந்த வாழ்க்கையின் மாட்சி புரியும். காட்சி உங்கள் கண்ணுக்குள் விரியும். அந்த நாளில் நாகரிகம் நடவு செய்த காவிரிக் கரையில் காவிரிப்பூம்பட்டினத்தில் விலைமதிக்க முடியாத பொருட்களைக் கடை விரித்து கடல் கடந்து  வந்த வணிகர்களுக்கு விற்பனை செய்தார்கள் தமிழக வணிகர்கள். 

‘வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் 
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் 
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய’ 
என்ற பத்துப்பாட்டில்  ஒரு பாட்டாம் பட்டினப்பாலை பாட்டைப் படிக்கிறபோது மயக்கமே வருகிறதல்லவா..? யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலனையும் வெல்லும் காலாட்படையும் உனக்கு இருப்பதா பெருமை; அறத்தை அறனாக உடையது அல்லவா, உன் சிறப்புக்குச் சிறப்பு. 

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்று பாண்டிய மன்னன் நன்மாறனைப் பார்த்து நேருக்கு நேராகச் சொன்னவன் அல்லவா தமிழ்ப்புலவன் மதுரை மருதன் இளநாகன். அடிமைத் தனத்தையும் அண்டிப் பிழைப்பதையும் ஆகா ஓகோ என்று புகழ்வதையும் கேட்டு பூரித்துப் போகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சாபக்கேடு. சரித்திர அவமானம். ஆனால், புகழுக்கு மயங்காமல் பழிச் சொற்களைக் காது கொடுத்தும் கேட்காமல் அல்லவா அந்த நாளில் பார் ஆண்டார்கள். 

‘வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே’ என்று படிக்கிறபோது அந்த நாள் மன்னர்களின் மனமும் குணமும் தெரிகிறதே... தமிழுக்கு இன்று நாவினில், நாம் வழிபடும் கோயிலில், வீட்டில், வீதியில், கடையில், வங்கியில், கோட்டையில், கொலு மண்டபத்தில், கொற்றத் தவிசில் எங்குமே  இடமில்லை. 

தமிழை எண்ணிப் படித்தவனையும் எடுத்துப் படித்தவனையும் ஏளனம் செய்வதற்கே ஒரு கூட்டம் இருக்கிறதே. அந்த நாளில் முரசுக் கட்டில் புனிதம் வாய்ந்தது. வழி நடந்த களைப்பால் சேர நாட்டு மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையின் அரண்மனைக்கு வந்த தமிழ்ப்புலவர் மோசிக்கீரனார் முரசு கட்டிலில் படுத்துறங்கிவிட்டார். எடுத்திருக்க வேண்டும் வாளை மன்னவன். யாரும் செய்யத் துணியாத குற்றத்தைச் செய்த புலவன் தலையைத் துண்டித்து இருக்க வேண்டும். வாளெடுக்க வேண்டிய மன்னன் கவரியைக் கையில் எடுத்தான். புலவன் கற்ற தமிழை மதித்து கவரி வீசினான் மன்னன் என்றால், தமிழுக்கு அன்று கிடைத்த முதல் மரியாதை அல்லவா?” என்றபோது எழுந்த கைத்தட்டலை வரவு வைத்துக்கொண்டேன். “மயிர் நீத்தால் வாழாத கவரி மான் போல மானத்துக்கு ஊனம் வந்தால் அவன் மன்னவனே ஆனாலும் உயிர் துறந்தார்கள் அந்த நாளில். ‘பகைவரோடு போர் செய்து தோற்றுப் புறமுதுகிட நேர்ந்தால் என் மனைவி என்னை விட்டுப் பிரியட்டும்’ என்றான் ஒரு மன்னன். 

 ‘மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் கூட்டம் என்னைப் பாடாதொழியட்டும்’ என்றான் ஒரு மன்னன். வானத்தை இழந்தாலும் வஞ்சினத்தையும் வைராக்கியத்தையும் ஒருக்காலும் இழக்கச் சம்மதிக்காத ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் தலையானங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் வரலாறு படைத்த நாளல்லவா அந்த நாள். 

ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாமல் முகத்துக்கு முகம் பார்க்காமல் நட்பு என்ற நாகரிகத்தை வளர்த்த பெருமை நமக்கின்றி வேறு யாருக்கு உண்டு. உளம் நிறைந்த நண்பன் அதுவும் முடி சூடிய நண்பன் உயிர் துறந்தான் என்ற செய்தி செந்தீ எனக் காதில் விழ நண்பன் இல்லாத உலகத்தில் நமக்கென்ன வேலை எனக்கேட்டு வடக்கிருந்து உயிர் நீத்த கபிலனும் பிசிராந்தையாரும் வாழ்ந்த நாள் அந்த நாள். ஊர்ந்து வந்த தேரை முல்லைக்கொடிக்கும் குளிரில் நடுங்கிய தோகை மயிலுக்குப் பொன்னாடையும் போர்த்தி அழகு பார்த்த பேகனும் பாரியும் வாழ்ந்த நாடு எங்கள் நாடு. கேட்டுக்கொடுத்தால் கொடை; கேட்காமல் கொடுத்தால் அதற்குப் பெயர் கொடைமடம். அப்படிப்பட்ட கொடைமடம் கொலுவிருந்த நாள் அந்த நாள். பழனி மலையை ஆண்ட பேகன் மனம் மாறினான். மகாராணி கண்ணகியை மறந்தான்.மன்னன் தடுமாறினான். தடம் மாறினான். மவுனமாகத்தானே இருக்கும் உலகம். ஆனால், மவுனம் உடைத்து ‘ வாயில் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட இன்னா இருந்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்’ என்று மன்னனைப் பார்த்துச் சொல்ல, மன்னவன் தவறை உணர்த்த அஞ்சாமல் எடுத்துரைத்ததும் அந்த நாள்தான். நிலமே இடம் பெயர்வதாக இருந்தாலும் நன்றி கொன்றவனுக்கு நாதி இல்லை. ‘ நிலம்புடை  பெயர்வதாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென’ சங்க காலம் என்ற தங்கக்காலத்திலேயே நன்றியைப் போற்றிய நாள் அந்த நாள். 

நீலக் கடலின் மீது ஆதிக்கம் செலுத்திய நாள் அந்த நாள். இமயத்தின் உச்சியில் புலிக்கொடியைப் பொறித்த நாள் அந்த நாள். கனக விஜயன் தலையில் கல்லேற்றி கண்ணகிக்குப் படிமம் சமைத்த நாள் அந்த நாள். பூ ஒன்று புயலானது போல் அரண்மனையில்  சென்று கணவனுக்காக ஒரு பெண் நீதி கேட்ட நாள் அந்த நாள்’’ என அடுக்கிக்கொண்டே சென்றேன். கைத்தட்டிக்கொண்டே இருந்தார்கள்.  “அந்த நாளைப் படைக்க இந்த நாளில் சபதமேற்போம்’’ என்று சொல்லி முடித்தேன். அந்த நாள் பேச்சை இந்த நாளிலும் ஈரோட்டில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

(இன்னும் பேசுவேன்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE