நீரோடிய காலம் 2: காவிரியின் கைவிரல்கள்

By ஆசை

தங்க. ஜெயராமன்! ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்று, அதன் பிறகு திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். ஆங்கிலப் பேராசிரியர் என்றாலும் அவர் அளவுக்குத் தஞ்சையை, அதன் பழைய மரபுகளைப் புரிந்துவைத்திருக்கும் வேறொருவரைக் காண்பது அரிது. ‘இந்து தமிழ்’ பத்திரிகையில் தஞ்சைக் கலாச்சாரத்தைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.

தங்க.ஜெயராமன் ஒரு விவசாயி என்பதால் மண், மரபு சார்ந்த நம் பயணத்தில் அவருடைய துணை பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.

காவிரியின் விரித்த கைவிரல்களுக்கு நடுவே குறுக்காக ஒரு பயணத்தை மேற்கொண்டு கொள்ளிடம் வங்கக் கடலில் சேரும் இடம் வரை செல்வது என்ற திட்டம்.
குடகு மலையில் உருவாகும் காவிரியின் நெடும் பயணத்தில் தஞ்சை டெல்டா என்பது குறைந்த அளவு தூரமே. ஆனால், இடைப்பட்ட எந்தப் பிரதேசத்திலும் இல்லாத அளவுக்கு, காவிரியின் கடைசிப் பகுதியான தஞ்சையில் மட்டும் இவ்வளவு வளத்தை காவிரி அள்ளிக்கொடுத்திருக்கிறதே, ஏன் என்று தங்க.ஜெயராமனிடம் கேட்டேன்.
“காவிரியின் நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்குச் சமவெளியான நில அமைப்பு தஞ்சைப் பகுதிக்குத்தான் அதிகம். காவிரி என்பது நீர் மட்டுமல்ல, அது தோன்றும் இடத்திலிருந்து வழியெல்லாம் திரட்டிவரும் வண்டலும்தான். அந்த வண்டல்தான் தஞ்சையில் காவிரி டெல்டாவை உருவாக்கி அதற்கு வளத்தையும் கொடுத்தது. இடையிடையே அணைகள் கட்டி, நீங்கள் தண்ணீரை விடலாம். ஆனால், தண்ணீரோடு வரும் வண்டலோ அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் ஏற்படும் இழப்பைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை” என்றார்.

அதுவரை துணை நதிகளின் நீரைச் சேர்த்துக்கொண்டு வரும் காவிரி தஞ்சை டெல்டாவுக்குள் நுழையும்போதுதான் அதிக அளவில்கிளைவிரித்து அதை டெல்டா
வாக ஆக்குகிறது. நில வரைபடத்தில் பார்த்தால் கைவிரல்கள் விரிந்து, விரல் நுனிகளெல்லாம் கடலைத் தொடுவதுபோல் இருக்கும். அந்த விரல்களுக்கு இடைப்பட்ட பரப்பெல்லாம் அன்று பொன்னாகப் பொலிந்தது. அதனூடாகத்தான் இந்தப் பயணம்.

கீழத்தஞ்சையின் கலாச்சாரத் தலைநகரான திருவாரூரிலிருந்து காரில் புறப்பட்டோம். “இவரு பத்திரிகைக்காரரு. அப்பப்ப கண்ணில் ஏதாவது பட்டு காரை நிறுத்தச் சொல்வாரு. அதனால பாத்து காரை ஓட்டுப்பா” என்று தன் ஓட்டுநரிடம் செல்லமாக உத்தரவிட்டார் தங்க.ஜெயராமன்.

வெண்ணாறு, காவிரி என்ற தஞ்சையின் இரண்டு பெரும் பாசனப் பரப்புகளை மட்டுமல்ல, தனிச்சிறப்பும் உள் கலாச்சார வேறுபாடுகளும் கொண்ட இரண்டு நிலப்பரப்புகளையும் உள்ளடக்கிய பாதையில்தான் எங்களின் அன்றைய பயணம். திருவாரூர் பகுதிக்கு வெண்ணாறு வழியாகக் கிடைக்கும் காவிரியின் நீர் வெகுவாகக் குறைந்துவிட்டதால் இன்று அப்பரப்பு பெருங்காயம் இருந்த பாண்டமாகக் காட்சியளிக்கிறது. மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் முந்தைய அளவுடன் ஒப்பிட முடியாதெனினும் இன்னும் ஓரளவு வளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவை. அப்பரப்புக்கு வரும்போது காவிரி அதிகம் பிரிபடாத நீர்ச்சொத்தைக் கொண்டிருப்பதுதான் இதன் காரணம்.

ஆடிப்பெருக்குக்கு முந்தைய நாள் அது!

திருவாரூரிலிருந்து புறப்பட்டு ஐந்தாறு கி.மீ. கடந்தபோது கங்களாஞ்சேரியில் வெட்டாற்றைக் கண்டோம். இதுதான் வெண்ணாறு பாசன அமைப்பின் வடக்குக் கடைசி ஆறு. அதைத் தாண்டினால் காவிரிப் பாசன அமைப்பு.

தாராளமாய் ஓடிவரும் நீரை நடுவே தடுத்தபடி நீர் நீதிபதியாக அங்கிருந்த ரெகுலேட்டர் தனக்கு முன்னிருந்த நிலப்பரப்பைப் பெருந்தோரணையுடன் ஏறிட்
டுப் பார்த்துக்கொண்டிருந்தது. இது 1912-ம் ஆண்டில்கட்டப்பட்டது. இன்னமும் திடமாய், வெள்ளைக்காரர்களின்நீர் மேலாண்மைப் பெருமையைப் பேசிக்கொண்டிருந்தது. ஆனால், அவர்களின் காலத்துக்குப் பிறகு பெரிதாய் ஏதும் வேலை நடந்ததுபோல் தெரியவில்லை. மொத்தம் 1957 ஹெக்டேருக்கு இந்த ரெகுலேட்டர் நீர் வழங்குவதாய் அதன் தகவல் பலகை தெரிவித்தது.

ஆற்று நீர் வானையும் மண்ணையும் அள்ளிக்கொண்டு துள்ளியும் தாவியும் ஓடினாலும் அதனோடு உறவாட, கதைகள் பேச மனிதர்களைப் பெரிதும் காணோம். கரையில் உட்கார்ந்து தூண்டில் போடும் சிறுவர்களையும் காணோம்.

மனிதர்கள் கண்டுகொள்ளவில்லையென்றால் ஆற்றைக் கோரைகளும் கருவை மரங்களும் கண்டுகொள்ளும். (மணல் கொள்ளையர்களும் கண்டு கொள்வார்கள்!) அவ்வளவு தண்ணீருக்கும் நடுவே குட்டித் தீவுக் காடுகளை வெட்டாறு நீரில்லாக் காலத்தில் வளர்த்துவிட்டு தற்போது நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது கொஞ்ச தூரத்திலேயே வறண்ட குளங்களும் குட்டைகளும் கண்ணில் பட்டன.
“ஆத்துல எல்லாம் தண்ணி வந்தும் ஏன் இந்தக் குளம் குட்டைகள் நிரம்பாம கிடக்கு?” என்று கேட்டேன்.
“காவிரி டெல்டாவுல நிறைய குளம் குட்டைகள், வாய்க்கால்கள், ஓடைகள், ஒருசில ஏரிகள் இருக்கும். வாய்க்கால்கள், வடிகால்கள் சரியாக இருந்திருந்தால் இப்போது ஆற்றுப் போக்கில் போகும் தண்ணீரை எல்லாம் இந்தக் குளம், குட்டைகளில் பிடித்து வைத்திருக்க முடியும். இது ஏதோ நான் கற்பனை செய்து கூறவில்லை. நான் சின்னப் பையனாக இருக்கும்போது மன்னார்குடியில் படித்துக்கொண்டிருந்தேன். ஜூன் 12-ல் மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்டால் அடுத்த ஆறாவது நாள் பாமணி ஆற்றில் தண்ணீர் வரும். தண்ணீ வந்து அடுத்த நாள் எல்லாக் குளத்துலயும் தண்ணீ பாய்ஞ்சுகிட்டு இருக்கும். கோப்பிரலயத்திலருந்து பொட்டயன்குளத்துலருந்து அத்தனை குளத்துக்கும் தண்ணீ பாய்ஞ்சுக்கிட்டுருக்கும். மேட்டூருல தண்ணீ திறந்துவிட்ட பத்தாவது நாள் நாங்க குளத்துல குளிப்போம். ஆனா, இப்போ இன்னும் இந்தக் குளத்திலெல்லாம் தண்ணீ வல்ல பாருங்க. ஆத்துல தண்ணீ வந்து நாலு நாளு ஆவுது. ஆனா, உலகப் புகழ்பெற்ற திருவாரூர் கமலாலயத்திலேயே இன்னும் தண்ணீ வல்ல பாருங்க. ஓடம்போக்கி ஆற்றிலிருந்துதான் அதுக்குத் தண்ணீ வரணும்.”

“அம்பது, அறுபதினாயிரம் கன அடி தண்ணீ கொள்ளிடத்துல போச்சு. இப்ப இந்தக் குளம் குட்டைகளோட கொள்ளளவெல்லாம் கூட்டிப் பாத்தீங்கன்னா கொள்ளிடம் வழியா கடல்ல கலந்த தண்ணிக்கு இணையா இருக்கும். உபரியா வர்றப்ப அந்தத் தண்ணியெல்லாம் தேக்கி வச்சாத்தான் எத்தனை டி.எம்.சி தண்ணியை நம்மால தேக்கிவைக்க முடியும்கறது தெரியும். எத்தனை குளம், குட்டை, ஏரி, வாய்க்கால் இருக்குன்னு பொதுப்பணித் துறைகிட்ட பெரிய லிஸ்ட்டே இருக்கும். ஆனா, அவங்க யாரும் தயாரா இல்லாத, யாரும் எதிர்பார்க்காத நேரத்துல தண்ணீ வந்து நான் இப்படியும் வருவேன் என்று காவிரி எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.”
“இந்தத் தண்ணியைத்தான் ஒழுங்கா நாம பயன்படுத்தலையே; அதனால இன்ப அதிர்ச்சின்னு சொல்ல முடியாதே?” என்று கேட்டேன்.

“அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், 60 ஆயிரம் கன அடி தண்ணீர் பயன்படுத்தப்படாமல் கடல்ல போய்க் கலந்துடுச்சு. ‘கடல்ல போய் வீணா தண்ணீ கலக்குது’ அப்படின்னு விவசாய சங்கத்தைச் சேர்ந்தவங்க வழக்கமா சொல்வாங்க. பத்திரிகைகள்லயும் அப்படித்தான் எழுதுவாங்க. இன்னொரு பக்கம் ‘கடல்ல தண்ணீ கலக்குறது முக்கியம். அதனால, வீணாக் கலக்குதுன்னு சொல்லக் கூடாது’ன்னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேசுவாங்க. உண்மை என்னன்னா, நிலத்துக்குத் தேவையான தண்ணீர் நிலத்துக்கும் கடலுக்குத் தேவையான தண்ணீர் கடலுக்கும் கிடைத்தாகணும். அப்படிக் கிடைக்கலன்னா அதுதான் வீண்” என்றார் தங்க.ஜெயராமன்.

தங்க.ஜெயராமன் கூறுவது சரிதான். தண்ணீரைப் பெறுவது நமது உரிமைதான், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் தண்ணீரைக் காப்பாற்றுவதும் நம் கடமைதானே! உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்றால் இருக்க முடியாது.

நம் கடமைகளையும் உரிமைகளையும் நாம் நினைவில் வைத்திருக்கிறோமோ இல்லையோ, தஞ்சை மண்ணின் அனைத்து ரத்த நாளங்களிலும் தண்ணீர் ஓடும் காலத்தில் ஒருவர் அந்த மண்ணின் ஊடாகப் பயணிக்கும்போது ‘இது தண்ணீர் தேசமோ!’ என்று அதிசயிக்கும் அளவுக்கு அற்புதங்களை நிகழ்த்துபவள் காவிரி. நம் பயணத்தின்போது பல இடங்களில் அதை உணர முடிந்தது.

காவிரி மண்ணைக் கண்ணாலும் சொல்லாலும் அளந்தபடி போய்க்கொண்டே இருந்தபோது மயிலாடுதுறைக்கு இன்னும் 25 கி.மீ. என்ற மைல்கல் கண்ணில் பட்டது!

(சுற்றுவோம்...)

-ஆசை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE