என்றென்றும் ஏழுமலையான்! 12: ஏழுமலையானுக்காக தங்களை அர்ப்பணித்த ஜீயர்கள்

By என். மகேஷ்குமார்

வைகாணச ஆகம சாஸ்திரத்தைத் தோற்றுவித்த இராமானுஜரின் வழியில் இம்மி பிசகாமல் வாழ்ந்து வருபவர்கள் ஜீயர்கள். அரங்கனின் சேவைக்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த ஜீயர் சுவாமிகளின் மேற்பார்வையில்தான், திருமலையில் இன்றும் தமிழ் கலாச்சார அடிப்படையில் திருவேங்கடவனுக்கு திருப்பள்ளி எழுச்சி முதற்கொண்டு, ஏகாந்த சேவை வரைக்கும் நடைபெறுகிறது.

ஜீயர்கள் திருப்பதி கோயிலின் வைதீக தர்ம கர்த்தாக்களாகச் செயலாற்றி வருகின்றனர். அரங்கனுக்கு சேவை செய்வது மட்டுமல்லாது, அரங்கனின் பக்தர்களுக்கும் அன்றாடம் தங்களது மடங்களில் அன்னதான சேவையும் புரிந்து வருகின்றனர்.

திருவேங்கடவன் 108 திவ்ய தேச திருத்தலங்களில் நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த நிலையில் விதவிதமாய் காட்சியளிக்கிறார் என்பது வைணவர்களின் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையான் கோயில் திருப்பணிகளுக்காக இராமானுஜர் பெரிய ஜீயர் மடத்தை நிறுவினார். ‘ஒழிவில் காலமெல்லாம்...’ எனும் நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடலுக்கேற்ப சுவாமிக்குக் காலமெல்லம் ஓய்வின்றி அடியவராய் இருந்து திருத்தொண்டாற்ற வேண்டும். இதுவே ஜீயர்களுக்கு இட்ட பணியாகும்.

கேள்வியப்பர்கள் எனப்படும் ஜீயர்கள்

ஜீயர்கள் கேள்வியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஏழுமலையான் கோயில், திருப்பதி கோவிந்தராஜர், கோதண்டராமர் கோயில் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆகியவற்றின் ஆகமவிதிகள் மாறாமல் அன்றாட கைங்கர்யங்களை செய்விப்பதே ஜீயர்களின் அடிப்படைத் தொண்டாகும். இவற்றில் எங்காவது ஆகம விதிமீறல் நடந்தால் அதைக் தட்டிக்கேட்டுத் திருத்தும் பொறுப்பும் ஜீயர்களுக்கு உண்டு. அதனால்தான் பெரிய ஜீயர், ‘கேள்வியப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார். ஆகம சாஸ்திரத்தின் படி கோயில்களில் அனைத்து பூஜைகளும், நைவேத்திய சமர்ப்பணமும், உற்சவங்களும் நடைபெற வேண்டும். என்பதற்காகவே அனைத்து வைணவ கோயில்களிலும் ஜீயர் முறையை அமைத்தார் இராமானுஜர். திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் முன்பு பெரிய ஜீயர் மட்டுமே இருந்தார். 400 ஆண்டுகளுக்கு முன்பு மணவாள மாமுனிகள் இங்கு ஜீயராக இருந்தபோது கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர், கோதண்டராமர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட இடங்களில் திருமலையில் நடப்பது போன்றே அதே ஆச்சாரத்துடன் பூஜைகள் ஆகம விதிகளின் படி நடக்க வேண்டும் என எண்ணி, இளைய ஜீயரை நியமனம் செய்தார். அதுமுதல் திருப்பதியில் பெரியவர், இளையவர் என இரண்டு ஜீயர்கள் பொறுப்பாற்றி வருகிறார்கள்.

ஜீயரின் பொறுப்புகள்

எப்போதும் செல்வச் செழிப்புடன் திகழும் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சாவிகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் பெரிய ஜீயர் சுவாமிகளிடம்தான் உள்ளது. இராமானுஜர் மூன்று முறை திருமலைக்கு வந்துள்ளார். முதல் முறை வந்தபோது ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் ஆகியவைகளைப் பிரதிஷ்டை செய்தார். அடுத்தமுறை வந்தபோது சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜர் சிலையைக் கொண்டு வந்து, திருப்பதி கோவிந்த ராஜர் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். தனது 95-வது வயதில் மூன்றாவது முறையாக திருமலைக்கு வந்த இராமானுஜர், ஜீயரை நியமனம் செய்து திருப்பதி கோயிலில் ஆகம சாஸ்திர முறையை முறைப்படுத்தினார். நைவேத்தியங்கள் செய்யும் முறையையும், அதனைப் பெருமாளுக்கு படைக்கும் முறையையும் அப்போது ஏற்படுத்திய இராமானுஜர், சுவாமிக்குப் படைக்கும் நைவேத்தியத்தையே ஜீயர் சுவாமிகள் தனது தினசரி உணவாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் கட்டளையிட்டார்.
திருமலையில் பூக்கும் பூக்கள் எல்லாம் ஏழுமலையானின் திருப்பணிகளுக்காக மட்டுமே எனும் உத்தரவை பிறப்பித்ததும் இராமானுஜரே. ஏழுமலையானின் காணிக்கை நகைகளையும் பாதுகாக்கும் முறையையும் இராமானுஜர் தோற்றுவித்தார். எவ்விதப் பற்றும் இன்றி துறவறம் பூண்ட ஒருவரே ஜீயர் பதவியை வகிக்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டார்.

சாவிகள் மூன்று

திருமலையில் பேடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள பெரிய ஜீயர் மடத்தில்தான் ஏழுமலையானின் கோயில் சாவிகள் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்படும். தினமும் அதிகாலை ஜீயர் சுவாமிகளின் சிஷ்யர் ஒருவர் கோயிலின் சாவிகளைக் கொண்டு செல்வார். இதேபோன்று தேவஸ்தானம் சார்பில் ஊழியர் ஒருவர் மற்றொரு சாவியைக் கொண்டு வருவார். யாதவர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு சாவியைக் கொண்டு வருவார். இந்த மூவரும் கொண்டு வரும் 3 சாவிகளின் உதவியால்தான் தங்க வாசல் கதவுகளைத் திறக்க முடியும். அதேபோல் இரவு, ஏகாந்த சேவை முடிந்த பின்னர், இதே 3 சாவிகள் கொண்டு பூட்டு போடப்பட்டு, சீல் வைக்கப்படும்.

தேவஸ்தானத்தினர் விமான கோபுர முத்திரை சீல் வைப்பார்கள். ஜீயர்கள் அனுமன் முத்திரை கொண்ட சீல் வைப்பார்கள். மறுநாள் இந்த முத்திரை ஊழியர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டு கோயில் திறக்கப்படும். இதேபோன்று, பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல் பணம் பரகாமணிக்குக் கொண்டு செல்லும்போதும் ஜீயரின் பிரதிநிதி, தேவஸ்தான பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும். காணிக்கைகள் கணக்குப் பார்த்து வங்கியில் டெபாசிட் செய்வது வரை பெரிய ஜீயரின் பிரதிநிதி ஒருவர் உடன் இருப்பார்.

பேடி ஆஞ்சநேயர் கோயில்

திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு நேர் எதிரே இருக்கிறது பேடி ஆஞ்சநேயர் கோயில். இதன் வலது புறம் பெரிய ஜீயர் மடம் அமைந்திருக்கும். இந்த மடம் இங்கு இப்படி அமைக்கப்பட்டதற்கான காரணத்தை நம்மிடம் விளக்கினார் பெரிய ஜீயர். “இராமானுஜர் இந்த மடத்தை அமைத்து, சீதாதேவி , ராமர், லட்சுமணரின் சிலைகளை இங்கு பிரதிஷ்டை செய்தார். அதில் அனுமன் கிடையாது. இதுதான் இங்கு சிறப்பாகும். அதற்குப் பதில் எதிரே உள்ள பேடி ஆஞ்சேநேயர் கோயில் உள்ளது. அதாவது, ராமருக்கு அனுமன் செய்த சேவை போன்று, திருவேங்கடமுடையானுக்கு ஜீயர்கள் அவர்களது வாழ்வை அர்ப்பணித்து தொண்டாற்ற வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும். ஜீயர் மட்டுமே மூலவரின் சன்னிதிக்குச் சென்று, அர்ச்சனை ஆராதனைகள் செய்யலாம். தீப, தூப, நைவேத்திய சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். சாத்துமரையையும், திருமஞ்சன சேவைகளையும் தங்களது மேற்பார்வையில் நடத்தலாம் எனவும் இராமானுஜர் கட்டளையிட்டுள்ளார். இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்றளவும் இம்மி பிசகாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் இராமானுஜர். ஆதலால், அவரின் நட்சத்திரத்தைப் போற்றி வணங்கும் விதத்தில் திருமலையில் சித்திரை மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். தனது அடியவனுக்கு பெருமாளே நடத்தும் உற்சவமாக இது கருதப்படுகிறது.” என்கிறார் ஜீயர் சுவாமிகள்.

திருமலராய மண்டபம்

ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள கொடி மரத்தின் இடது பாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தின் பெயர் திருமலராய மண்டபம். இது 1473-ல், விஜய நகரப் பேரரசரான திருமலை ராயர் காலத்தில் கட்டப்பட்டது. பிறகு இந்த மண்டபம் 16-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. பிரம்மோற்சவ விழாக்களுக்கு கொடியேற்றம் நடக்கும்போது உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்பர் சுவாமிகள் கொடியேற்ற நிகழ்ச்சியைக் காணும் விதமாக இந்த மண்டபத்தில்தான் எழுந்தருளல் செய்யப்படுவார்கள்.

பெரிய ஜீயர் மாயவரத்தின் மைந்தர்

தற்போது திருமலையில் பெரிய ஜீயராக பதவி வகிக்கும் சடகோபன் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் (64) மாயவரத்தில் பிறந்தவர். தனது 6 வயதிலேயே ஆன்மிக நாட்டம் உள்ளவராகத் திகழ்ந்ததால், 1960-ம் ஆண்டே திருமலைக்கு வந்து வேதபாட சாலையில் வேதங்களைப் படித்தார். நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், ‘வாத்தியார் சுவாமிகள்’ என்றழைக்கப்பட்ட பிரபல வித்வான் யமுனாச்சாரியார், மற்றும் டி.ஏ கோபாலாச்சாரியார், கே. சுந்தராச்சாரியார்களிடம் 10 வருடங்கள் வேதம் படித்தார். இராமானுஜர் பிறந்த பெரும்புதூரில் உள்ள உபய வேதாந்த ஆச்சாரிய பீடம் சார்பில் திவ்ய பிரபந்தத்தில் தங்க மெடல் பெற்றார். 1970-ல் திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேதங்களைப் பயிற்றுவிக்கும் ஆசானாகப் பணியில் சேர்ந்தார். 1981-ல், திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் நிவாச மங்காபுரத்தில் நாலாயிரம் திவ்யப் பிரபந்த ஆசானாக நியமிக்கப்பட்டார். அங்கு 24 ஆண்டுகள் பணியில் இருந்த இவர், தான் படித்த திருமலை வேதபாட சாலையின் பண்டிதராகவும் ஓராண்டு காலம் பணி புரிந்தார்.
2004-ல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இளைய ஜீயராக பட்டத்துக்கு வந்தார். பெரிய ஜீயராக இருந்த ரங்க ராமானுஜர் உடல் நலம் குன்றி காலமானதால், 2010-ல் சடகோபன் இராமானுஜர், பெரிய ஜீயராக பட்டத்துக்கு வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE