பதறும் பதினாறு 12: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!

By பிருந்தா எஸ்

குழந்தைகளின் முரட்டுத்தனத்தையும் மூர்க்கத்தையும் பருவ வயதின் மாற்றங்களில் ஒன்றாக எளிதில் கடந்துவிட முடியாது. தருண், சித்தார்த் இருவரது கதையும் அதற்கு உதாரணம். ஆனால், இருவரது மூர்க்கத்துக்கும் அதன் தொடர்ச்சியாக வெளிப்பட்ட வன்முறைக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். குடும்பம், பள்ளி, சமூகம், ஊடகங்கள் போன்றவற்றுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கிறது.

இயற்கையின் பொதுவான விதிதான் இதிலும் செயல்படுத்தப்படுகிறது. யாரெல்லாம் மிக பலவீனமாக இருக்கிறார்களோ அவர்களே மிக எளிதாக வன்முறைக்கு இரையாக்கப்படுகிறார்கள். மன ரீதியாக பலவீனமாக இருக்கிற குழந்தைகளும் வன்முறைக்கு இலக்காகக்கூடும். வலு வான குடும்பப் பின்னணி இல்லாத குழந்தைகளும், சிதைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும்கூட வன்முறைக்கு ஆளாக்கப்படலாம்.

ஒரு குழந்தை வன்முறையைக் கையிலெடுப்பது எத்தனை ஆபத்தானதோ, ஒரு குழந்தை வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும் அதே அளவுக்கு ஆபத்தானதே. அதைத் தடுப்பதிலும் வளர்ப்பதிலும் நம் குடும்ப அமைப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. காரணம், இந்தியக் குடும்ப அமைப்பு, குழந்தைகளை மையமாக வைத்துச் செயல்படுகிறது. பெற்றோர்தான் குழந்தையின் முதல் ரோல்மாடல். பெற்றோர் நடந்துகொள்ளும் விதத்தை வைத்துத்தான் குழந்தை இந்தச் சமூகத்தை அணுகும், தன் ஆளுமையை வளர்த்துக்கொள்ளும்.

வேண்டாமே உதாசீனம்

குழந்தைக்கு மன ரீதியான அரவணைப்பைக் குடும்பம் அளிக்க வேண்டும். எது நடந்தாலும் சொல்வதற்கு எனக்கு வீடு இருக்கிறது, பெற்றோர் நான் சொல்வதைக் கேட்டு அதற்கு பதில் சொல்வார்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைக்குக் குடும்பம் ஏற்படுத்த வேண்டும். எது தவறு, எது சரி என்று குழந்தைக்குச் சொல்வதைவிடப் பெற்றோர் அதன்படி வாழ வேண்டும். அதை விட்டுவிட்டு, சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் இருக்கும்போது எதைக் கடைப்பிடிப்பது எதைத் தவிர்ப்பது எனக் குழந்தை குழம்பிவிடும்.

பள்ளியிலோ வெளியிலோ விளையாடும்போது தான் தாக்கப்பட்டதைப் பெற்றோரிடம் சொன்னால் தனக்கு அரவணைப்பும் தீர்வும் கிடைக்கும் எனக் குழந்தை நம்ப வேண்டும். “நீ ஏதாவது பேசியிருப்ப, சும்ம இருக்கறவனை யாராவது அடிப்பாங்களா? அவங்களோட சேர்ந்து விளையாடாதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது? நான் சொல்றதைக் கேட்கலைன்னா இப்படி அடிவாங்கிட்டு வந்து நிக்க வேண்டியதுதான்” என்று சொன்னால் நிச்சயம் அந்தக் குழந்தை உடைந்துபோகும். வெளியே தனக்கு நேர்ந்த அவமானத்தை வீட்டில் சொன்னால் ஆறுதலுக்கு பதில் திட்டுதான் கிடைக்கும் என்றால், அந்தக் குழந்தை அடுத்தமுறை வீட்டில் எதையும் சொல்லாது. தன் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறையை அமைதியாக ஏற்றுக்கொள்ளும். வீட்டில் சொன்னதுபோலத் தன் மீது தவறு இருக்கக்கூடும் என அந்தக் குழந்தை நம்பத்தொடங்கும். அல்லது தன் மீது விழும் அடியை ஏற்றுக்கொள்வதுதான் தன் நிலை என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ளும்.

பெற்றோர் பாதை மாறினால்?

பெற்றோர் இருவரும் இணக்கமாக இல்லாத வீடுகளில் வளரும் குழந்தைகள் ஒன்று வன்முறையைக் கையில் எடுக்கலாம் அல்லது வன்முறைக்கு ஆளாக்கப்படலாம். அம்மாவை மரியாதைக் குறைவாக நடத்துகிற, அடிக்கிற அப்பாவைப் பார்த்து வளரும் குழந்தைகள் அடிப்பது தவறல்ல என நினைக்கலாம். பிறரைத் தரக்குறைவாகப் பேசுவது இயல்பு என நினைத்து அதை மற்றவர்களிடம் செயல்படுத்தலாம். அல்லது அடுத்தவர் அடித்தாலோ திட்டினாலோ அம்மாவைப் போல அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கலாம். இந்த இரண்டு அணுகுமுறையுமே குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

வீட்டுக்கு அடுத்தபடியாகக் குழந்தையின் ஆளுமையைத் தீர்மானிப்பதில் பள்ளிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பள்ளியில் நண்பர்களும் மற்றவர்களும் செய்பவற்றைப் பார்க்கும் குழந்தை தானும் அப்படியே செய்ய முயலலாம். வீடு சரியாக இல்லாதபோது வெளியில் கிடைக்கிறவற்றைக் குழந்தை அப்படியே பிடித்துக்கொள்ளும். பதின் பருவக் குழந்தைகளின் ஆளுமையை ‘பியர் பிரஷர்’ எனப்படும் தோழமையால் உருவாக்கப்படும் அழுத்தமும் பாதிக்கக்கூடும். தங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறவர்கள் செய்வதைப் பார்த்துத் தானும் அப்படியே செய்ய முற்படும். அப்படிப் பெற்றுக்கொள்ளும் குணங்களில் வன்முறைக்கு முக்கிய இடமுண்டு. அவர்களைப் போலத் தானும் நடந்துகொள்ளவில்லை என்றால் எங்கே தன்னைக் குழுவிலிருந்து விலக்கிவிடுவார்களோ என்ற அச்சமும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

வினையாகும் விளையாட்டு

குழந்தைகளின் மனத்தில் வன்முறையை விதைப்பதில் காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. விளம்பரம், திரைப்படம் என சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் நாம் காணும் பலவும் குழந்தைகளின் மனத்தில் வன்முறையை விதைப்பதாகவே இருக்கின்றன. தற்போது சின்னத்திரை நாடகங்களில்கூட வன்முறை மலிந்துகிடக்கிறது. குடும்பக் கதைகளைப் பிரதிபலிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நாடகங்களில்கூட கொலை செய்வதும் துப்பாக்கியைப் பயன்படுத்துவதும் காட்டப்படுகின்றன. அம்மாக்கள் இதுபோன்ற மெகாதொடர்களைப் பார்க்கிறபோது குழந்தைகளும் அவற்றைப் பார்க்கத்தான் செய்வார்கள். விவரம் புரியாத வயதிலேயே வன்முறை தவறல்ல என்ற கருத்து இதனால் அவர்களின் மனத்தில் ஊன்றப்பட்டுவிடக்கூடும். ஓரளவு வளர்ந்த குழந்தைகள் இணையத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்கின்றனர்.

பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. அவற்றில் கொலை செய்வதும், ஆயுதங்களால் எதிராளியைத் தாக்குவதும் சகஜம். அதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கிவிடும் குழந்தைகள் மிக எளிதாக வன்முறையைக் கையிலெடுப்பார்கள்.
அமைதியும் பொறுப்பும் நிறைந்தசித்தார்த், தன் தங்கையை அடித்ததற்குக் காரணம், விபரீதத்தை விதைக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்தான் என்பது அவனுடைய பெற்றோருக்குப் பிறகுதான் புரிந்தது. தொடர்ச்சியாக அதுபோன்ற விளையாட்டுகளை விளையாடியவன், அவற்றைத் தன் தங்கையிடம் செயல்படுத்திப் பார்த்திருக்கிறான். விளையாட்டில் எதிராளிக்கு எவ்வளவு காயம்படுகிறதோ அதற்கேற்பதான் வெற்றியும் மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை சித்தார்த் நிஜ வாழ்க்கையில் முயன்றிருக்கிறான். அவனுடைய பெற்றோர் விளையாட்டுக்கும் நிஜத்துக்குமான வேறுபாட்டை பொறுமையாகச் சொல்லி அவனுக்குப் புரியவைத்தனர்.

நடத்தையில் ஏற்படும் மாற்றம்

நம் கவனத்துக்கு வருகிற வன்முறை குணத்தையோ வன்முறைக்குக் குழந்தைகள் ஆளாவதையோ கண்டுபிடித்து, குழந்தைகளை அதிலிருந்து வெளிவர வைத்துவிட முடியும். ஆனால், நம் பார்வைக்கு வராதவற்றை என்ன செய்வது? அதற்கான வழியையும் குழந்தைகளே வைத்திருப்பார்கள். அவர்களைக் கூர்ந்து கவனித்தாலே அதைக் கண்டுபிடித்துவிட முடியும். வன்முறைக்கு ஆளாகிற அல்லது வன்முறையைச் செயல்படுத்துகிற குழந்தைகளிடம் சட்டென நடத்தை மாற்றம் ஏற்படும். இயல்புக்கு மாறாக எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவார்கள். சில நேரம் தகுந்த காரணங்கள் ஏதுமின்றி கோபப்படுவார்கள். கையில் கிடைத்தையெல்லாம் போட்டு உடைப்பார்கள் அல்லது அப்படிச் செய்துவிடுவேன் என மிரட்டுவார்கள். சுற்றியிருக்கிறவர்களை எரிச்சலுடனும் உதாசீனத்துடனும் அணுகுவார்கள். ஏமாற்றம், வெறுப்பு, கோபம் ஆகியவற்றைக் கையாளத் தெரியாமல் வெடிப்பார்கள். சகிப்புத்தன்மை குறைந்துவிடும்.

இவற்றையெல்லாம் பதின் பருவத்தின் இயல்பான மாற்றம் என்று எடுத்துக்கொள்ளாமல் கூடுதல் கவனம் செலுத்தலாம். வீட்டுக்குள்ளேயே இப்படி நடந்துகொள்ளும் குழந்தைகள் பள்ளியிலும் வெளியிலும் தங்களுக்கு இணையான அல்லது தங்களைவிட வயது குறைந்த குழந்தைகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடக்கூடும். தருணின் இந்த நடத்தை மாற்றத்தை அவனுடைய வீட்டினர் கவனிக்க மறந்ததுதான் அவனை மூர்க்கத்தின் உச்சிக்குக் கொண்டுசென்றது. வீட்டில் கொடுக்கப்பட்ட அதீத செல்லம், வீட்டில் தகுதியான ஆண் ரோல் மாடல் இல்லாதது, கண்டிக்க ஆளே இல்லாத நிலை இவையெல்லாம் சேர்ந்து தருணுக்குள் இயல்பாகவே இருந்த தான்தோன்றித்தனத்துக்குத் தீனிபோட்டன. தனக்கு ஒன்று வேண்டுமென்றால் அடுத்தவரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அவனை இழுத்துச்சென்றன. படிப்படியான ஆலோசனையும் குடும்பத்தினரின் அளவான அன்பும் கண்டிப்பும் அவனை இயல்புக்குக் கொண்டுவந்தன.

குடும்பத்தின் பொறுப்பு

வன்முறைக்கு ஆளாகிற குழந்தைகளிடமும் குறிப்பிடத்தகுந்த நடத்தை மாற்றம் ஏற்படும். கலகலப்பாக இருந்த குழந்தைகள் திடீரெனத் தனிமையை நாடுவார்கள். வீட்டில் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் மட்டும் தனியாக ஒதுங்கிவிடுவார்கள். எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள்.

உள்ளுக்குள்ளேயே முடங்கிவிடுவார்கள். சில நேரம் தங்களையே துன்புறுத்திக்கொள்வார்கள். தன்னம்பிக்கை குறைந்துவிடும். இவற்றை வைத்து குழந்தைகள் ஏதோவொரு வகையில் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை உணரலாம். குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுவதுதான் இவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கும் முதல் படி. பெற்றோரிடம் பேசத் தயங்கினால் அவர்களின் மரியாதைக்குரிய நபரிடம் சொல்லிப் பேசச் சொல்லலாம். பதின் பருவத்தில்தான் குழந்தைகள் மனத்தில் ஏராளமான கேள்விகளும் குழப்பமும் நிறைந்திருக்கும். அதனால் அந்த நேரத்தில் அவர்களிடம் நாம் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள் என்று உணர்ந்ததுமே எதிர்மறையாக அணுகாமல், அதனால் ஏற்படும் பாதகங்களைப் பொறுமையாகச் சொல்லி விளக்க வேண்டும். அவர்களால் குழந்தைகளின் மனமும் உடலும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். அதேபோல வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். யாருக்கும் அவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை அவர்கள் உணரும்படிச் செய்ய வேண்டும். சிலவற்றைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ முடியாவிட்டால் சரியான நபரிடம் புகார் சொல்லும் துணிச்சலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அந்தத் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் குடும்பம் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

(நிஜம் அறிவோம்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE