எந்தச் சூழலிலும் இவர் என்னை நல்லா பாத்துப்பார்- கடவுளின் தேசத்தில் ஒரு காப்பியத் தம்பதி!

By காமதேனு

என்.சுவாமிநாதன்

திருவனந்தபுரத்தை அடுத்த களக்கூட்டத்தில் உள்ள தனியார் மேஜிக் கூடத்தில்தான் முதன் முதலில் ஷிகாப்தீனைச் சந்தித்தேன். கை, கால்கள் முற்றாக இல்லை. அதிநவீன வீல்சேரின் துணையோடுதான் வலம் வருகிறார். கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையை கைவிடாத அந்த மனிதர் அட்டகாசமாய் ட்ரம்ஸ் அடிக்கிறார். அழகாய் வண்ணம் தீட்டுகிறார்!

கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும், மலையாள முன்னணி நடிகர்களிடமும் தனது தனித்திறமையால் பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்து வருகிறார் ஷிகாப்தீன். இரண்டு அடி உயரமே கொண்ட ஷிகாப்தீனின் சாதனை மலையளவு உயரம். அந்தச் சாதனைக்கு அவருக்குக் கிடைத்த அன்புப் பரிசு மனைவி ஷகானா பாத்திமா.

கேரளம் கொண்டாடும் கலைமகன் ஷிகாப்தீனுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தற்போது, களக்கூட்டத்தில் உள்ள கேளிக்கை மையமான மேஜிக் பிளானட்டில் பணி செய்கிறார். அங்குதான் இந்தத் தம்பதியைச் சந்தித்து வியந்தேன். ஷிகாப்தீன் வீல்சேரில் வர, அவரை அவதானித்துக் கொண்டே உடன் வருகிறார் மனைவி ஷகானா பாத்திமா. ஒரு தாய் தன் குழந்தையைப் பார்ப்பது போன்ற பரிவும், அன்பும் அவரிடம் இருந்து வெளிப்படுவதை உணர முடிந்தது. ஷிகாப்தீன் என்னிடம் பேசத் துவங்குகிறார். “என்னோட அப்பா அபுபக்கர் டீக்கடை வச்சுருந்தாங்க. அம்மா மெக்ஜாபி இல்லத்தரசிதான். மூணு ஆணும், நாலு பெண்ணுமா எங்க வீட்ல மொத்தம் 7 பிள்ளைங்க. நான் வீட்டுக்கு அஞ்சாவது பிள்ளை. மிடில் கிளாஸ் குடும்பம். பிறக்கும்போதே எனக்கு கையும், காலும் இல்லை. அதுக்காக என் வீட்ல எம்மேல எந்தப் பாகுபாடும் காட்டல. எல்லா பிள்ளைகளையும் போலத்தான் என் அம்மா என்னையும் வளர்த்தாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE