நானொரு மேடைக் காதலன் - 11

By நாஞ்சில் சம்பத்

தென்பொதிகைத் தென்றல் தெம்மாங்கு பாடும் தென்காசி நகருக்கு ஈடில்லா பெருமையை ஈட்டித் தருவது தென்காசி திருவள்ளுவர் கழகம். தென்காசி திருவள்ளுவர் கழகம் தென் தமிழகத்தின் சங்கப் பலகையாகக் காட்சியளித்தது. ஆண்டு தோறும் மாணவர்களுக்கு என்று நடைபெறும் திருக்குறள் சம்பந்தமான பேச்சுப் போட்டிகளில் பத்து ஆண்டுகள் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவன் என்ற தகுதி எனக்கு உண்டு. 

முத்திரைத் தலைப்புகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களைப் பேசவைத்து அழகு பார்க்கிற தென்காசி திருவள்ளுவர் கழகம்தான் பேச்சுலகில் அடியெடுத்து வைக்க கருவறையாய் அமைந்தது. பரிசு வாங்குகிற சாக்கில் எனது சித்தப்பா நாராயணன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து திருவள்ளுவர் கழக நிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் கேட்பேன். சிலம்புச் செல்வர் ம. பொ. சி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், கம்பனடிப் பொடி சா.  கணேசன், சென்னை கம்பன் கழகத் தலைவர் நீதி அரசர் எம். எம். இஸ்மாயில், திருக்குறளார் வி. முனு சாமி, பெரும்புலவர் பா. நமசிவாயம், திருமதி இரா. காந்திமதி, திருமதி சரசுவதி இராமநாதன், திருமதி இளம்பிறை மணிமாறன், பேராசிரியர் எட்டயபுரம் கு. துரைராஜ், பெரும்புலவர் கடலூர் நடேச முதலியார், பொ. ம. இராசமணி, நாஞ்சில் நெடுமாறன் போன்ற தன்னேரிலாத் தமிழ் அறிஞர்களின் முத்திரைப் பேச்சு களை சித்திரை நிலவாய் உட்கார்ந்து கேட்டதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.  

திருவள்ளுவர் கழக விழா என்றாலும் வான்புகழ் வள்ளுவனோடு சங்ககாலத் தமிழ் முதல் சமகாலத் தமிழ் வரை ஒப்பிட்டு அறிஞர் பெருமக்கள் தரும் உரைகள் உண்ண உண்ணத் தெவிட்டாத தாய்முலைப் பாலாய் உள்ளத்திற்கு உரமூட்டும். அறிவிற்கு பட்டை தீட்டும். தமிழ் கேட்பதில் தென்பாண்டித் தமிழர்கள் காட்டுகிற உறவு புளியம் பழத்துக்கும் ஓட்டுக்கும் இருக்கிற உறவு அல்ல. வானத்துக்கும் சிறகுக்கும் இருக்கிற உறவு. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் ஒருமுறை உரை
யாற்றுகிற வாய்ப்பை ஒருவர் பெற்றுவிட்டால் எந்த மேடையும் அவருக்கு எளிதாகிவிடும். தமிழ்நாட்டில் இருக்கிற  இயங்குகிற இலக்கிய அமைப்புகளில் புகழ் பூத்தது மட்டுமல்ல; தென்காசி திருவள்ளுவர் கழகம் காலத்தால் மூத்ததும் ஆகும். சீலத்தால் சிறந்த அதன் தலைவர் கணபதியப்பனும் செயலாளர் சிவராமகிருஷ்ணனும் கர்மயோகிகள். பெற்ற குழந்தையைப் பேணி வளர்க்கும் தாயைப் போல தென்காசி திருவள்ளுவர் கழகத்தைப்  பேணி வளர்க்கும் கணபதியப்பனும் சிவராமகிருஷ்ணனும் வான்புகழ் வள்ளுவம் தழைக்கவும் பிழைக்கவும் ஆற்றி வரும் தொண்டு, ஆண்டுக்கு ஆண்டு பொன்னாய் மின்னுகிறது. பூவாய் மலருகிறது. நிகழ்ச்சிக்கு வடிவம் தருவதில் தலைப்புகளைத் தேர்வு செய்வதில் கால நேரத்தை நிர்ணயிப்பதில் அவர்கள் காட்டுகிற கரிசனம் நிகழ்ச்சியின் வெற்றிக்குக் கட்டியம் கூறும். 

திருவள்ளுவர் கழகத்தின் எழுபத்தைந்தாவது பவள விழாவில் வள்ளுவத்தின் விசாலத்தை அளந்து பார்க்கிற சுழலும் சொல்லரங்கில் பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலக்கிய மேடைகளில் பிறை பல கண்ட பேராசிரியர் திருப்பத்தூர் பா. நமசிவாயம் தலைமையில் நிகழ்ந்தது சுழலும் சொல்லரங்கம். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அந்தத் தலைப்பின் அடியும் முடியும் கண்டு மண்ணும் விண்ணும் பார்த்து நெருடலே இல்லாமல் நேர்த்தியாக அணி செய்வதில் பேராசிரியர் நமசிவாயத்துக்கு ஈடு இணை யாருமில்லை. தானாக வந்து விழும் நகைச்சுவையும் தேனாகத் தித்திக்கும் துணுக்குத் தோரணமும் கேட்பவரை மயங்க வைக்கும். 

வான் புகழ் வள்ளுவத்தை அதிகம் எடுத்தாண்ட இலக்கியம் சிலப்பதிகாரமா, மணிமேகலையா, சீவக சிந்தாமணியா, கம்பராமாயணமா, பாரதியமா? என்பது சுழலும் சொல்லரங்கின் தலைப்பு. நாடறிந்த கற்றறிந்த பேராசிரியர்கள் விவாதித்த சுழலும் சொல்லரங்கில் அடியேனுக்கு வாய்த்த தலைப்போ கம்பராமாயணம். பிசிறு தட்டாத குரலில் பிச்சிப் பூவை ஆரமாகக் கோத்ததைப் போல பேராசிரியரின் முகவுரை அமைந்தது. எந்தப் பேராசிரியர் தலைமையில் பேச வேண்டும் என்று கனவுகளை வளர்த்துக்கொண்டேனோ, அந்தப் பேராசிரியரின் தலைமையில் பேசக் கிடைத்த பேறு பெரும் பேறு என்று நினைத்து மகிழ்ந்தேன். “வான்புகழ் வள்ளுவத்தை வழிமொழியாத எந்தப் படைப்பாளனையும் பார்க்க முடியாது. ஏதாவது ஒரு இடத்தில் வள்ளுவன் ஒரு படைப்பாளனைப் பாதித்து விடுகிறான். மன்னா உலகில் மன்னுதல் குறித்து சிந்தித்தவர்கள் வள்ளுவனையும் கம்பனையும் கடந்து வர வேண்டும் என்பது கட்டாயம்... தமிழுக்குக் கதியாக வாய்த்தவர்கள் கம்பனும் திருவள் ளுவனும்தான். வான் புகழ் வள்ளுவத்தைப் பொன்னே போல் போற்றியவர்களில் முதல் இடத்தில் இருப்பவன் கம்பன்தான். தித்திக்கும் திருக்குறளின் தேர்ந்த சொற் களையும் பொருள்களையும் கண்டறிந்து, தான் இயற்றிய காப்பியத்தில் அழகுபட இழைத்ததில் கம்பன் கண்ட வெற்றியை யாரும் கண்டதில்லை.

தென்னிலங்கைத் தீவில் சிறையிருந்த சீதை தனது குறையையும் இராமனின் நிலையும் எண்ணி எண்ணிக் கலங்குகிறாள். கானகத்தில் தங்கியிருக்கும் என் கணவ னுக்கு உண்ணும் படி அறிந்து உணவளிப்பவர் யார்? அவரைத் தேடியும் நாடியும் வருபவர்களை வரவேற்று உபசரிக்க மனைவி இல்லாத நிலையில் அவர் எப்படித் தயங்குவாரோ என்று எண்ணி மயங்குகிறாள் சீதை. ‘அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்றழுங்கும் விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும் மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும் இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டு எழாதாள்’ என்று பாடிய கவிதையில் ‘தற்காத்து தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்ற குறள் எதிரொலிக்கிறது. உற்றாரும் உறவினரும் விருந்தினர் அல்லர். ஒரு வகை யிலும் தொடர்புடையவரல்லர். அதிதிகளே விருந்தினர் ஆவர். ‘வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று’ விருந்துக்கு வள்ளு வர் வரையறை வைக்கிறார். இந்தக் குறளைக் கம்பன் ‘பெருந்த டங்கண்பி றைநுத லார்க்கெல்லாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்து மன்றிவி அளவன யாவையே’ என வள்ளுவனைப் பின்பற்றிப் பாடுகிறான்.

தன் மகன் சான்றோன் என்ற சொல்லைக் கேட்கும் போது அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட பெரு மகிழ்ச்சி அடைவாள் என்பதைச் சொல்ல வந்த திருவள்ளுவர் ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்கிறார். நீண்ட நெடுங்காலம் பிள்ளைப் பேறின்றி தசரதச் சக்கர வர்த்தி வாடி வருந்தினான். வாழையடி வாழையென வந்த தன் குலம் தன்னோடு முடிந்துவிடுமோ என்று கவலைப்பட்டான். இராமனைப் பெற்றதால் அவன் கவலைக்கு முடிவு ஏற்பட்டு மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவதை ‘மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும் நொந்தனன் இராமன்அந் நோவை நீக்குவான் வந்தனன்’ என்று கம்பன் பாடி பதிவு செய்கிறான்.  

மண்ணாளும் வேந்தனும், மந்திரிகள் சொல்லும் மாறுபட்ட கருத்துகளை அக்கறையோடு கேட்டு அறிவினால் ஆய்ந்து பார்க்கும் பண்பினராய் இருத்தல் வேண்டும் ‘ செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ் தங்கும் உலகு’ என்று வள்ளுவன் சொன்னதை ‘உம்மையான் உடைமையின் உலகம் யாவையும் செம்மையின் ஓம்பிநல் லறமும் செய்தனன்’ என்று கம்பன் அப்படியே வழி மொழிகிறான். மாறுபட்ட கருத்தை மதிக்கும் குணம் தென்னிலங்கை வேந்தனுக்கு  இல்லை. தவறான வழியில் தறி கெட்டு நெறி கெட்டு மன்னவன் பயணித்தால் இது தகாத வழி என்று தடுத்து நிறுத்த மந்திரிகள் தயாரில்லை. இதைச் சினத்துடனுடம் சீற்றத்துடனும் சீதை பேசுவதாக கம்பன் சித்தரிக்கிறான். ‘கடிக்கும்வில் லரவம்கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை அடுக்கும்ஈ தடாதென்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி இடிக்குநர் இல்லை; உள்ளர் எண்ணிய தெண்ணி  உன்னை முடிக்குநர் என்ற போது முடிவின்றி முடிவ துண்டோ?’ என்ற பாட்டை, ‘ இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்’ என ஏற்கெனவே வள்ளுவன் சொல்லி வைத்தான். 

கங்கை வேடன் குகனை தம்பியாக இராமன் ஏற்றுக் கொண்டதும் வேறுபாடுடைய சுக்ரீவணனும் விபீடணனும் தோழமை கொண்டதும் ‘புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்’ என்ற திருக் குறளைச் சிந்திக்க வைக்கிறது. கண்ணும் காதலும் பிரிவும் பரிவும் என்று யோசிக்கிறபோதெல்லாம் வள்ளுவனும் கம்பனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். வள்ளுவனைப் பின்பற்றிக் கவிதை  புனைந்ததில் கம்பனே முந்துகிறான். முதலிடத்தில் இருக்கிறான். இன்னும் விரித்தால் பெருகும்.

தொகுத்தால் எஞ்சும். நன்றி. வணக்கம்!’’ என்று சொல்லி முடித்தேன். அப்போது பேராசிரியர் பா. நமசிவாயம் அவர்கள் “அந்தி மாலை வந்ததே தெரியவில்லை. அந்தி மாலையை மறக்கச் செய்த சம்பத்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்’’ என்று அங்கீகரித்த போது வானமே வாழ்த்தியதாகப் பரவசமானேன்.
(இன்னும் பேசுவேன்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE