அரியநாச்சி 10- வேல ராமமூர்த்தி

By காமதேனு

சுத்தி வளர்ந்த அவரைக்கொடி

வீட்டு முற்றத்தில் பரப்பி இருக்கும் பரிசத் தட்டு, தாம்பாளங்களைச் சுற்றி அமர்ந்திருந்த பெரிய ஆம்பளைகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சாப்பிட்ட பந்திச் சாப்பாடு கண்ணைச் சுழற்றுது.
“சட்டுப்புட்டுனு பருசத்தைப் போட்டு முடிச்சா வீட்டைப் பாத்துப் போயிப் படுக்கலாம்லேப்பா” என்று கொட்டாவி விட்டார்கள்.
கல்யாண மாப்பிள்ளை கருப்பையா, புதுச் சட்டை வேட்டியில் இருந்தான். மாப்பிள்ளைத் தோழனாய் மூக்குறிஞ்சி, கருப்பையாவை ஒட்டி அமர்ந்திருந்தான். ஊர் இளவட்டங்கள் எல்லாம் வெள்ளாங்குளம் வண்டிப் பாதைக் காவலுக்குப் போய்விட, பரிசம் போடுற இடத்திலே ரெண்டே ரெண்டு இளவட்டங்கள்தான். கருப்பையாவும் மூக்குறிஞ்சியும்.
உள்வீட்டுப் பொம்பளைகளைப் பார்த்து, “ஏம்மா நல்ல நேரம் தப்பப்போகுது. பொண்ணைக் கூட்டிட்டு வாங்கம்மா” கோவிந்தத் தேவர் விரசினார்.
தாழ்வாரத் திண்ணைப் பெண்களோடு இருந்த முனியாயி, “நீங்க ஆம்பளைக… இங்கே இருந்து கத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அங்கே பொண்ணுப்புள்ள வர மாட்டேன்ங்கிறா…” அவிழ்த்துவிட்டாள்.
மாப்பிள்ளை கருப்பையாவோடு சேர்ந்து, முற்றத்து ஆம்பிளைகளுக்கு ‘கெதக்’ என்றது.
“என்னதூ… பொண்ணு வர மாட்டேங்குதா…” மையமாய் அமர்ந்திருந்த கோவிந்தத் தேவர், “பாண்டிப் பயலை எங்கே?” கண் துழாவினார்.
மேற்கே, தரைச்சேலை விரிப்பில் நடந்துகொண்டிருந்த சாப்பாட்டுப் பந்தியில் பாண்டியும் குமராயியும் பரிமாறிக்கொண்டு திரிந்தார்கள்.
“ஏப்பா பாண்டி… இங்கே வா.”
குழம்பு வாளியை மனைவி குமராயியிடம் கொடுத்துவிட்டு, முற்றத்துக்கு வந்தான் பாண்டி. “சொல்லுங்க சின்னைய்யா.”
“பொண்ணுப்புள்ள வர மாட்டேங்குதாம்லே…” கோவிந்தத் தேவர், பாண்டியிடம் சொன்ன வார்த்தை, சாப்பாட்டுப் பந்தியில் நின்ற குமராயியின் காதில் விழ, கை வாளியை நின்ற இடத்திலேயே வைத்துவிட்டு வந்தாள்.
“என்னதூ…” வேட்டியை மடித்துக் கட்டிய பாண்டி, உள்வீட்டை நோக்கிப் போனான். பின்னால் தொடர்ந்து வந்த மனைவி குமராயியைக் கைகாட்டி, “நீ உள்ளே வராதே…” தடுத்து நிறுத்தினான்.
உள்வீட்டுக்குள் எல்லாப் பெண்களும் இருந்தார்கள். மாயழகியையும் வள்ளி அத்தையையும் காணோம்.
பாண்டியின் தலையைக் கண்ட சோலையம்மா கிழவி, “மாயழகியைக் கூட்டிக்கிட்டு வள்ளி, கொல்லைப் பக்கம் போறா” என்றாள்.
வெள்ளாங்குளம் பாதையில் வெகு தூரத்தில் வரும் வண்டி மாடுகளின் கழுத்து மணிச் சத்தம் கேட்டது.
‘ஞணங்ங்ங்….ணங்ங்ங்… ணங்ங்… ணங்… ணங்… ணங்…’
‘ஞணங்ங்ங்….ணங்ங்ங்… ணங்ங்… ணங்… ணங்… ணங்…’
புதர்களில் பதுங்கியிருந்த இளவட்டங்கள் எல்லோரும் கைகளில் ஆயுதம் தரித்திருந்தார்கள். வேல்கம்பு, வாள், வீச்சரிவாள், குத்துக்கம்பு, கொடுக்கரிவாள். பார்வை எல்லாம் பாதை மேலேயே இருந்தது. பாய்ச்சலுக்குக் கச்சைகட்டி, கை துறுதுறுத்து நின்றார்கள்.
இளவட்டங்களிடம் அமிழ்ந்த குரலில் கேசவன் சொன்னான். “வண்டிக… பெருவாரியாதான் வருதுன்னு நெனைக்கிறேன்.”
“பத்துப் பதினஞ்சு வண்டிக இருக்கும். வண்டிக்கு அஞ்சு பேர்னாலும்…. அம்பது அறுபது பேருக்கு மேலே வருவான்ங்க போல்ருக்கு.”
“நம்ம இருபது முப்பது பேர்தான் இருக்கோம். ஜெயிச்சிறலாமா?”
“எண்ணிக்கையா பெருசு? எறங்கி அடிப்போம். வாய்ச்சா  நமக்கு. வாய்க்காட்டிப் பிள்ளையாருக்கு.”
“ஊரு விட்டு ஊரு வந்து ஜெயிச்சுட்டுப் போயிருவான்ங் களாக்கும். ஆளுக்கு நாலு பேரைப் போடுவோம். கணக்கு சரியா போயிரும்.”
எல்லோருக்கும் கேட்கும்படி கேசவன் சொன்னான். “டேய்ய்… அவன்ங்க எத்தனை பேரு வந்தாலும் சரி. ஏறி அடிங்க. வளைச்சு வளைச்சு வெட்டுங்க. எத்தனை பொணம் விழுந்தாலும் சரி. நம்ம கைதான் முந்தணும்.”
வண்டி மாட்டுக் கழுத்துமணிச் சத்தம் நெருங்கி வந்துகொண்டிருந்தது.
கொல்லைப் பக்கம் மாயழகியை அழைத்து வந்திருந்தாள் வள்ளி அத்தை. ஒருவர் முகம் மற்றவருக்குத் துலங்கத் தெரியும் பெளர்ணமி நிலா வெளிச்சத்துக்குள் நுழைந்ததுமே வள்ளி அத்தையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள் மாயழகி. “அத்தை… அத்தை…” சப்தம் வெளியே கேளாமல் அழுதாள்.
மாயழகியை மார்போடு அணைத்துக்கொண்ட வள்ளி அத்தை, ‘ஏன் அழுகிறே? எதுக்கு அழுகிறே?’ன்னு ஒரு வார்த்தை கேட்கலெ. தன் மார்புக்குள் புதைந்திருந்த மாயழகியின் முகத் தாடை தொட்டுத் தூக்கினாள்.
“எங்கக்கா வரணும்… அரியநாச்சி அக்கா வரணும்” கண் திறக்காமலே பேசினாள் மாயழகி. “எங்கக்கா வரலேன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்.”
மாயழகியின் தலையைக் கோதி விட்டாள் வள்ளி அத்தை.
உள்வீட்டுக்குள் நுழைந்து வந்த பாண்டியின் தலை, கொல்லை வாசலில் தென்பட்டதும் மாயழகி யை இழுத்துக்கொண்டு கூரை நிழலுக்குள் பதுங் கினாள் வள்ளி அத்தை.
கொல்லைப் பக்கம் தலை நீட்டித் தேடினான்.
முற்றத்துப் பக்கம் இருந்து சப்தம் கேட்டது. “பொண்ணைத் தூக்கிட்டுப் போக வெள்ளாங் குளத்தான்ங்க வண்டி கட்டி வந்துக்கிட்டு இருக் கான்ங்க…” ஒரு இளவட்டம் கத்தினான்.
“என்னதூ…” உள்வீடு தாண்டி, முற்றத்துக்கு வந்தான் பாண்டி.
ஓடி வந்து தாக்கல் சொன்ன இளவட்டத்தைப் பார்த்து, “என்னடா சொல்றே?” பதற்றமில்லாமல் கேட்டார் கோவிந்தத் தேவர்.
“வெள்ளாங்குளத்துப் பாதையிலே பத்து பதினஞ்சு வண்டிக வருது!”
மொத்தக் கூட்டமும் பரபரத்தது. கருப்பையா, விருட்டென எழுந்து, வேட்டியை மடித்துக் கட்டி னான். கிழடுகளைத் தவிர்த்துப் பெரும்பாலான ஆம்பளைகள் எழுந்து நின்றார்கள். தாழ்வாரத்துப் பெண்கள், முகவாய்க் கட்டையில் கை வைத்து, முற்றத்தையும் உள்வீட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“நான் சொன்னேன்லெ சின்னையா… இந்தா வந்துட்டான்ங்கல்லே! வெள்ளாங்குளத்தான்ங்க சேதி தெரியாம பேசுனீகளே!” பாண்டி நிலை கொள்ளாமல் தவித்தான்.
“ஏய் பாண்டி! பொறுப்பா. வரட்டுமே. அவன்ங் களும் நம்ம சம்பந்தகாரன்ங்கதானே! நல்லா வரட்டும். வந்து நம்ம வீட்டுப் பருசச் சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டுப் போகட்டும்” அலுங்காமல் சொன்னார் கோவிந்தத் தேவர்.
கூட்டத்துக்குள்ளே இருந்த ஒரு பெருசு, “ஏங் கோவிந்தா… அவன்ங்க கச்சைகட்டி சண்டைக்கு வந்துக்கிட்டிருக்கான்ங்க. நீ பாட்டுக்கு லேசா பேசுறே. வந்து… ஒண்ணு இல்லாட்ட ஒண்ணு ஆகிப்போச்சுன்னா ஊருக்குக் கேவலம் இல்லையா?” என்றார்.
“எனக்கென்னமோ சக்கரை, இந்தக் கோப்பு எடுத்து வருவான்னு படலெ. ஒண்ணு செய்வோம்…” என நிறுத்தினார் கோவிந்தத் தேவர்.
ஆணு பொண்ணு அத்தனையும் கோவிந்தத் தேவர் வாயையே பார்த்தது.
“பொண்ணைக் கட்டுற போட்டியிலேதானே வர்றான்ங்க? அவன்ங்க வர்றதுக்குள்ளே கருப்பையாவுக்குப் பருசத்தைப் போட்டுருவோம். பருசத்தைப் போட்டாச்சுன்னா பொண்ணு அவன் பொண்டாட்டி. அடுத்தவன் பொண்டாட்டியை ஆப்பநாட்டான் எவனும் சிறை எடுக்க மாட்டான்” என்று சொல்லி நிறுத்தியவர், சபையை ஒரு சுற்று பார்த்துவிட்டு, “என்ன நான் சொல்றது?” என்றார்.
“அதுவும் நல்ல ரோசனைதான். சட்டுப்புட்டுன்னு பருசத்தைப் போடுங்க.”
“ஏய்… பொண்ணைக் கூப்புடுங்கம்மா…”
“பொண்ணு இனிமே சீவி சிங்காருச்சு எந்நேரம் வர? பொண்ணெல்லாம் வேணாம். போடு பருசத்தை.”
“எல்லாம் ஒக்காருங்கப்பா…” கோவிந்தத் தேவர், சபையைக் கையமர்த்தினார்.
அரியநாச்சி, கால் நீட்டி அமர்ந்து, சுவரில், முதுகோடு தலை சாய்த்து, கண் திறக்காமல் அழுது அழுது நீந்து கொண்டிருந்தாள்.
“ஏன் ஒத்தப் பெறப்பு… பெத்த தாய் மொகம் பார்க்காத பச்சமண்ணு… அக்கா அக்கான்னு ஏன் இடுப்பை விட்டு எறங்காம என்னைச் சுத்தி வளர்ந்த அவரைக்கொடி… ஏந் தங்கச்சி மாயழகியை ஏங்கிட்டே இருந்து அறுத்து எறியிறான்ங்களே…”
கண்ணும் முகமும் வீங்கிப்போயிருந்தது. வீட்டில் சக்கரைத் தேவனைக் காணோம். சோலையைக் காணோம். ஒத்தையில் இருக்கிற அரியநாச்சிக்கு பூவாயி கிழவி காவல் இருந்தாள்.
“ஓந் தங்கச்சி மாயழகி தலையிலே என்ன எழுதியிருக்கோ… அதுதான் நடக்கும். அதுக்காக நீ ஏன் அன்னந்தண்ணி எடுக்காமல் அழுது அழுது நீந்துபோறே?”
தட்டு நிறைய சோற்றைப் போட்டு அரியநாச்சிக்கு முன்னால் வைத்து, “நீ செய்யிறது சரி இல்லடீ… பட்டினியாக் கெடக்கிறது நீ மட்டுமில்லே. உன் வயித்துக்குள்ளே ஒண்ணு இருக்கே அதுவும் சேர்ந்தில்லே பட்டினியாக் கெடக்கு…” சோற்றைப் பிசைந்து, “ஏன் ஆத்தால்லே… ஒரு வாய் சாப்பிடுத்தா… இந்தா…” அரியநாச்சியின் வாயோரம் கொண்டுபோனாள். உதடு பிரிக்காமல் கண்களையும் மூடிக்கொண்டாள்.
“ஏய்… மாப்பிள்ளையோட தகப்பன் மலையாண்டி எங்கே இருக்கே?”
“இந்தாதான் இருக்கேன்” கருப்பையாவின் தகப்பனார் மலையாண்டி, வெளுத்த வேட்டி சட்டையில் இருந்தார்.
“ஏம்மா… மாப்பிள்ளைக்காரி யாரும்மா? வந்திருக்கயா?”
“நான் இங்ஙனதான் இருக்கேன்” மலை யாண்டியின் கூடப்பிறந்த தங்கச்சி, மேல் சேலையை இழுத்து மூடினாள்.
சம்மணமிட்டு அமர்ந்திருந்த கோவிந்தத் தேவ ரின் முன், ஒரு வெண்கலக் கும்பா. கும்பாவில் செவேர்னு, ஆரத்திக் கலவை. வலது கை விரல் களில் ஒத்த ரூபாய் காசு.
மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டு, பாண்டி அமர்ந்தான். பெண்கள் எல்லாம் குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“பருசம் போட்டுறலாமா?”
பாண்டியும் மாமன் மலையாண்டியும் தலை ஆட்டினர்.
ஆரம்பித்தார் கோவிந்தத் தேவர். “என்னப்பா மலையாண்டி… தட்டு, தாம்பாளங்களோட வந்தி ருக்கீகளே… என்ன வெவரம்?”
“ஏம் மகன் கருப்பையாவுக்கு மச்சான் வெள் ளையத் தேவரோட இளைய மகள் மாயழகியைப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம்.”
“என்னப்பா பாண்டி… ஓந் தங்கச்சியைப் பொண்ணு கேட்டு வந்திருக்காக. பொண்ணைக் குடுக்க ஒனக்கு சம்மதமா?”
பாண்டி தலை ஆட்டினான். “சம்மதந்தான்.”
மாப்பிள்ளைக்காரியைப் பார்த்து, “ஒனக்கு இந்தக் கல்யாணத்திலே சம்மதம்தானா? பருசத்தை போட்டுறலாமா? பின் துயர்ச்சி ஏதும் உண்டா?” என்றார்.
“மாப்பிள்ளை பொறுப்புக்கு வாகை மரத்துப் புஞ்சையை எங்கண்ணன் எழுதிக் குடுத்துட்டாரு. பின் துயர்ச்சில்லாம் ஒண்ணும் கெடையாது. பருசம் போடலாம்” மாப்பிள்ளைக்காரி, மறுபடியும் இழுத்துப் போர்த்தினாள்.
கொல்லைப் பக்கத்துக் கூரை நிழலில் பதுங்கி நின்ற வள்ளி அத்தையும் மாயழகியும் முற்றத் துச் சத்தத்துக்குக் காதுகொடுத்துக்கொண் டிருந்தார்கள்.
(சாந்தி... சாந்தி...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE